முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

ஏக்கருக்கு ரூ.2.5 லட்சம்…இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்
குறைந்த தண்ணீர், நிறைவான மகசூல்
திட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல் கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இந்த வரிசையில் இணைகிறார் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான இலாபம் ஈட்டி வருகிறார்.

தமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதை மேடு பகுதியில், பொட்டல் காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின உழைப்பின் மூலம் எழில்கொஞ்சும் தோட்டமாக மாற்றியிருக்கிறார். குரியன் ஜோஸ். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள், தங்களின் பயணத்தினூடே இவருடைய பண்ணையையும் பார்வையிட வருமளவுக்கு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார் குரியன்.

தென்மேற்குப் பருவக்காற்று சிலுசிலுக்கும் கூடலூர்-குமளி தேசிய நெடுஞ்சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தம்மனம்பட்டி விலக்கு. வலது பக்கம் பிரியும் தார் சாலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது கழுதைமேடு. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு. வேலியில் பச்சை நிற நிழல் வலை சுற்றப்பட்ட ‘ஹார்வெஸ்ட் ஃபிரஷ்’ பண்ணை வரவேற்கிறது.

அன்று மானாவாரிக் கரடு, இன்று மாதுளைத் தோட்டம்
குரியன் எர்ணாகுளத்தில் எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்கிறார். விவசாயத்தில் இவருக்கு ஆர்வம் உண்டு. குமுளி, மூணாறு என்று கேரளாவை ஒட்டிய பகுதியாக இருப்பதால் தேடி அலைந்து இந்த இடத்தை வாங்கியுள்ளார். தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. சூழல் அதிகம் மாசுபடாத பகுதி. சுற்றியலும் மலைப்பகுதியாக இருப்பதால் பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு வாங்கும்பொழுது பொட்டல்வெளி. இந்த இடத்தை வாங்கியதும் இயற்கை விவசாயம்தான் என்று முடிவெடுத்திருக்கிறார். மொத்தம் இருப்பது 35 ஏக்கர். இதில் கிட்டத்தட்ட 30 ஏக்கரில் 10 ஆயிரம் மாதுளை செடிகள் இருக்கின்றன. இதில், 7 ஆயிரத்து 500 செடிகள் மகசூல் வந்துகொண்டு இருக்கிறது. மற்ற இடங்களில் பண்ணைக் குட்டை, மாட்டுக்கொட்டகை, பேக்கிங் ரூம், பணியாளர் குடியிருப்பு, பண்ணை வீடு, பறவைகளுக்கான கொட்டகைகள் இருக்கிறது. இதை முழுமையான ஒருங்கிணைந்தப் பண்ணையாக வடிவமைத்திருக்கிறார் என்றபடி மாதுளை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார்.

பராமரிப்பு தருமே பணம்
முழுக்க இயற்கை முறையில்தான் விளைவிக்கிறார்கள். அதனால் பழங்கள் வெடித்து கிழே விழுந்துவிடுகிறது. காய்களோட தோல் சொறி சொறியாக இருக்கிறது. நம்ம ஆட்கள் கடைக்குப் போனதும் பளபள என்று இருக்கும் பழங்களைத்தான் முதலில் எடுக்கிறார்கள். ஆனால் அது இரசாயத்தில் விளைந்தது என்று யாரும் எண்ணுவதில்லை. இவர் பழங்களை ஆரம்பத்தில் வாங்க தயங்கியவர்கள் உரித்துப் பார்த்தவுடன் தெளிவான முத்துக்களோடு இரத்தச் சிவப்பிலிருப்பதைப் பார்த்து வாங்கத் தொடங்கினார்கள். ருசியும் நன்றாக இருக்கிறது. இதை அறிந்துகொண்டதால் கேரளாவில் இருக்கின்ற கடைகளில் இவர் பழங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டு ஆர்டரும் கிடைத்திருக்கிறது என்கிறார் குரியன்.
இந்த இரகத்திற்குப் பெயர் பக்வா. 12 அடிக்கு 10 அடி, 10 அடிக்கு 10 அடி என்று ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இடைவெளியில் நடவு செய்திருக்கிறார். உலகளவில் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்யும் நுட்பங்களை இன்டர்நெட் மூலமாகவும், சில வேளாண் அறிஞர்கள், ஆலோசகர்கள் மூலமாகவும் தெரிந்துகொண்டு செயல்படுத்துகிறார்கள். மாதுளை ஒரு மென்மையான பயிர். இதை, கைக்குழந்தையைப் பராமரிப்பது போல பராமரிக்க வேண்டும். மாதுளை விவசாயத்தோட வெற்றி, தோல்வி இரண்டுமே பராமரிப்பில் தான் இருக்கிறது.

இயற்கை முறை மாதுளை சாகுடி
பண்ணையை முழுக்கப் பராமரிப்பவர், அதன் மேலாளர் ஜான் தாமஸ். இவர் மாதுளை சாகுபடி பற்றி விவரித்தார். இவர்களது பண்ணையில் கேரளாவோட பாரம்பரிய ரகமான காசர்கோடு குட்டை, தமிழ்நாட்டின் பாரம்பரிய மாடான காங்கேயம் என்று நாட்டு மாடுகள் பத்து இருக்கிறது. இந்த மாடுகளின் சிறுநீர், சாணத்தை வைத்து ஜீவாமிர்தத்தை இவர்களே தயார் செய்கிறார்கள். பண்ணைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவை வைத்து கம்போஸ்ட் தயாரிக்கிறார்கள். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள். எல்லா மரங்களுக்கும் மூடாக்கு போட்டிருக்கிறார்கள். தொழுவுரத்தையும், உயிரிப் பூச்சி கொல்லியையும் வெளியில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் சாகுபடிச் செலவு குறைகிறது. இவர்களது பண்ணைக்கு ஆர்கானிக் சான்றிதழ் இருக்கிறது என்கிறார் ஜான் தாமஸ். மாதுளை சாகுபடி முறைகளைப் பற்றி விளக்கினார்.

மாதுளை, களிமண்ணைத் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடுவது சிறந்த முறை. 2 அடி சதுரம், 2 அடி ஆழத்திற்குக் குழியெடுத்து ஆறவைத்து ஒவ்வொரு குழியிலும், 10 கிலோ தொழுவுரம், 5 கிலோ மண்புழு உரம் போட்டு செடியை நடவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மண்புழு உரம் வைத்து வர வேண்டும். மூன்றாம் மாதத்தில் இருந்து, வாரம் ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனத்துடன், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களில் செடியில் பூ எடுக்கத் தொடங்கும். ஆனால், அந்த பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே, காய்ப்புக்கு விட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்கவிட்டால், செடியின் வளர்ச்சி தடைபடும். ஆறாவது மாதம் செடியில் அதிகக் கிளைகள் இருக்கும். இந்த சமயத்தில், நன்கு தடிப்பான, வாளிப்பான நான்கு கிளைகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை கவாத்து செய்து (கழித்துவிட) வேண்டும். செடிகள் காய்க்க ஆரம்பிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கவாத்து செய்ய வேண்டும். காய்க்க ஆரம்பித்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் போதுமானது.

ஒரு மாதம் ஓய்வு
பூக்க ஆரம்பித்ததில் இருந்து, 160 முதல் 180 நாட்கள் கழித்துதான் பழத்தை அறுவடை செய்ய முடியும். ஒவ்வோர் ஆண்டும் செடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். டிசம்பர் மாத்தில் தண்ணீர் கொடுக்காமல், செடியை வாட விட வேண்டும். ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் காய்ந்த நிலையில் இருக்கும்போது, ஜனவரி மாதம் தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இப்படி வாட விட்டு தண்ணீர் கொடுப்பதால், செடிகள் அதிக பூக்கள் பூத்து, நல்ல மகசூல் கிடைக்கும். ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொடுத்தபிறகு, பூக்கும் பூக்கள் காயாக மாறி, ஜீலை மாதத்தில் அறுவடைக்கு வரும். அதிலிருந்து, நவம்பர் மாதக் கடைசி வரை அறுவடை செய்யலாம். பிறகு ஓய்வு கொடுத்துவிட வேண்டும்.

மாதுளையை அதிகம் தாக்குவது பழ ஈக்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள் தான். இதற்கு பயோ மருந்து அல்லது மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சோலார் விளக்குப் பொறிகள், மஞ்சள் ஒட்டு அட்டைகள் வைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பழங்களில் சில நேரங்களில் கருப்பு நிறத் துளைகள் இருக்கும். “ஃப்ரூட் போரல்” எனப்படும் இத்தாக்குதலை சமாளிக்க, 200 லிட்டர் தண்ணீரில், தலா 500 கிராம் டிரைக்கோ-டெர்மா விரிடி, சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம் என்றார், ஜான் தாமஸ்.

ஒருங்கிணைந்த பண்ணை
பண்ணையில் நாட்டுக் கோழிகள், கூஸ்வாத்துகள், கினியா கோழிகள், முயல், மீன் என அனைத்தையும் தனித்தனியாக கூண்டுகளில் பராமரிக்கிறார்கள். இங்குள்ள காசர்காடு என்ற குட்டை ரக மாடுகள், நம் ஊர் கன்றுக் குட்டிகள் அளவுக்குதான் இருக்கின்றன. இந்த சிறிய ரக மாடுகளின் சிறுநீர், சாணத்தில் ஜீவாமிர்தம் தயாரித்து தெளிக்கும்போது, பயிர்களின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாகச் சொல்கிறார் குரியன்.

உர மேலாண்மை
தொழுவுரம், மண்புழு உரம், தென்னைநார்க் கழிவு உரம் ஆகியவற்றை சுழற்சி முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்தாகக் கொடுத்து வர வேண்டும். தொழுவுரமாக இருந்தால், ஒவ்வொரு செடிக்கும் 10 கிலோவும், மற்ற உரங்களாக இருந்தால், 5 கிலோவும் வைத்தால் போதுமானது.

பாசனத்தில் இருக்கிறது வெற்றி
மாதுளைக்கு அதிக தண்ணீர் கொடுக்கக்கூடாது. காய்ச்சலும், பாய்ச்சலும் தான் மாதுளைக்கு உகந்தது. ஒரு முறைக்கு ஒரு செடிக்கு 15 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அந்த ஈரம் காய்ந்த பிறகே அடுத்த பாசனம் செய்ய வேண்டும். தினமும் தண்ணீர் கொடுத்தால், செடி நன்றாக வளரும் என நினைத்து, அதிக தண்ணீர் கொடுக்கக்கூடாது. அந்த பகுதியின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீர் அதிகமானால், பூக்கள் உதிர்ந்து விடும்.

செடிக்கு 10 கிலோ
தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்தால் மட்டும் போதாது, எதிர்பார்த்தபடி பழம் கிடைக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அதுக்கு செய்ய வேண்டிய சாகுடி முறைகளை, தொழில்நுட்பங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். இவர் இதை சரியாக செய்ததால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது. ஒரு செடிக்கு வருடத்திற்கு 200 ரூபாய் செலவாகிறது. ஒரு செடியிலிருந்து 10 கிலோ பழம் கிடைக்கிறது. ஒரு கிலோ சராசரியாக 120 ரூபாய் வீதம், பத்து கிலோவுக்கு 1,200 ரூபாய் கிடைக்கும். செலவு 200 ரூபாய் போக, ஒரு செடி மூலமாக வருடத்திற்கு 1000 ரூபாய் லாபம். 7 ஆயிரத்து 500 செடி மூலமாக 75 ரூபாய் லாபமாக கிடைக்கிறது. ஏக்கருக்கு சராசரியாக 2.5 லட்சத்திற்குக் குறையாமல் லாபம் வருகிறது என்கிறார் குரியன் ஜோஸ்.

தொடர்புக்கு
குரியன் ஜோஸ்
செல்போன் – 093886-10249
ஜான் தாமஸ் (மேலாளர்)
செல்போன் – 95780-72722
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.10.14 www.vikatan.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015