முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேபக வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள்

KVK வெற்றிக் கதைகள்

வெற்றிக் கதை – இயந்திர மயமான நெல் சாகுபடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் ஒரு முக்கியப்பயிராகும். நெல் பயிரானது சுமார் 17,000 எக்டா் நிலப்பரப்பில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ பருவங்களில் பயிரிடப்படுகிறது.  விவசாயிகள் சாதாரணமான முறைகளை நெல் பயிரிட பயன்படுத்தி வந்தனா். இதனால் அவா்களுக்கு அதிக வேலையாட்களின் தேவையோடு இடுபொருட்களின் செலவும் அதிகமாக இருந்தது.  இதனைக் கருத்தில் கொண்டு, 2008-ம் ஆண்டு திருந்திய நெல் சாகுபடி முறைகளை முதல்நிலை ஆராய்ச்சி திடல்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதன் விளைவாக அவா்களின் இடு பொருட்களின் அளவு குறைந்ததோடு மட்டுமின்றி 10-40 சதம் மகசூல் அதிகரித்தது.  மேலும் நீா் தேவை மற்றும் தழைச்சத்து முறையே 25-30 சதம் மற்றும் 25 கிலோ∕எக்டா் அளவு குறைந்தன. இதன் மூலம் தற்போது 50-60 சதவீத நெல் பயிரிடும் பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  ஆனால், தற்சமயம், ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் சரியான நேரத்தில் சாகுபடி முறைகளை கடைபிடிக்க முடியவில்லை.  இதனால் பயிர் சாகுபடி பணிகள் தள்ளிப் போவது மட்டுமின்றி சில நேரங்களில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தவிர்த்து விடுகின்றனா்.  இதன் காரணமாக நெல்லில் மகசூல் வெகுவாக குறைகிறது. அது மட்டுமின்றி, வேலையாட்களின் பற்றாக்குறையால் நெல் சாகுபடி பரப்பும் இம்மாவட்டத்தில் வெகுவாக குறைந்து வருகிறது.

செயல்முறை

வேளாண்மை அறிவியல் நிலையம், கன்னியாகுமரி இயந்திரமயமான நெல் சாகுபடி முறையை தொடங்கியது. 2007-08 ஆம் ஆண்டு, முதல் நெல் பயிரிடும் இயந்திரம் மற்றும் நெல் விதைக்கும் இயந்திரம் பற்றிய குறிப்புகளை விவசாயிகளுக்கு முதல்நிலை செயல்விளக்கத் திடல் மூலம் விளக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, கோனா களைக் கருவி, இயந்திர களையெடுப்பான மற்றும் அறுவடை செய்தல் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் விளக்கப்பட்டது.  2012-13 ஆம் ஆண்டு தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுக்காக்களில் முழுமையான இயந்திரமான நெல் சாகுபடி முறையை முதல் நிலை செயல்விளக்கத் திடல்கள் மூலமாக விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து விளக்கப்பட்டது. வேம்பனூா் கிராமத்திற்குட்பட்ட பெரும்செல்வவிளையில்  2014-15 ம் ஆண்டு நடத்தப்பட்ட நெல் இயந்திரமயமாக்குதல் என்ற வயல் வெளிப் பள்ளியின் மூலம் நெல்லில் முழுமையான இயந்திரமயமான முறையைப் பின்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை உழவா்கள் மத்தியில் விதைத்தது.

தொழில்நுட்பம்

தட்டு நாற்றங்கால் தயாரித்தல் (60ⅹ30 செ.மீ அளவுள்ள பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் 20கிலோ∕ எக்டா் விதையளவு),  நடவு நடும் இயந்திரம் மூலம் நாற்று நடுதல் (நடந்து ஓட்டும் வகை),  இயந்திர களையெடுப்பான் (த.வே.ப.க வரிசை களையெடுப்பான்) மற்றும் நெல் அறுவடை இயந்திரம் பயன்படுத்தி அறுவடை செய்தல்.

விளைவுகள்

2007-ஆம் ஆண்டு இயந்திரமயமான நெல் சாகுடி முறை தொடங்கப்பட்டு பின்பு கோனோ களையெடுப்பான், இயந்திர களையெடுப்பான் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் முதலியன திருந்திய நெல் சாகுடி முறையில் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் விவசாயிகள் கோனோ களையெடுப்பான் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் முதலியன குறித்து நன்கு பயிற்றுவிக்கப்பட்டனா். இதன் மூலம் 40-60சதம் பகுதிகளில் இயந்திரமயமான நெல் சாகுபடி முறைகள் பரவின.  2012-13 ஆண்டு காரிப் மற்றும் ராபி பருவங்களில் முழுமையான இயந்திரமயமான நெல் சாகுபடி முறைகள் முதல் நிலை செயல் விளக்க திடல்கள் கொண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கங்கள் மூலம் விளக்கப்பட்டது. இம்முறைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் வேலையாட்கள் குறைவாகவும் (41 வேலையாட்கள் – இயந்தர நெல் சாகுபடியில்,  139 வேலையாட்கள் – சாதாரண நெல் சாகுபடி முறையில்),  அதிக வருமானம் கிடைப்பதாகவும் (நிகர வருமானம் ரூ. 40,400 மற்றும் ஒரு ரூபாய் செலவுக்கு ரூ.2.25) நடவு, களையெடுத்தல் மற்றும் அறுவடை போன்ற பணிகள் எளிமையாக முடிந்ததாகவும் தெரிவித்தனா்.  விவசாயிகள் திருப்திபட்டதால் ராபி பருவத்தில் 500-600 எக்டா் அளவுக்கு இயந்திர முறையில் நெல் பயிரிடப்பட்டது.  இரு நெல் பயிரிடும் இயந்திரங்களை விவசாயிகளும் நான்கு இயந்திரங்களை விவசாய கூட்டுறவு சங்கமும் வாங்கினா்.  பத்து விவசாய குழுக்கள் இயந்திர களையெடுப்பான்களை தமிழக அரசின் மானிய விலையில் வாங்கியுள்ளனா்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் காரீப் 2014-15 பருவத்தில் 85-90 சதம் பரப்பளவில் நெல் அறுவடை இயந்திரம் மூலம் செய்யப்பட்டது.

பொருளாதாரப் பயன்

இயந்திரமயமான நெல் சாகுடி மூலம் 44 ஆட்கள் குறைவதுடன் ரூ.40,400 நிகர வருவாயும் 2.25 வரவு செலவு விகிதம் கிடைக்கப்பெற்றது.

வேலை வாய்ப்பு உருவாக்கம்

இயந்திர நெல் நடவில் இரண்டு தொழில் முனைவோரும் அறுவடையில் மூன்று தொழில் முனைவோரும் உருவாக்கப்பட்டனா். இவா்கள் இளைஞா்களை கொண்டு மேற்கண்ட பணிகளை செய்கின்றனா்.  ஒரு ஏக்கா் பயிரிட ரூ.2,500-ம் ஒரு ஏக்கா் அறுவடை செய்ய ரூ.3000 முதல் ரூ.3500 ம் விலை நிர்ணயித்து பணிகளை அவா்கள் செய்து வருகின்றனா்.   பணிபுரியும் இளைஞா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.750-1000 சம்பளமாக வழங்கப்படுகிறது.

சாதனை விவசாயியின் பெயா் மற்றும் முகவரி:

திரு.கோ. ரமேஷ் பாபு,
த.பெ திரு. கோபாலன்,
3∕169, பெரும்செல்வவிளை,
ஆளுா் அஞ்சல் – 629 801
கன்னியாகுமரி மாவட்டம்
அலைபேசி - 8012905595

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016