தவேப வேளாண் இணைய தளம் :: பாரம்பரிய வேளாண்மை

கன்றுக்குட்டிகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

குடற்புழு நீக்கம் (Deworming)
கன்றுகளுக்கு முறையாக குடற்புழு நீக்க மருந்து அளிக்கப்பட வேண்டும். ஒன்றரை மாத வயதில் முதல் முறையும் தொடர்ந்து ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு  நீக்கம் செய்தல் அவசியம்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்

சீரகம் - 15 கிராம்  
கடுகு  - 10 கிராம் 
மஞ்சள் - 5 கிராம் 
பூண்டு - 5 பல்
மிளகு - 5 எண்ணிக்கை
தும்பை இலை - 1 கைப்பிடி 
வேப்பிலை  - 1 கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம்  - 150 கிராம் (கருப்பட்டி)

சிகிச்சை முறை : (வாய் வழியாக)
சீரகம், கடுகு மற்றும் மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களை பனைவெல்லத்துடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக உப்பினில் (தேவைப்படும் உப்பு – 100கிராம்) தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கழிச்சல் : (Enteritis)
நீர்த்த, துர்நாற்றமுடைய கழிச்சல் காணப்படும். வால் மற்றும் பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள் சோர்ந்து காணப்படும்.
ஒரு கன்றுக்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்
கலவை -1

கசகசா  - 15 கிராம்  
மஞ்சள் - 5கிராம் 
பெருங்காயம் - 5 கிராம் 
வெந்தயம் - 15 கிராம்
மிளகு  - 5 எண்ணிக்கை
சின்னசீரகம் - 10 கிராம்

மேற்கண்ட பொருட்களை நன்கு கருகும் வரை வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும்.

கலவை -2

வெங்காயம் - 10 பல்
பூண்டு - 6 பல்
கருப்பட்டி    200 கிராம்
புளி் - 5 கிராம் 

மேற்கண்ட பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறை : (வாய் வழியாக)
இந்த இரு கலவைகளையும் கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி கல் உப்பினில் (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தோய்த்தெடுத்து நாக்கின் சொரசொரப்பான மேல் பகுதியில் தேய்த்த வண்ணம் ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

வெளி ஒட்டுண்ணி நீக்கம் (Ectoparasites)
மாடுகளின் மேல் பேன், உண்ணி, மாட்டு ஈ போன்ற  புற ஒட்டுண்ணிகள் காணப்படும். இவை இரத்தத்தை உறிஞ்சி உட்கொள்ளும். இதனால் மாடுகளில் இரத்தச் சோகை உண்டாகும். மேலும், இந்த உண்ணிகள், ஒரு செல் உயிரிகளை நோயுற்ற மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கப் பரவச் செய்கின்றன. ஒரு செல் உயிரிகளின் தாக்குதலுக்குள்ளான மாடுகளைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். பேன், உண்ணி, மாட்டு ஈ போன்றவைகள் மாடுகளை அண்டவிடாமல் பாதுகாத்து வைப்பதன் மூலம் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்
கலவை -1

சோற்றுக்கற்றாழை - 200 கிராம்
தும்பை இலை  - 50 கிராம்
துளசி இலை  - 50 கிராம்
உண்ணிச்செடி இலை - 50 கிராம்
குப்பை மேனி  - 50 கிராம்

மேற்கண்ட பொருட்களை இடித்துக் கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறை – வெளிப்புறம் தெளிப்பான மூலம் :
இந்த இரு கலவைகளையும் கலந்து 1 பானையில் 4 லிட்டர் நீருடன் இட்டு கொதிக்க விட்டு 1 லிட்டர் அளவிற்கு வற்றிய பிறகு எடுத்து வடிநீரை 1 லிட்டர் நீருக்கு 100 மிலி என்ற அளவில் சிறு தெளிப்பான மூலம் கால்நடையின் உடலில் வெயில் நேரங்களில் தெளித்து விட வேண்டும்.

பின்குறிப்பு :
ஒரு கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் வசம்பு பொடி என்ற அளவில் சேர்த்து, கவணை மற்றும் கொட்டில் சுவர்களில் சுண்ணாம்பு அடிப்பது போல் பூசிவிட வேண்டும்.

Updated on Dec, 2014


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014