| ||||
பட்டு நூல் உற்பத்தி |
||||
பட்டுப்புழுவின் கூடு ஒரே நூலால் உருவாக்கப்பட்டவை. ஒரு கூட்டில் 500 முதல் 1000 மீட்டர் வரை பட்டு இழை இருக்கும். பட்டுப்புழு கூடு கட்டிய பத்து நாட்களுக்குள் கூட்டிலிருந்த நூலை பிரித்தெடுக்கவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு பட்டுக்கூட்டின் உள்ளே இருக்கும் கூட்டுப்புழுவானது உருமாற்றம் அடைந்து அந்துப்பூச்சியாக கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும். இதனால் பட்டு இழை ஒரே நூலாக பிரித்தெடுக்க இயலாமல் போகும். பட்டு நூலை பிரித்தெடுக்க பட்டுக்கூடுகளை சுடுநீரில் அமுக்கி வேகவைக்கவேண்டும். இதனால் பட்டு இழைகளுக்கிடையேயான பிசின் இளக்கமடைந்து பட்டு இழைகைளை பிரித்தெடுக்க ஏதுவாகும். இவ்வாறு பிரித்தெடுப்பதற்கு நாட்டு சர்க்கார் முதல் முழுமையான தானியங்கி இயந்திரம் வரை பல்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாவு மற்றும் ஊடு நூலிழைகள் சோடாகாரம் மற்றும் சோப்புடன் சேர்த்து கொதிநீரில் முக்கி வெளுக்கப்படுகின்றன. பட்டுக்கூட்டின் நிறம் என்னவாக இருந்தாலும் அவை வெளுக்கப்பட்டே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெளுக்கும் போது பட்டு நூழிலையின் வெளியே படிந்திருக்கும் செரிசின் என்பபடும் பசைப் பொருள் நீக்கப்படுகின்றன. இவ்வாறு பசைப்பொருள் நீக்கப்பட்டு வெளுத்த இழைகள் சாயம் தோய்க்கப்பட்டு பட்டு நூலிழைகள் தயாராகின்றன. இவ்வாறு பசைப்பொருள் நீக்கப்பட்டு வெளுத்த நூலிழைகள் சாயம் தோய்யக்கபட்டு தறியில் நெசவு செய்யப்படுகிறது. ஒரு பட்டுப்புடவைக்கான நூலைப்பெற சுமார் 4000 முதல் 5000 பட்டுக்கூடுகள் தேவைப்படும்.
பட்டுப்புடவைகளுக்கு தனிச் சிறப்பைத் தருவர் சரிகை. மெல்லிய பட்டு நூலின் மீது வெள்ளி கம்பியை சுற்றி அதன் மீது தங்கம் பூசப்பட்டு சரிகை தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ சரிகையில் 7 முதல் 8 கிராம் வெள்ளி மற்றும் தங்கம் இருக்கும். ஒரு கிலோ சரிகையின் விலை சுமார் இருபதாயிரம் ரூபாயாகும். பெரும்பாலும் சரிகை குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து வாங்கப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரத்திலும் சரிகை தயாரிக்கப்படுகிறது. பட்டுப்புடவையின் கரை மற்றும் முந்தியிலுள்ள பலவகை வேலைப்பாடுகள் செய்ய சரிகை பயன்படுகிறது. சரிகையின் அளவைப் பொருத்தே பட்டுப்புடவையின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
|
||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014 |
||||