  
                கொடி அவரையில் கோடி லாபம் 
                
  
    கா.சுப்பிர மணியன்,  
    மதுரை மாவட்டம். 
        தொடர்புக்கு: 93803 96873 
        | 
   
 
        மலைப்பிர  தேசங்களில் காப்பி, தேயிலை, ஏலக்காய்  போன்றவற்றை பயிரிட்டால் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்ற கண்ணோட்டம் விவசாயிகளிடம்  இருந்தது. அது  படிப்படியாக மாறி வருகிறது. தற்போது மண்ணின் தன்மைக்கு ஏற்ப  புதுப்புது ரகங்களை பயிரிட்டு மலை விவசாயிகள் சாதனை படைத்து வருவது பாராட்டுக் குரியது. திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் மலையில் காப்பி, ஏலக்காய் விவசாயத்தை  அடுத்து தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்துள்ள காரட், பீன்ஸ், நூக்கல், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ்  வகைகள் விளைவிக்கின்றனர். இவை விவசாயிகளுக்கு லாபத்தை  ஈட்டித்தருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, தென்மலை  பகுதிகளில் சவ் சவ்வை அடுத்து கொடி அவரை விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். கொத்துக்  கொத்தாக... நீளமாக  காய்க்கும் மலைக்கொடி அவரையின் ருசியே அலாதி தான். தென்மலை விவசாயி வி.எஸ்.பழனியாண்டி  கூறியதாவது: ஆண்டு தோறும் நவம்பர் இறுதி வாரம் அல்லது  டிசம்பர் துவக்கத்தில் கொடி அவரை பயிரிடுவோம். மூன்று மாதங்களில்  காய்கள் பறிக்கலாம். இங்குள்ள மண்ணின் காரத் தன்மைக்கு  சவ்சவ் நன்றாக விளையும். ஆனால் கொடி அவரை விளையுமா என  துவக்கத்தில் சந்தேகம் இருந்தது. எனினும்  ஒரு ஏக்கரில் பயிரிட்டதில் நன்றாக காய்த்தது. ஏக்கருக்கு ரூ.ஒரு  லட்சம் கிடைத்தது. டீசல் பம்புசெட் மூலம் கிணற்று நீர்  எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சுகிறேன். உரம், பூச்சிக்கொல்லி  மருந்து, கூலி  ஆட்கள், டீசல்  செலவை கணக்கிட்டால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்  மட்டுமே லாபம் கிடைக் கிறது. தற்போது  ஐந்து ஏக்கரில் கொடி அவரை பயிரிட்டுள்ளேன். இரண்டு நாட்களுக்கு  ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கிணற்றில் தண்ணீர்  ஊறி கொண்டே இருந்தால் கொடி அவரையில் கோடி ரூபாய் லாபம் பார்க்கலாம் என்றார்.  
 
          |