மதிப்புக்கூட்டினால் 10 சதவிகித கூடுதல் வருமானம்
இந்தியாவில் தென்னை சாகுபடிப் பரப்பில் இரண்டாவது மாநிலமாக திகழ்ந்தாலும் தேங்காய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது தமிழகம். தொழில்நுட்பங்களை சரியான விகிதத்தில் பயன்படுத்திக்கொள்ளாதது, நீர் மேலாண்மையில் சறுக்கி இருப்பது, மதிப்புக்கூட்டல் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது ஆகியவைதான் இந்த முரண்பாட்டிற்குக் காரணம் என்கிறார்கள், வேளாண் ஆய்வாளர்கள். இவர்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிப்பது போல, இந்த விஷயங்களை எல்லாம் சரியாகக் கடைபிடிக்கும் விவசாயிகள், தென்னையில் தெம்பான வருமானம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தேனி மாவட்டம், அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோபால்சாமி.
எழுபது வயதான கோபால்சாமி தேங்காயாக விற்காமல், கொப்பரையாக்கி விற்பதுடன், உரிமட்டை, சிரட்டை ஆகியவற்றின் மூலமும் வருமானம் பார்த்து வருகிறார். அதோடு, தென்னைக்கு இடையில் எலுமிச்சை, கறிவேப்பிலை என ஊடுபயிர் சாகுபடி மூலமும் கூடுதல் வருமானம் பார்க்கிறார்.
தேனி – கண்டமனூர் சாலையில் இருக்கிறது, அம்பாசமுத்திரம். சுற்றிலும் கரடுமுரடான, நீராதாரம் அற்று வறண்டு காணப்படும் செம்மண் நிலப்பகுதி இங்கே நிற்கும் இவருடைய தென்னை மரங்கள் பசுமை கட்டி வரவேற்கின்றன.
மொத்தம் 12 ஏக்கர். இதில் 9 ஏக்கரில் தென்னை இருக்கிறது. தென்னைக்கிடையில் இரண்டரை ஏக்கரில் ஊடுபயிராக எலுமிச்சையும், இரண்டரை ஏக்கரில் ஊடுபயிராக கறிவேப்பிலையும், ஒரு ஏக்கரில் ஊடுபயிராக சேப்பங்கிழங்கும் சாகுபடி செய்து கொண்டிருக்கிறார். மூன்று ஏக்கரில் தென்னை மட்டும் தனி மரமாக நிற்கிறது. தென்னந்தோப்பு போக, மீதி மூன்று ஏக்கரில் காய்கறிகளை மாற்றி மாற்றி சாகுபடி செய்கிறார். முழுமையாக இயற்கை விவசயாம் இவரால் செய்ய முடியவில்லை. எனவே இயற்கை பாதி செயற்கை பாதிதான் செய்கிறார். இப்போது வயலில் தக்காளி இருக்கிறது. ஆரம்பத்தில் வியாபாரிகளுக்குத்தான் தேங்காய் போட்டுக்கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். 600 காய் இறக்கினால் 400 காய்கள்தான் தரமானதாக இருக்கும். அந்த காய்களுக்குத்தான் முழு விலை கொடுப்பார்கள். மீதமிருக்கும் காய்களுக்கு பாதி விலைதான் கொடுப்பார்கள். அதில்லாமல், 100 காய்களுக்கு 4 லாபக்காய் வேறு கொடுக்க வேண்டும். அதற்குப்பிறகு தான் கொப்பரையாக விற்க ஆரம்பித்தார்.
சோம்பல்பட்டால் சோதனைதான்
9 ஏக்கரில் தென்னை இருந்தாலும், மரங்கள் பல வயதில் இருப்பதால் ஏழு ஏக்கரில்தான் மகசூல் கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஏக்கருக்கு 70 மரம் என்று கிட்டத்தட்ட 500 மரங்கள் காய்ப்பில் இருக்கிறது. ஆரம்பத்தில் வியாபாரிகளுக்கு விற்காமல், நேரடியாக காங்கேயம் சந்தையில் விற்றார். அப்போது காய்க்கு ஒன்றரை ரூபாய் அதிகமாக கிடைத்தது. பிறகு, கொம்பரையாக மாற்றி விற்பனை செய்ய ஆரம்பித்தார். இப்போது காய்க்கு மூன்று ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. 500 மரங்களிலிருந்து வெட்டுக்கு 10 ஆயிரம் காய்கள் என்று வருடத்திற்கு70 ஆயிரம் காய்கள் கிடைக்கிறது. ஒரு காய்க்கு மூன்று ரூபாய் கூடுதலாக கிடைக்கும்போது 70 ஆயிரம் காய்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. காயை வெட்டி கொப்பரையாக்க சோம்பல் பட்டு அப்படியே வியாபாரிகளுக்கு விற்றால் 2 லட்ச ரூபாய் நட்டம்தான் ஆகும் என்கிறார் கோபால்சாமி.
ஒவ்வொரு வியாபாரியும், ஒரு பொருளை எந்த சந்தையில், எப்ப விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு வியாபாரம் செய்கிறார்கள். அதனால்தான் லாபம் கிடைக்கிறது. ஆனால் விவசாயிகள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தோட்டத்திற்கு வந்து யார் எடுத்து செல்கிறார்களோ அவர்களுக்கு விற்று விடுகிறார்கள். இவர் எதையும் அறுவடை செய்ததும் விற்றுவிடாமல், விலை கிடைக்கும்போது சேமித்து வைத்து விற்கிறார். உதாரணமாக மூன்று ஏக்கரில் வெங்காயம் பயிர் செய்திருக்கிறார். 15 டன் வெங்காயம் கிடைத்தது. அப்போது கிலோ ரூபாய் 20 கேட்டார்கள். இரண்டு மழை வந்தால் விலை கூடும் என்று இருப்பு வைத்திருந்தார். கொஞ்ச நாள் முன்பு மதுரை பரவை மார்க்கெட்டில் விற்பனை செய்தபோது கிலோவுக்கு சராசரியாக 40 ரூபாய் கிடைத்தது.
இந்த மூன்று ஏக்கரில் வெங்காய அறுவடை முடிந்தவுடன் தக்காளி போட்டார். இதுவரைக்கும் 50 ஆயிரம் ரூபாய்க்கு தக்காளி எடுத்துள்ளார். தக்காளியில் 2 லட்ச ரூபாய் வரைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாக கூறுகிறார். ஆனால், மழையால் சாத்தியமில்லாமல் போய்விட்டது. வெங்காயம், தக்காளி என்று இந்த 3 ஏக்கரில் ஒரு வருடத்திற்கான உற்பத்தி செலவு மொத்தம் 2 லட்ச ரூபாய். வரவு என்று பார்த்தால் வெங்காயம் மூலமாக 6 லட்சம், தக்காளி மூலமாக ஒரு லட்சம் மொத்தம் 7 லட்சம். இதில் செலவு போக 5 லட்ச ரூபாய் லாபம். இது தான் திட்டம்போட்டு செயல்பட்டதால் கிடைத்தது என்கிறார் கோபால்சாமி.
ஊடுபயிரில் உன்னத லாபம்
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் கறிவேப்பிலையை ஊடுபயிராக சாகுபடி செய்திருக்கிறார் கோபால்சாமி. இதைப்பற்றி கூறும்போது, எல்லாம் ஏழு வயதான தென்னை மரங்கள். 25 அடிக்கு 25 அடி இடைவெளியில் இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு வரிசைக்கு வரிசை 4 அடி, செடிக்கு செடி 2 அடி இடைவெளியில் நாட்டுரக கறிவேப்பிலை நடவு செய்தார். கிட்டத்தட்ட 5 ஆயிரம் செடிகள் இருக்கும். இது நாட்டுரகம் என்பதால் இலைகள் சின்னதாக ஊசி போன்று இருக்கும். மற்ற கறிவேப்பிலையைவிட, இந்த ரக கறிவேப்பிலைக்கு கிலோவுக்கு 5 ரூபாய் கூடுதல் விலை கிடைக்கிறது. தென்னைக்கும் கறிவேப்பிலைக்கும் சொட்டு நீர்ப்பாசனம்தான். இந்த ஒரு ஏக்கரிலிருந்து வருடத்திற்கு 30 டன் கறிவேப்பிலை கிடைக்கிறது. சராசரியாக கிலோ 10 ரூபாய் என்று வைத்துவிட்டாலும் 3 லட்ச ரூபாய் கிடைக்கும். இதில், தென்னைக்கும் சேர்ந்து உற்பத்தி செலவு ஒரு லட்ச ரூபாயைக் கழித்துவிட்டால் கறிவேப்பிலையில் மட்டும் 2 லட்ச ரூபாய் லாபம். இதேபோல், இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை போட்டு, வருடத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் குத்தகைக்கு விட்டிருக்கிறார். இப்படி திட்டம் போட்டு பயிர் செய்தால் விவசயாத்தைவிட லாபகரமான தொழில் வேறுயில்லை என்கிறார் கோபால்சாமி.
தொடர்புக்கு
கோபால்சாமி
செல்போன் – 94436-31797
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 10.12.14 www.vikatan.com |