முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

4.5 ஏக்கர்… ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்
தொடர் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தால், ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும், பலரும் இதில் இறங்கத் தயங்குவதற்குக் காரணம், ஆடு, கோழி, மாடு என அனைத்தையும் மொத்தமாக வாங்க அதிக செலவு பிடிக்கும் என எண்ணுவதுதான். ஆனால் குறைந்த முதலீட்டிலேயே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, நல்ல வருமானம் எடுக்க முடியும் என்று எடுத்துச் சொல்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், நாலாள்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்.

செங்கலுக்குப் பதில் கால்நடை வளர்ப்பு
இவர் அண்ணன், தம்பிகள் நான்கு பேர். இவரது அப்பாவால் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. அதனால் செங்கல் சூளை தொழிலில் இறங்கினார். கிடைத்த வருமானத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கினார். மானாவாரியாக கடலை, கொள்ளு என்று சாகுபடி செய்தார். வருமானம் குறைவாக இருந்தாலும் நிலத்தை சும்மா போட்டு வைக்காமல் விவசாயம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் செங்கல் தொழிலில் வேலையாட்கள், எரிபொருள், மண் எல்லாவற்றிலும் பிரச்சனை காரணமாக பால்மாடு வளர்க்க முடிவெடுத்தார். ஏற்கனவே இரண்டு கறவை மாடுகள் வைத்திருந்தார். அதோடு ஆறு கலப்பின மாடுகளை ஈரோட்டிலிருந்து வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாடும் தினமும் 15 லிட்டரிலிருந்து 20 லிட்டர் வரைக்கும் பால் கறந்தது. இந்த நிலையில் இவருடைய நண்பர் ஆட்டுப் பண்ணை வைப்பதற்காக தலைச்சேரி ஆடு வாங்கப்போனார். கூடவே இவரையும் அழைத்துக்கொண்டு போனார். அப்போது இவரும் இரண்டு சினை ஆடுகளை வாங்கி வந்தார். அவை ஒவ்வொன்றும் இரண்டு குட்டிகள் போட்டது. ஆட்டு வளர்ப்பில் ஆர்வம் வந்துவிட்டது இவருக்கு. உடனே பரன் அமைத்தார்.

சொந்த நிலம் போக, குத்தகைக்கு ஒன்றரை ஏக்கர் எடுத்திருக்கிறார். மொத்தம் நாலரை ஏக்கரில் நாலாவது கட்டை கரும்பும், ஒன்றரை ஏக்கரில் மரவள்ளியும் இருக்கிறது. ஒரு ஏக்கர் 40 சென்டில் பசுந்தீவனம் இருக்கிறது. அதற்கு மாட்டு சாணமும், ஆட்டு எருவும் தான் உரம். மாட்டுச் சிறுநீரை, செட்டுநீரில் கலந்து கரும்புக்கு விட்டு கொண்டிருக்கிறார். வேறு எந்த உரமும் வைப்பதில்லை. இந்த ஊட்டத்திலேயே நன்றாக வளர்கிறது என்ற ராமச்சந்திரன், தன்னுடைய ஒருங்கிணைந்த பண்ணையில் இருக்கும் மாடு, ஆடு, கோழி, மரவள்ளி, கரும்பு என்று ஒவ்வொன்றாக விவரித்தார்.

5 மாடு ஆண்டுக்கு ரூ.2 லட்சம்
மொத்தம் இருக்கும் 10 மாடுகளில், 3 கன்றுக்குட்டிகள் போக 7 மாடுகள் இருக்கிறது. இதில் 5 மாடுகள் வருடம் முழுக்க கறவையில் இருக்கிறது. தினமும் சராசரியாக 50 லிட்டர் வீதம், ஒரு மாதத்திற்கு 1,500 லிட்டர் பால் கிடைக்கிறது. தனியார் பால் கம்பெனிக்குத் தான் ஊற்றுகிறார். ஒரு லிட்டர் பாலுக்கு சராசரியாக 22 ரூபாய் விலை கிடைக்கிறது. (இந்த விலை கடந்த மாத நிலவரத்தின் விலை. புதிய விலை தனியார் பண்ணைகள் இன்னும் கொடுக்கவில்லை). 1,500 லிட்டர் பாலுக்கு 33 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் தீவனம், மருத்துவச் செலவு, ஆள் கூலி எல்லாம் சேர்த்து 15 ஆயிரம் போக, 18 ஆயிரம் ரூபாய் லாபம். வருடத்திற்கு 2 லட்சத்து 16 ஆயரம் ரூபாய்.

30 ஆடு, ஆண்டுக்கு ரூ.3 லட்சம்
ஆரம்பத்தில் வாங்கிய இரண்டு பெட்டை ஆடுகள் மூலமாக கிடைத்த குட்டிகளை பெருக்கியதில் இப்போது 30 பெட்டை, 10 கிடா, 18 குட்டிகள் கொட்டகையில் இருக்கிறது. ஆடுகள் இரண்டு வருடத்திற்கு 3 முறை குட்டிகள் ஈனும். தலைச்சேரி ஆடுகள் 2 குட்டிகளிலிருந்து 4 குட்டிகள் வரை ஈனும். ஒரு ஈத்துக்கு சராசரியாக இரண்டு குட்டிகள் என்று வைத்துக்கொண்டாலும் 30 ஆடுகள் மூலமாக இரண்டு வருடத்தில் 180 குட்டிகள் கிடைக்கும். இதை, வருடத்திற்கு 90 குட்டிகள் என்று ஒரு கணக்காக பிரித்துக்கொள்ளலாம். 6 மாதம் வளர்த்து, ஒரு ஆடு சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் என்று விற்பனை செய்தால் (சராசரியாக ஒரு ஆடு 24 கிலோ எடைக்கு வரும். உயிர் எடையாக கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்)  4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் தீவனம் பராமரிப்பு செலவு, ஆட்கள் கூலியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு போக, வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் லாபம்.

பரணுக்குக் கீழே கோழி
ஆட்டுப் பரணுக்கு கீழ் பகுதி இடம் காலியாக இருந்தது. அதில் ஒரு ஜோடி சண்டைக் கோழிக் குஞ்சுகளை வாங்கி விட்டார். அதன் மூலமாக கிடைத்த முட்டைகளை அடைவைத்து கோழிகளை பெருக்கினார். போன ஒரு வருடத்தில் மட்டும் 50 ஆயிரம் ரூபாய்க்கு கோழி விற்பனை செய்துள்ளார். இப்போது 9 பெட்டை, 5 சேவல், ஒரு மாத வயதில் 15 குஞ்சுகளும் நிற்கிறது. ஆட்டுப் புழுக்கையில் உற்பத்தியாகின்ற புழுக்களை கோழிகள் சாப்பிடுகின்றன. தினம் கொஞ்சம் அரிசி போடுகிறார்கள. மேய்ச்சல் முறையில் வளர்ப்பதால், 6 மாதத்தில் 2 கிலோவில் இருந்து, 3 கிலோ வரை ஒவ்வொரு கோழியும் எடை வந்துவிடும்.

30 சண்டைக் கோழியில் ரூ.50 ஆயிரம்
9 பெட்டைக் கோழியிலிருந்து வருடத்திற்கு சராசரியாக 324 முட்டை கிடைக்கும். இதில் 150 முட்டைகளை அடைத்து வைத்தால், 100 குஞ்சுகள் கிடைக்கும். 6 மாதம் வளர்த்து விற்பனை செய்கிறார். சராசரியாக ஒரு கோழி இரண்டு ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும், மொத்தம் 200 கிலோ. உயிர் எடைக்கு ஒரு கிலோ 300 ரூபாய் என்று விற்பனை செய்தாலும் 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு முட்டை 10 ரூபாய் என்று 150 முட்டை மூலம் 1500 ரூபாய் கிடைக்கும். கோழி, முட்டை மூலமாக கிடைக்கும் 61 ஆயிரத்து 500 ரூபாயில் தீவனச் செலவு போக, 50 ஆயிரம் ரூபாய் லாபம்.

தீவனம்
ஆடு, மாடுகளுக்கான தீவனப் பராமரிப்பு ஒரு ஏக்கரில் கே-4, 10 சென்டில் வேலிமசால், 10 சென்டில் அகத்திக் கீரை, 20 சென்டில் சூபாபுல் போட்டிருக்கிறார். இவை எல்லாவற்றையும் தான் பசுந்தீவனமாக ஆடு, மாடுகளுக்குக் கொடுக்கிறார். ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் காலை, மாலை என்று இரண்டு வேளை 20 கிலோ கோ 4, 2 கிலோ குச்சித் தீவனம், 40 கிராம் மினரல் மிக்சர் என்று கலந்து கொடுக்கிறார். ஒவ்வொரு ஆட்டுக்கும் காலையில் 500 கிராம் வேலிமசால், 500 கிராம் சூபாபுல், 50 கிராம் அகத்தி, 2 கிலோ கோ - 4 என்று கலந்து ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொடுக்கிறார். மாலை நேரம் ஒவ்வொரு ஆட்டுக்கும் 200 கிராம் அடர் தீவனம், 10 கிராம் மினரல் மிக்சர் கலந்த கொடுக்கிறார்.

ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்கும் மரவள்ளி
ஒன்றரை ஏக்கரில் இருக்கும் மரவள்ளியிலிருந்து 15 டன் கிழங்கு கிடைக்கும். இப்போதைய நிலவரப்படி, கிலோ 6 ரூபாய்க்கு போகிறது. அந்த வகையில் 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் 40 ஆயிரம் ரூபாய் செலவு போனாலும், 50 ஆயிரம் ரூபாய் லாபம்.

ஒன்றரை ஏக்கர் கரும்பு ரூ.50 ஆயிரம்
ஒன்றரை ஏக்கரில் குறைந்தபட்சம் 45 டன் கரும்பு கிடைக்கும். ஆலைக்கு அனுப்பினால் ஒரு டன்னுக்கு 2 ஆயிரத்து 550 ரூபாய் வீதம், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 750 ரூபாய் கிடைக்கும். செலவு போக 50 ஆயிரம் ரூபாய் லாபம்.

ஆக, மாடு, ஆடு, கோழி, மரவள்ளி, கரும்பு என்று எல்லாவற்றையும் சேர்த்தால் வருடத்திற்கு 11 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வருமானம். 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் லாபம். இந்த லாபத்தை, நாலரை ஏக்கர் நிலத்திலிருந்து வருடம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பதாக சந்தோஷமாக கூறுகிறார்.

தொடர்புக்கு
ராமச்சந்திரன்
செல்போன் 97862-58531
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 10.12.14 www.vikatan.com

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015