மீன்வளர்ப்பு - மத்திய அரசுத் திட்டங்கள்
நமது நாட்டில் குளங்கள், அகழிகள், ஆறுகள், கணவாய்கள், ஊரணிகள், ஏரிகள் போன்ற பலவகை நீராதாரங்கள் இருக்கின்றன. இதன் மூலம் நமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள மீன் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், அன்னியச் செலாவனியைப் பெருக்கவும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இவ்வளங்களைப் பயன்படுத்துதல் பெரிதும் உதவும். இதற்காக மத்திய அரசு நிதி உதவி செய்து “நன்னீர் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத்திட்டத்தை” செயல்படுத்தி வருகிறது. இது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 10 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மொத்தம் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.135 கோடி. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன
- நன்னீர் மீன்வளர்ப்பு மேம்பாடு
- உவர்நீர் மீன்வளர்ப்பு மேம்பாடு
- குளிர்நீர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு
- நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரித்தல்
- மீன் வளர்ப்பிற்கு ஏற்றவாறு மண்ணின் காரத்தன்மையை சரிசெய்தல்
- ஆறு ஏரிகள் போன்ற நன்னீர் மீன்பிடிப்புப் பகுதிகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு போன்றவை
இத்திட்டத்திற்கு மத்திய அரசினால் 75 சதவீதமும், மாநில அரசுகளால் 25 சதவீதமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தொழிலாளர்கள் மேம்பாட்டு நிறுவனம் (எப். எப். டி. ஏ)
நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் உவர்நீர் மீன் வளர்ப்பு என்ற இரு பகுதிகளை செயல்படுத்தி வருகிறது. மீதம் உள்ள நான்கு பகுதிகளை அந்தந்த மாநிலங்களின் மீன் வளத்துறை அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஊதியச் செலவு, போக்குவரத்து, தேவையான இடவசதி, அலுவலகம் போன்ற அனைத்துச் செலவீனங்களையும் மாநில அரசே ஏற்க வேண்டும். ஏதேனும் வாகனங்கள் வாங்கி இருப்பின் அதற்குரிய தொகையை மத்திய அரசு 50 சதவீதம் ஏற்றுக்கொள்ளும்.
இத்திட்டத்திற்கு ஒரு முறை மட்டுமே (முதல் முறை) மானியம் வழங்கப்படும். இந்திய அரசின் செயல்பாட்டுத் திட்ட விதிகளின் படி இவ்வுதவிகள் அளிக்கப்படும். மகளிர் குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், மீன் வள கூட்டுறவு சாலைகள், போன்றவர்களுக்கு மட்டும் கூடுதல் நிதி உதவி அளிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் மீன்வளத்துறை மூலமாக கடனுதவிகள் செய்து மீன் வளர்ப்பை ஊக்குவிக்கலாம்.
மீன் வளர்ப்புத் தொழிலாளர் மேம்பாட்டு ஆணையம் மூலம் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைவோர்க்கு சிறிது மானியம் அளிக்கலாம். ஆனால் வளர்ப்பாளர்கள் உபகரணத் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் செயல்படுத்தப்பட்ட திட்ட நடவடிக்கைகள், செயல் முறைகள் பற்றி மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஓர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை மத்திய அரசின் தனிக்கை அலுவலர்கள் சரிபார்ப்பர். அவ்வறிக்கை ஏற்கனவே மாநில அரசால் வகுக்கப்பட்ட திட்ட செயல்பாட்டு, விதிகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
மாநில அரசுகள் அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு திட்டங்களை முறையாக செயல்படுத்தி உள்ளனரா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஏதேனும் நிதி பாக்கி இருந்தாலோ, தேவைப்பட்டாலோ அதற்கான விளக்க உரையையும் தயார் செய்து அனுப்ப வேண்டும். கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருத்தல் அவசியம்.
- நன்னீர் மீன்வளம் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பை மேம்படுத்துதல்
- கடல் மீன்வள மேம்பாடு
- கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
- மீன்பிடித் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துதல்
- மீன்வளர்ச்சி பற்றிய பயிற்சி மற்றும் விரிவாக்கப் பனிகள்
- ஒருங்கிணைந்த மீன்வள மேம்பாட்டுத் திட்டம்
|