தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: மிளகு
இயற்கை வேளாண்மையில் மிளகு சாகுபடி

மிளகு (பைபர் நைகிரம் L.)
பைபரேசியே

இரகங்கள் : பன்னியூர் 1,2,3,4,5,6 மற்றும் 7, கரிமுண்டா, சிரிகார, சுபகார, பஞ்சமி, பவுர்ணமி, ஐஐஎஸ்ஆர் சக்தி, ஐஐஎஸ்ஆர்தேவம், ஐஐஎஸ்ஆர்கிரிமுண்டா, ஐஐஎஸ்ஆர் மலபார் எக்செல், பன்னியூர் 1 இரகம் வீரிய இரகம் ஆகும். இவ்வகை படர் மரங்களில் எழுச்சியுடன் பற்றி வளரும். ஏனைய வகைகளைக் காட்டிலும் கூடுதல் மகசூல் கொடுக்கவல்லது. பன்னியூர் 5 வகை நிழலைத் தாங்கி வளரும். பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது.

  • பன்னியூர் 1 - குறைந்த உயரத்தில் குறைந்த நிழலில் வளரக்கூடியது.
  • கரிமுண்டா - அதிக உயரமான அதிக நிழல் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது.
  • பன்னியூர் 5 - பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது.
புதர் மிளகு

மண் மற்றும் தட்பவெப்பநிலை : மிளகு பொதுவாக மானாவாரிப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. 150-250 செ.மீ. அளவிலான மழையும், அதிக அளவு ஈரப்பதமும், மிதமான தட்பவெப்ப நிலையும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. நல்ல வடிகால் வசதியுள்ள மக்கு நிறைந்த செம்பொறை மண் மிளகு சாகுபடிக்கு ஏற்றவாகும். 1500 மீட்டர் வரை உயரமுள்ள நிலப்பகுதிகளில் பயிரிடப்படலாம்.

பருவம் : ஜூன் - டிசம்பர்.

பயிர்ப்பெருக்கம் : மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகு ஒடுக்கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம்.

விதையும் விதைப்பும்

நாற்றாங்கால் தயாரிப்பு : நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண் உயரப்பாத்திகள் அமைக்கவேண்டும். மண்ணை நன்கு கொத்தித் தேவையான தொழு உரம், மணல், செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்கவேண்டும்.

விரும்பத்தகள் நல்ல குணங்களைக் கொண்ட தாய் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஒரு கொடிகளை தண்டுத் துண்டுகளாக தேர்ந்தெடுக்கவேண்டும். இவற்றின் பக்கத்தில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்கவேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஒடுகொடிகளை தாய்க்கொடியில் இருந்து வெட்டி நீக்கவேண்டும். பின்பு ஒடுகொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும், கீழ்ப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் தவிர்த்து விட்டு நடுப்பகுதியில் பகுதியை தண்டுத்துண்டுகள் (cuttings) தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்கவேண்டும். இளசான ஒடு கொடிகளையும், முதிர்ந்த ஒடு கொடிகளையும் தவிர்க்கவேண்டும். பின்னர் ஒடு கொடியிலிருந்து 2-3 கணுக்களை கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியர் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தண்டுத் துண்டுகளில் இலைக் காம்பை மட்டும் விட்டு இலைப்பரப்பை நீக்கவேண்டும்.

பின்னர் இத்தகைய தண்டுத் துண்டுகளின் கீழ்ப்பகுதியை 1000 பிபிஎம் இண்டேல் புட்ரிக் அமிலம் கலவையில் சிறிது நேரம் முழ்கவைத்து எடுத்து பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நடவேண்டும்.

பாலித்தீன் பைகளில் (7x5 அங்குல அளவு) 2 பாகம் வளமான மேல் மண், ஒருபாகம் ஆற்று மணல் ஒரு பாகம் தொழு உரம் கலந்த உரக்கலவை பாலித்தின் பைகளில் நிரப்பவேண்டும். உரக்கலவையை இடுவதற்கு முன்னரே தேவையான சிறிய துளைகளை பைகளில் இடவேண்டும். பாத்திகளிலும், பாலித்தீன் பைகளிலும் தண்டுத் துண்டுகளை நட்ட பின்னர் போதிய நீர் விட்டு நிழலில் வைக்கவேண்டும். இரு முறை தேவையான அளவு பூவாளியால் நீர் ஊற்றவேண்டும். வளரும் சிறு பதியன்களுக்கு உரமாக 10 லிட்டர் தண்ணீரில் யுஸரியா 40 கிராம் கரைத்து பைக்கு 250 மில்லி என்ற அளவில் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வரவேண்டும். பாலித்தீன் பைகளை வரிசையாக அடுக்கி, பந்தல் அமைப்பது அல்லது மூங்கலி தப்பைகள், பாலித்தீன் உறை இவைகளைக் கொண்டு கூடாரம் அமைப்பது சிறந்த முறையாகும். பாலித்தீன் பையில் நட்ட துண்டுகள் மூன்றாம் வாரத்தில் வேர்விடத்தொடங்கி, நடுவதற்குத் தயாராகிவிடும்.

நடவு : முள் முருக்கு, சீமை கொன்னை மற்றும் சில்வர் ஓக், சூபாபுல் ஆகியவை மிளகு பற்றி வளரப் பயன்படுத்தலாம். ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்யும் போது பலா, கமுகு, தென்னை போன்ற பலன் தரும் மரங்களை படர மரங்களாகப் பயன்படுத்தலாம். முள், முருக்கு, சீமை கொன்னை ஆகியவை வெட்டப்பட்ட தண்டுகள் மூலமாக நடப்படுகின்றன. இத்தண்டுகளை மிளகுக் கொடிகளை நடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னமாக நட்டால் போதுமானது. ஏனைய சில்வர் ஓக், சூபாபல் போன்றவை நாற்றுக்களாகவே நடவேண்டும். நாற்றுக்களை மிளகுக் கொடிகள் நடுவதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நடவேண்டும். வேர் விட்ட துண்டுகளைப் படர பயன்படும் மரங்களிலிருந்து 15 செ.மீ தூரம் தள்ளி 50 செ.மீ நீள, அகல, ஆழமுள்ள குழிகளை இரண்டு பக்கமும் 2 முதல் 3 மீட்டர்  (பன்னியூர் 1 – 3 x 3 மீட்டர்). இடைவெளி விட்டு தோண்டவும். 5 முதல் 10 கிலோ வரை தொழு உரம் அல்லது மட்கிய உரத்தை மேல் மண்ணுடன் கலந்து குழியில் நிரப்ப வேண்டும். தோண்டி நடவு செய்யவேண்டும். ஜூன் - ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றதாகும். செடிகள் வளர ஆரம்பித்தவுடன் அவை படரும் மரங்களில் கயிறுகளால் அல்லது தென்னை ஓலையினதல் கட்டிப் பாதுகாக்கவேண்டும்.

உரமிடுதல் :
ஒரு கொடிக்கு 10 கிலோ மக்கிய தொடு எருவுடன் 100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து மற்றும் 140 கிராம் சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை இருபாகங்களாகப் பிரித்து மே - ஜூன் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். இராசயன உரங்கள் நட்ட ஒரு மாதம் கழித்து கொடி ஒன்றிற்கு 10 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் இடவேண்டும்.

ஒருங்கிணைந்த உர மேலாண்மை :
செடி ஒன்றிக்கு 50 சதவித கனிம தழைச்சத்து + 10 கிலோ தொழுஉரம் + 50 கிராம் அசோஸ்பைரில்லம் + 50 கிராம் பாஸ்போபாக்டீரியா + 200 கிராம் வேம்பு இடவும். உரங்களைக் கொடியிலிருந்து 30 செ.மீ தூரம் தள்ளி இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
டிசம்பர் - மே மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குழிகளைச் சுற்றி நீர் விட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இரண்டு முறை களை எடுக்கவேண்டும்.

காய் உதிர்தல்

காய் உதிர்தலை தடுக்க1 சதவித டை அமோனியம் பாஸ்பேட்டை நான்கு முறை (பூ பூப்பதற்கு முன் 1 மே), புதிய இலைகள் மற்றும் பூக்கள் தோன்றும் போது (ஜீன்), காய்கொத்து உருவாவதற்கு முன் (ஜீலை) மற்றும் சிறு காய்கள் இருக்கும் பருவம் (ஆகஸ்ட்)) இலைமேல் தெளிக்க வேண்டும்.

கவாத்து செய்தல்

மிளகுக் கொடிகளின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள்  அதிகமாக வளரும். முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் எல்லா பூங்கொத்துக்களை உருவி நீக்கிவிடவேண்டும். அத்துடன் மிகுதியான பக்கக் கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிடவேண்டும். மிளகுக்கொடி உருவாக்க தேர்ந்தெடுக்கப்படட இலைகளையும் கிள்ளிவிடவேண்டும். மிளகுக் கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன், மேலும் பற்றிப்படர படர்மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை அப்புறப்படுத்தி, தண்டுகளை நாற்றுக்களாக உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

பூச்சிகள்

பொல்லு வண்டு : தாக்குதல் உள்ள இடங்களில் ஜூலை மற்றும்  அக்டோபர் மாதங்களில் காய்பிடிக்கும் போதும், பின் ஒருமாதம் கழித்தும் குயினால்பாஸ்
25 இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் 2 மில்லி கலந்து தெளிக்கவேண்டும்.

இலைக்கழலைப்பேன் : இதனைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருடன் மோனோகுரோட்டோபாஸ் 1.5 மில்லி அல்லது டைமித்தோயேட் 2 மில்லி அல்லது குளோரிபைரிபாஸ் 2 மில்லி அல்லது பாஸ்போமிடான் 2 மில்லி, இவற்றுள் ஏதாவது ஒன்றினை புதிய இலைகள் துளிர்விடும் சமயத்தில் மூன்று முறை ஒரு மாதத இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

மாவு மற்றும் செதில் பூச்சிகள் : இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த 3 மில்லி பாஸ்போமிடான் மருந்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

நோய்கள்

துரித வாடல் நோய் : மிளகுப் பயிரைத் தாக்கும்நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும். நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும். இது ஒரு வகை பூசண நோய் ஆகும். இது ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவக் காற்று மழையினால் அதிகம் பரவுகின்றது. நோய் தாக்கிய 10 அல்லது 15 நாட்களுக்குள் மிளகுக்  கொடி இலை அனைத்தும் உதிர்ந்து இறந்துவிடும். உதிரும் இலைகள் பசுமை நிறம் கொண்டவையாக இருக்கும். தூர் பாகத்திற்கு மிக அருகில் இருக்கும் தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளில் கருமையாக மாறிவிடும். தூர் பாககம் முதலில் அழுக ஆரம்பித்து பின் வேர்பாகம்  முழுவதும் அழுகி செடி இறந்துவிடும். இந்நோய் கீழ்பழனி மலைகளில் அதிகமாகக் காணப்படும்.

தடுப்பு முறைகள்

  1. மழைக்காலத்தில் இந்நோய் வேகமாகப் பரவுவதால் நல்ல வடிகால் வசதி செய்து, நோயின் தாக்கத்ததைக் குறைக்கவும்.
  2. நாற்றாங்காலில் ஒரு கிலோ மண் கலவைக்கு 1 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து பிறகு நடவேண்டும்.
  3. கொடி ஒன்றிற்கு அரைக்கிலோ  வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
  4. 1 சதவிகித போர்டோக் கலவையை மண்ணில் ஊற்றவேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை அதாவது மே - ஜூன் மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஊற்றவேண்டும்.
  5. இலை வழியாக ஒரு சதவிகித சூடோமோனோஸ் புளுரசன்ஸ் அளிக்கவேண்டும்.

நாற்றங்காலில் தடுப்பு முறை
நாற்றங்காலில் ஒரு கிலோ மண்கலவைக்கு 1 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் கலந்து விடவேண்டும்.ஃ

நடவு வயல் தடுப்பு முறை
பின்வரும் கலவையில் ஏதேனும் ஒன்றினை இரண்டு முறை(மே-ஜூன் மற்றும் அக்டோபர் - நவம்பர்) மண்ணில் கலந்து இட வேண்டும்.

  • செடிக்கு வேப்பம் புண்ணாக்கு ½ கிலோ + போர்டாக்ஸ் கலவையை செடியின் அடிப்பாகத்திலிருந்து 1 மீட்டர் உயரம் வரை பூச வேண்டும்.
  • செடிக்கு டிரைக்கோடெர்மா விரிடி @ 20 கிராம் + தொழு உரம் அல்லது போர்டாக் கலவை1 % அல்லது மெட்டாலாக்சில் மான்கோசெப் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.
  • ஒரு செடிக்கு வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ + 0.1% மெட்டாலாக்சில் (முன் பருவ தெளிப்பு மற்றும் மண்ணில் இட வேண்டும்).
  • சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் 50 கிராம் (முன் மற்றும் பின் பருவம்) + வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ (பின் பருவம்) + மெட்டாலாக்சில் 0.1 %.
ஆந்தராக்னோஸ் : போர்டாக்ஸ் கலவை 1% அல்லது மேன்கொசெப் 0.2% தெளிக்கவும்.

நூற்புழு: பேசிலஸ் சப்டிலிஸ் (Bbv 57) அல்லது சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் ஒரு கொடிக்கு 10 கிராம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடுவதன் மூலம் மிளகில் வேர் முடிச்சு மற்றும் ரேனிப்பார்ம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

முதிராத கருமிளகு காம்புகள்

முதிந்த கருமிளகு காம்புகள்

அறுவடை

நடவு செய்த மூன்று வருடங்களில் மிளகு காய்க்கத் தொடங்குகிறது. நவம்பர் முதல் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யலாம். மிளகுக் கொத்தில் சில பழங்கள் சிவப்பு நிறத்தை அடைந்தவுடன் முழுக் கொத்தை கையால் பறிக்க வேண்டும். பழங்களை பிரித்தெடுத்து, சுடுநீரில் (80 செ.) ஒரு நிமிடத்திற்கு முக்கி எடுத்து 7 முதல் 10 நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும்.

வணிகரீதியான கரு மிளகு

வெள்ளை மிளகு

மகசூல் : ஒரு வருடத்திற்க ஒரு கொடியிலிருந்து 2 முதல் 3 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும்.

சந்தை தகவல்கள்

பயிரிடும் மாவட்டங்கள்

கன்னியாகுமரி, நீலகிரிஸ், கொல்லிமலை, பழனி

முக்கிய சந்தைகள்

கன்னியாகுமரி, நாகர்கோவில்

முன்னுரிமை இரகங்கள்

தெல்லிசெரி, ஆலப்பி மற்றும் மலபார் கார்ப்லெட் (MGI)

தரம்

காரம் மற்றும் நறுமணம்

புதர் மிளகு
நடவுப் பொருள் : ஒரு வயதுடைய 2-3 கணுக்களுடைய பக்கவாட்டு கிளைகளை நடவுக்கு பொருத்தமாக இருக்கும்.
நடவு : ஒரு குழிக்கு 3 -5 நன்கு வேரூன்றிய தண்டு துண்டுகளை நடவேண்டும்.

உரம் மற்றும் உரமிடுதல் :

  • ஒரு தொட்டிக்கு 1:0.5:2 கிராம் NPK  இருமாத இடைவெளியில் இடவேண்டும்.
  • ஒரு தொட்டிக்கு 15 கிராம் கடலை புண்ணாக்கு மற்றும் 33 கிராம் வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

கவாத்து செய்தல் : செடிகளை நன்கு பராமரிக்க தொங்கும் தாவரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கவாத்து செய்தல் அவசியம்.


Last Update :October 2014