organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் நோய் மேலாண்மை

நோய் மேலாண்மை

மண் மூலம் பரவும் நோய்களின் கட்டுப்பாடு

வாடல் நோய், வேர் அழுகல் போன்ற நோய்களின் காரணிகளான(கிளாமிடோஸ்போர், ஸ்கிளிரோசியா) மண்ணில் பல வருடங்களுக்கு தங்கி நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன. மேல்சாம்பல் நோய், அடிச்சாம்பல் நோய் உண்டாக்கும்(கிளிஸ்டோஷீதிசியா) நோய் தாக்கப்பட்ட உதிர்ந்த இலைகளில் தங்கி மீண்டும் நோயை உண்டாக்கும்.

நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை உருவாக்கும் முறை:  

  • ஊட்டமேற்றிய தொழு உரம், தழை எரு, நன்கு மட்கிய கோழி உரம், கம்போஸ்ட், மண்புழு உரம் மண்ணில் இடுதல்.
  • சணப்பை, கொளுஞ்சி, தக்கைப்பூண்டு, கிளைரிசிடியா முதலியவற்றை வளர்த்து பூக்கும் முன் மண்ணில் உழுதல்.
  • கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் சூரிய வெப்பத்தால் செயலிழக்கின்றன.
  • மூடாக்கு அமைப்பதன் மூலம் நுண்ணுயிர்களுக்கு ஏற்ற சூழல் உருவாகிறது. மண்ணின் வெப்பநிலை அதிகமாகும் நேரங்களில் வாழையில் ‘எர்வினியா’ கிழங்கு அழுகல் நோய் அதிகமாகக் காணப்படும். மூடாக்கு அமைப்பதன் மூலம் களைகளின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் பயிர் இல்லாத நேரங்களில் நோய் காரணிகள் களைகளில் தங்குவது கட்டுப்படுத்தப்படுகிறது.
  • வேப்பம்புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு மற்றும் புங்கம் புண்ணாக்கு மண்ணில் இடுவதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வாழை வாடல் நோய், கடலை வேரழுகல் நோய் , தென்னை வாடல் நோயை பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.
  • ஒரே பயிரைத் தொடர்ச்சியாகப் பயிரிடாமல் பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்துவதால் நோய் தாக்கம் குறையும். எடுத்துக்காட்டாக முட்டைகோசில் வரும் கொண்டை அழுகல் நோய், கொடி வகைகளில் வரும் வாடல் நோய்கள், சாம்பல் நோய்கள், வேர் அழுகல் நோய்கள், கேரட், காலிபிளவர், தக்காளி, வெண்டை, கத்தரி, சோளம் மற்றும் நெல்லில் வரும் வேர்வகை நோய்களை கட்டுப்படுத்த மக்காச்சோளம் போன்ற தானியங்களை பயிர் சுழற்சி செய்து நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • மண்ணில் அதிக நீர் தேங்கினால் தக்காளி, கத்தரி, மிளகாய், கொடிவகைகளில் ஏற்படும் நாற்றழுகல் நோய் அதிகரிக்கும். அதே போல் வெற்றிலை வாடல் நோய், மஞ்சள், இஞ்சி, கிழங்கு அழுகல் நோயை உண்டாக்கும் பித்தியம், பைடோப்தாரா போன்ற பூசணங்கள் மண்ணில் அதிக நீர் இருந்தால் அதிகப்படியாகக் காணப்படும். எனவே நீர் பாய்ச்சும் அளவு சமச்சீராக இருத்தல் வேண்டும். நீர் பாய்ச்சும் அளவு குறையும் போது மண்ணின் வெப்பநிலை அதிகமாகி, பாக்டீரியாக்கள் நோயை உண்டாக்கும் (எ.கா.) வாழை எர்வினியா கிழங்கு அழுகல் நோய்.
  • வாழையின் வாடல் நோயைக்கட்டுப்படுத்த வயலில் 6 மாதத்திற்கு நீரைத்தேக்கியோ அல்லது வாழைக்குப்பின் நெல் பயிரிடுவதன் மூலமோ வாடல் நோய் கிருமிகளை அழிக்கலாம்.
  • வயலில் நீரைத்தேக்கி வைப்பதால் நாற்றழுகல், வேர் அழுகல் நோய்கள் உருவாக்கும் பூசணங்களான பித்தியம், ரைசக்டோனியா, பைட்டோப்தாரா போன்றவற்றை நிலத்திலிருந்து அகற்றலாம்.
  • நிலத்தை பாலிதீன் தாள்களைக் கொண்டு மூடுவதன் மூலம் மண்ணின் வெப்பத்தை 40° செல்சியஸ் முதல் 50° செல்சியஸ் வரை உயர்த்த முடியும். இதனால் பூசணி, தர்பூசணி, முள்ளங்கி, சாமந்தி வாடல் நோய்களை வெகுவாகக் குறைக்கலாம்.
  • பச்சை நீல நிற தாள்களைக் கொண்டு நிலத்தை மூடும்பொழுது வெள்ளரி மேல் சாம்பல்நோய், அடிச்சாம்பல் நோய்க்காரணிகள் அழிக்கப்படுகின்றன.
  • தக்காளியில் ஏற்படும் பாக்டீரியா நோயைக்கட்டுப்படுத்த பாலித்தீன் தாள்களைக்கொண்டு மண்ணை சூரியஒளி வெப்பத்திற்கு உட்படுத்தும் போதும் நோய் தாக்கப்படுவது குறைகிறது. தவிர நன்மை பயக்கும் சூடோமோனாஸ், பேசில்லஸ் போன்ற நுண்ணுயிர்கள் தாக்கப்படுவதில்லை. எனவே இவை மறைமுகமாக நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்குகின்றன.
  • மண்ணில் பிரதிபலிக்கும் மூடாக்குகளை அமைப்பதால் வைரஸ் நோய்களைப் பரப்பும் அசுவினிகளுக்கு அவை எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றன.
  • மஞ்சள் நிற ஒட்டும் தன்மையுடைய தாள்களை வயலில் வைப்பதன் மூலம் தக்காளி இலைசுருள் நோய், வெள்ளரி தேமல் நோய், உருளைக்கிழங்கு நச்சுயிரி நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • வெள்ளை நிறத்தில் உள்ள பாலித்தீன் மூடாக்குகள் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, மிளகாய் வயல்களில் அமைத்தால் நச்சுயிரி நோய்கள் குறைக்கப்படுகின்றன.
  • வெள்ளரி மஞ்சள் தேமல் நோயைக்கட்டுப்படுத்த, நெல் வைக்கோலை மூடாக்காக பயன்படுத்தும் பொழுது வெள்ளை ஈக்கள் கவரப்பட்டு அதிக வெப்பத்தால் அழிக்கப்படுகிறது.
  • நன்கு மக்கிய தொழு உரத்துடன் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் அல்லது பேசில்லஸ் போன்ற நன்மை பயக்கும் எதிர் உயிரிகளை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் மண்ணில் இடுவதால் சிறந்த நோய் மேலாண்மை கிடைக்கிறது

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016