மணக்கும் புதினா சாகுபடி: ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் லாபம்
கே.கருப்பையா ,
தேனி மாவட்டம்,
தொடர்புக்கு: 98653 67860 |
சமையலில் சுவையும் மணமும் கொடுக்கப் பயன்படுத்தப்படும் புதினா மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்வரை லாபம் கிடைக்கும் என்கிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா. சைவ, அசைவ உணவுக்குச் சுவையூட்டும் புதினா வயிற்று வலி, செரிமானக் குறைவு, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளுக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. மருத்துவக் குணம் கொண்ட இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தத்தைச் சுத்தமாக்குவதுடன், உடலுக்குப் புத்துணர்வைத் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பல்வேறு மருந்துகளில் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது தவிர அழகு சாதனப் பொருட்கள், சோப்பு, தலைவலி மருந்து, கிரீம்கள் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது.
பூச்சி தாக்குதல் இல்லை
புதினா, ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட தாவரம் எனக் கூறப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு வரவேற்பு உள்ளதால், நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். வெற்றிகரமான புதினா சாகுபடி பற்றித் தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் புதினா சாகுபடி செய்துள்ள விவசாயி கே. கருப்பையா பகிர்ந்து கொண்டார்: மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். ஒரு ஏக்கரில் உழுது, பாத்தி கட்டி, புதினா நடவு செய்யச் சுமார் ரூ.1 லட்சம்வரை செலவு ஆகும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் மருந்து தெளிக்கலாம். இயற்கை உரத்தை இட வேண்டும்.
அதிக லாபம்
60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 4,800 கிலோவரை பறிக்கலாம். முகூர்த்தம் மற்றும் நோன்புக் காலங்களில் ரூ.50 முதல் 70 வரை விலை போகிறது. சந்தையில் ஒரு கிலோ சராசரியாக ரூ. 30 என்றால் கூட, ரூ. 1.44 லட்சம் கிடைக்கும். செலவு போக அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரை லாபம் கிடைக்கும். 4 ஆண்டுகள்வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரு முறை புதினா அறுவடை செய்துகொண்டே இருக்கலாம். இதைச் சந்தைப்படுத்துவது மிகவும் எளிது. புதினா சாகுபடி செய்யப் பட்டுள்ளது குறித்து வியாபாரிகளுக்குத் தகவல் தெரிந்தால், அவர்களே போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றுவிடுவார்கள். புதினா சாகுபடிக்கு உவர் நீர் அல்லது சப்பைத் தண்ணீரைப் பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். அதனால் நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஊடுபயிர்
நிலம் குறைவாக வைத்துள்ள ஏழை விவசாயிகள் தென்னை மரங்களுக்கு இடையே இதை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். கடந்த 15 ஆண்டு களாகப் புதினாவை மட்டுமே 2 ஏக்கர் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து லாபமடைந்து வருகிறேன்.
|