செவந்தம்பட்டி கத்திரி…. இருமடிப்பாத்தியில் செழிப்பான வளர்ச்சி !
லாபம் மட்டுமே நோக்கம் எனக்கொண்டு, வீரிய ஒட்டுவிதைகளையும், ரசாயன உரங்களையும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த விவசாயிகள் பலரும்…. நம்மாழ்வார் சொல்லிக் கொடுத்த வழியில் இயற்கை விவசாயம், இருமடிப்பாத்தி, பாரம்பரிய விதைகள் என மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். குறைவான செலவில் நல்ல வருமானம் எடுப்பதோடு, மகிழ்ச்சியான வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கிளல் ஒருவராக குறைந்த பரப்பு நிலத்தில் செவந்தம்பட்டி கத்திரியை சாகுபடி செய்து, நல்ல வருமானம் எடுத்துக் கொண்டிருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன்.
கைவிட்ட காவலர் பணி…. கைகொடுத்த விவசாயம்!
கத்திரிக்காய் அறுவடைப் பணியிலிருந்த பாண்டியனைச் சந்தித்தோம். “லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துவிட்டு, அது சம்பந்தமாக மூன்று வருடம் வேலை பார்த்தேன். அதில் போதுமான திருப்தி இல்லை. அதன் பிறகு போலீஸ் வேலைக்குப் போலாம் என்று கடுமையான பயிற்சி எடுத்து, டெஸ்டில் செலக்ட் ஆகிட்டேன். ஆனால், நான் விவசாயத்திற்குத்தான் வர வேண்டும் என்று இருந்திருக்கும் போல. அந்த சமயத்தில் ஆட்சி மாறியதால் ரீ செலக்ஷன் வைத்தார்கள். அதில் எனக்கு போலீஸ் வேலை கிடைக்கலை. சின்ன வயதிலிருந்தே விவசாயத்தில் ஆர்வம் அதிகம் அதனால் விவசாயத்திற்கே போயிடலாம் என்ற முடிவு செய்து, தச்சூர் கிராமத்திலிருந்த தாத்தேவாட இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல், சூரியகாந்தி, காராமணி என்று விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். கல்யாணத்திற்குப் பிறகு இந்த நரசிங்கனூருக்கு குடி வந்துவிட்டோம். இங்கேயே இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் பார்த்து கொண்டிருக்கிறேன் என்றார்.
பாதை காட்டிய பசுமை விகடன் !
“முன்னாடி, வழக்கமான முறையில் உரம், பூச்சிக்கொல்லி தெளித்து, நெல், மணிலா (நிலக்கடலை), எள், உளுந்து என்று சாகுபடி செய்தேன். பால் வியாபாரத்திற்க்காக 10 கலப்பின மாடுகள் வாங்கி வளர்த்து கொண்டிருந்தேன். ஆனால், மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விற்பனை செய்துவிட்டேன். சில சமயங்களில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் போது அது ஒத்துக்காம உடம்பில் சில பிரச்னைகள் வந்தது. ஆனால், அதைத் தவிர்க்க முடியவில்லை. மாற்று வழிகளும் தெரியவில்லை. இந்த சமயத்தில்தான், என்னுடைய மச்சான் மூலமாக, ‘பசுமை விகடன்’ அறிமுகமானது. அதில் பல இயற்கைத் தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொண்டேன். அதை கொஞ்சம் கொஞ்சமாக செய்து பார்த்தபோது, பலன் கொடுத்தது. அதனால், எனக்கு இயற்கை விவசாயம் மேல் ஆர்வம் வந்தது.
2012-ம் வருடம் நம்மாழ்வார் ஐயாவோட களப்பயிற்சியில் கலந்துக் கொண்டேன். அதில் அவர் சொல்லிக் கொடுத்த இருமடிப்பாத்தித் தொழில்நுட்பமும், இடுபொருள் தொழில் நுட்பங்களும் நம்பிக்கைக் கொடுத்தது. “நம்ம வாழ்க்கையும், வெள்ளாமையும் சந்தோஷமாக இருப்பதற்கு தற்சார்புப் பண்ணையம் செய்யவேண்டும் என்று ஐயா சொன்னார். அதை என்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்தேன். எங்களுக்குத் தேவையான காய்கறிகள், அரிசி, உளுந்து என்று முடிந்த வரைக்கும் எல்லாவற்றையும் நாங்களே உற்பத்தி செய்வதால், குடும்பச்செலவு கணிசமாக குறைகிறது. மூன்று வருடமாக ஆஸ்பத்திரி பக்கம் போகும் வேலையே இல்லை” என்றார்.
பனை மட்டை மூடாக்கு !
இந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில்… வீடு, வண்டிப்பாதை என்று 15 சென்ட் நிலததை ஒதுக்கிட்டேன். ஒரு ஏக்கர் 65 சென்டில் கிச்சிலி நெல் இருக்கு. 50 சென்டில் உளுந்து, பச்சைப்பயறு இருக்கு. மீதியிருக்கும் 20 சென்ட் நிலத்தில் இருமடிப்பாத்தி போட்டு வீட்டுத் தேவைக்காக வெண்டை, கத்திரி, முள்ளங்கி, மிளகாய்ச் செடிகள் இருக்கு. சந்தையில் கிடைத்த நிறைய கத்திரிச்செடிகளையும் நட்டுவிட்டதால் பால ரக கத்திரிக்காய்கள் காய்கிறது. நண்பர் ஒருத்தர் நல்லா பழுத்த செவந்தம்பட்டிக் கத்திரியைக் கொடுத்து ‘கடலூர் மாவட்டம் செவந்தம்பட்டி பகுதிதான் இந்த கத்திரி ரகத்திற்கு பூர்வீகம். இது நல்ல விளைச்சலைக் கொடுக்கும். இதோட சுவை அருமையாக இருக்கும் என்று சொன்னார்.
நண்பர் கொடுத்த பத்து கத்திரிப் பழத்திலிருந்து விதை எடுத்து, அதையும் இருமடிப் பாத்தியில் நடவு செய்தேன். செடிகள் நல்லா வளர்ந்ததுடன் காய்களும் திரட்சியாக இருந்தது. இருமடிப்பாத்தியில் இலைதழைகளை மூடாக்கா போடும்போது, கொஞ்சநாளிலியே களைகள் வந்துவிடும். ஒரு சமயம் பக்கத்து வீட்டுக்காரர் கூரையைப் பிரித்தப்போது நிறைய பனைமட்டை கிடைத்தது. அதை மூடாக்காக போட்டப்போது களைகள் குறைவாக இருந்தது. அதோட அடிக்கடி தண்ணீர் கட்டும் வேலையும் குறைந்துவிட்டது. அதனால் பனை மட்டைகளைத்தான் மூடாக்காக பயன்படுத்துகிறேன். பெரியளவில் பராமரிப்பு இல்லாமலே இரண்டு வருடமாக கத்திரிச் செடிகள் காய்ப்பில் இருக்கு. வீட்டுத் தேவைக்குப் போக மீதத்தை விற்பனை செய்து கொண்டிருக்கிறேன். அதில் ஒரு வருமானமும் கிடைக்கிறது என்றார்.
அவருடைய மனைவி மணிமேகலை, “இயற்கை விவசாயம், இயற்கைச் சூழலோடும் வாழும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்றார். எங்க வீட்டில் கேஸ், மண்ணெண்ணெய் அடுப்பு எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க விறகு அடுப்புதான். அதோட எங்க நிலத்தில் விளையும் நெல், மணிலா, உளுந்து, கேழ்வரகு, தினை என்று எல்லா பொருட்களையும் மதிப்புக் கூட்டி நேரடியாகத்தான் விற்பனை செய்கிறோம். வீட்டுத்தேவைக்குப் போக, மீதம் இருக்கும் கத்திரிக்காயை கிலோ 30 ரூபாய் என்று நேரடியாக விற்பனை செய்கிறோம். எல்லாத்தையுமே நேரடியாக விற்பனை செய்வதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எங்க நண்பர்களுக்கு விஷமில்லாத பொருட்களை விளைவித்துக் கொடுக்கும் திருப்தியும் இருக்கு என்றார்.
இப்படித்தான் சாகுபடி செய்ய வேண்டும்!
இருமடிப்பாத்தியில் செவந்தம்பட்டி கத்திரி சாகுபடி செய்யும் முறை பற்றி பாண்டியன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…
நடவுக்குத் தேர்ந்தெடுத்த நிலத்தில் களைகள் இல்லாத அளவுக்கு உழுது, நான்கடி அகலத்தில், தேவையான நீளத்தில் இருமடிப்பாத்தி அமைக்க வேண்டும். அதாவது, நிலத்தில் முக்கால் அடி ஆழத்திற்கு மேல் மண்ணை வெட்டி எடுத்துவிட வேண்டும். பிறகு இந்தக் குழியில் இழைதழைகள், எரு ஆகியவற்றைப் போட்டு அமுதக்கரைசலைத் தெளித்த பிறகு, வெட்டி எடுத்து வைத்திருக்கும் மேல் மண் கொண்டு மூட வேண்டும். இதுதான் இருமடிப்பாத்தி, இரண்டு பாத்திகளுக்கு இடையில் ஓரடி இடைவெளியை நடைபாதைக்காக விட வேண்டும்.
இப்படி நான்கைந்து பாத்திகள் போடும்போது ஒரு குழியில் எடுக்கும் மண்ணை, அப்படியே அடுத்த குழியில் நிரப்பிக் கொண்டே வந்தால் வேலை குறையும். இல்லாவிட்டால் ஓரிடத்தில் குவித்து, அதை மீண்டும் எடுத்து போட வேண்டியிருக்கும். பாத்திகளின் ஓரத்திலிருந்து உள்பக்கமாக அரையடிவிட்டு, அதில் 3 அடி இடைவெளியில் ஒரு மாத வயது கொண்ட கத்திரிச் செடிகளை நடவு செய்து, செடிகளைச் சுற்றி மூடாக்குப் போட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப பாசனம் செய்தால் போதுமானது.
நடவு செய்ததிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுதக்கரைசல், ஜீவாமிர்தக் கரைசல் இரண்டையும் மாற்றி மாற்றி பாசனத் தண்ணீரில் கலந்து வரவேண்டும். ஒரு கிலோ வேப்பங்கொட்டை, 100 கிராம் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக இடித்து, 2 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊறவைத்த கரைசலை டேங்குக்கு (10 லிட்டர்) அரை லிட்டர் வீதம் கலந்து, மாதம் ஒரு முறை தெளித்து வரவேண்டும். இது, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும்.
40 முதல் 50 நாட்களில் பூவெடுத்து, 70-ம் நாளிலிருந்து அறுவடைக்கு வந்துவிடும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை காய் பறிக்கலாம். பராமரிப்பை பொருத்து 2 ஆண்டுகள் வரை கத்திரிச் செடி காய்க்கும். இருமடிப்பாத்தி என்பதால் செடிகள் பழுதான இடங்களில் மட்டும் புதிய செடிகளை நடவு செய்து கொண்டே வந்தால், தொடர்ச்சியாகக் காய்ப்பு இருக்கும்.
சுவையான செவந்தம்பட்டி கத்திரி !
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செவந்தம்பட்டி கத்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகம், பி.எஸ்.ஆர்-2 (பாலூர் -2) என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது. கத்திரிக்காய் சாப்பிடுவதற்கு மென்மையாகவும், சுவையாகவும், மணமாகவும் இருக்கும். சாம்பார், காரக்குழம்பு, எண்ணெய் கத்திரி, கத்திரிப் பொரியல், வத்தல் என பலவிதமான பதார்த்தங்களைச் செய்யலாம். வயது 150 முதல் 160 நாட்கள். இதன் பராமரிப்பைப் பொறுத்து நீண்ட நாட்களுக்கும் காய்க்கும். எல்லா பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
தொடர்புக்கு
பாண்டியன், செல்போன் : 95006 27289
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 10.01.15 www.vikatan.com |