வேளாண் அறிவியல் நிலையம் :: தர்மபுரி

எதிர்கால செயல்பாடுகள்

6.1.துல்லிய பண்ணைய தொழில்நுட்பத்தை தொடர்ந்து பின்பற்றுதலை ஊக்குவித்தல்

  • துல்லிய பண்ணைய தொழில்நுட்பங்கள் கடைபிடித்தலை உறுதி செய்தல்
  • சொட்டு நீர்ப்பாசன அமைப்பு அல்லாது மற்ற துல்லிய பண்ணைய தொழில் நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர் ஏற்படுத்துதல்
  • துல்லிய பண்ணைய தொழில்நுட்பங்களை வயல்வெளிகளில் பின்பற்றும்போது வரக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்

6.2. சத்தான தானிய உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பு திட்டம்
சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு உகந்த இடம் தருமபுரி மாவட்டம் ஆகும். விவசாயிகளின் பாரம்பரிய அறிவும், வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்ப திட்டங்களும் இணைந்து செயல்படும்போது விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய ஊட்டச்சத்து பாதுகாப்பும் பூர்த்தியாக வழிவகுக்கும்.

  • முதன்மை செயல்விளக்கத்திடல்கள் வாயிலாக சிறுதானிய பயிர்களில் புதிய இரகங்களை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையுடன் பயிரிட ஊக்குவித்தல்.
  • தீவர சிறுதானிய சாகுபடி வாயிலாக ஊட்டச்சத்து பாதுகாப்பு ஏற்படுத்துதல் திட்டத்தின் மூலம் விவசாய குழுக்களை ஏற்படுத்தி சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதல் பற்றிய ஆலோசனை வழங்கி அதனை செயல்படுத்துதல்
  • மதிப்புக்கூட்டிய பொருட்களை சந்தைப்படுத்துதலை ஊக்குவித்தல்

6.3. காய்கறி தோட்டம் அமைத்தலை ஊக்குவித்தல்
மாநில மனிதவள ஆய்வறிக்கையின் படி, தருமபுரி மாவட்டம் மனிதவள குறியீடு 0.656 பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. மனிதவள குறியீடு என்பது சமுதாயத்தின் சமூக மற்றும் பொருளாதாரத்தின் அளவைக் குறிக்கிறது. தருமபுரி மாவட்ட மக்களிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலான குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ளவர்கள் சாதம் மற்றும் துவரம் பருப்பு குழம்பையே தினமும் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். தங்களது உணவுப் பழக்கத்தில் குறைந்தளவு பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அரிதாகவே எடுத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் போதிய வசதியின்மை மட்டுமின்றி சத்தான உணவு முறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையும் ஆகும்.  
காய்கறி தோட்டம் அமைத்தல் வாயிலாக வருடம் முழுவதும் விவசாயிகள் தங்கள் குடும்பத்தாருக்கு தேவையான சத்தான மற்றும் பாதுகாப்பான உணவினைப் பெற முடியும். தருமபுரி மாவட்டத்தின் கிராம மக்களிடையே சரிவிகித உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் காய்கறி தோட்டம் அமைத்தல் என்ற தலைப்பில் வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி திட்டத்தினை NRTT  மானிய உதவியுடன் வகுத்துள்ளது.

திட்டத்தின் நோக்கங்கள்

  • தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் காய்கறித் தோட்டம் பற்றிய செயல்விளக்கம் அமைத்தல்.
  • விவசாயிகள் மற்றும் பண்ணை மகளீருக்கு காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய பயிற்சி அளித்தல்.
  • காய்கறி தோட்டங்களில் உயிரியல் முறை பூச்சி மேலாண்மை பற்றிய பயிற்சி வழங்கி கிராம பெண்களை கடைபிடிக்க வைத்தல்.

6.4. தோட்டக்கால் மற்றும் மானாவாரி நிலங்களுக்கான மாதிரி ஒருங்கிணைந்த 
       பண்ணை முறை
          பயிர்சாகுபடியில்  ஏற்படும் இழப்பினைத் தவிர்க்க ஒருங்கிணைந்த பண்ணை முறை ஒரு வரப்பிரசாதமாகும். ஒருங்கிணைந்த பண்ணை முறை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகள் விளைச்சலை அதிகரிப்பதுடன் நிகர லாபத்தையும் அதிகரிக்கலாம். மேலும் பண்ணைக் கழிவை இயற்கை எருவாக்கி பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தையும் நிலைப்படுத்தி நீண்ட காலத்திற்கு நிலையான விளைச்சலையும் பெறலாம். பண்ணை அளவில் கிடைக்கக்கூடிய அனைத்து கழிவு மற்றும் உற்பத்தி பொருட்களை சுழற்சி முறையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவைக் குறைக்க முடியும்.  எனவே தருமபுரி போன்ற விவசாயம் சார்ந்த மாவட்டங்களில் நிரந்தர வேலைவாய்ப்புக்கான ஒரே திட்டம் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டமாகும். இந்த நோக்கத்தில் கீழ்க்காணும் செயல்கள் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

  • முதன்மை செயல்விளக்க திடல்கள் மூலம் தோட்டக்கால் மற்றும் மானாவாரி நிலங்களுக்கான மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை முறையை விவசாயிகளின் வயல்களில் உருவாக்குதல்.
  • ஒருங்கிணைந்த பண்ணை முறையின் முக்கியத்துவத்தை வயல்விழாக்கள் மற்றும் பயிற்சிகள் வாயிலாக எடுத்துக் கூறி விவசாயிகளை கடைபிடிக்க வைத்தல்.
  • விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணைமுறையை தங்கள் வயல்களில் தாங்களாகவே செயல்படுத்தும்போது எதிர்வரும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குதல்.

6.5. பண்ணை இயந்திரமாக்குதல்
பண்ணை இயந்திரமாக்குதல் தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. வேலையாட்கள் பற்றாக்குறையினால் நலிந்து வருகின்ற விவசாயத் தொழிலை மேம்படுத்த பண்ணை இயந்திரமாக்குதல் அவசியமான ஒன்று. பண்ணை இயந்திரமாக்கலின் விளைவாக இயந்திரங்களை பயன்படுத்தி பண்ணை செயல்களை திறம்பட செய்யவும், குறித்த காலத்தில் உரிய வேலைகளை செய்யவும் மற்றும் வேளாண் இடு பொருட்களை அதாவது விதை, உரங்கள், மற்றும் நீர் ஆகியவற்றை சரியாக உபயோகப்படுத்தி விளைச்சலை அதிகரித்து, சாகுபடி செலவையும், கூலியாட்களின் சிரமத்தையும் குறைக்க இயலும்.
பண்ணை இயந்திரமாக்குதலை ஊக்குவிக்க அரசாங்கம் பொருளாதார உதவி செய்வது மட்டுமல்லாது சிறிய மற்றும் துண்டு நிலங்களுக்கேற்ற, குறைந்த முதலீட்டில், சிறிய பண்ணைக் கருவிகளை உருவாக்குதல் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த நோக்கத்துடன் வேளாண் அறிவியல் நிலையம் பின்வரும் செயல்பாடுகளை எதிர்வரும் காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

  • வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் செயல்களில் உள்ள சிரமங்களை களைய பண்ணைக் கருவிகளை உபயோகித்தல் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்துதல்.
  • பண்ணைக்குழு போன்ற அமைப்புகளின் மூலம் பண்ணைக் கருவிகள் வாங்க செய்து, அவர்களையும் மற்ற விவசாயிகளையும் பயன்படுத்த ஊக்குவித்தல்.
  • அதிக முதலீடு பண்ணைக் கருவிகளை (லேசர் உதவியுடன் நிலம் சமன்செய்யும் கருவி) வாடகை முறையில் பயன்படுத்த ஊக்குவித்தல்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013