முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

ஒரு ஏக்கர்… 90 நாட்கள், ரூ.90 ஆயிரம்
இனிப்பான இலாபம் கொடுக்கும் ‘ஸ்வீட் கார்ன்’

புதுப்புது விசயங்களை தேடி அலைந்து தெரிந்துகொண்டு, ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்பு மக்காச்சோளத்தை சாகுபடி செய்து, நேரடியாக விற்பனை செய்து நல்ல இலாபம் ஈட்டி வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சேகர்.

சேகர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோதே அப்பா இறந்துவிட்டார். அம்மாதான், வெண்டைக்காய், கத்தரிக்காய் என்று விவசாயம் செய்து, இவரை வளர்திருக்கிறார்கள். தினமும், பள்ளிக்கூடம் போகும்போது காய்கறி மூட்டையைக் கொண்டு போய் மார்க்கெட்டில் போட்டுவிட்டு போயிருக்கிறார். இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி வரை படிக்க முடிந்தது. பிறகு அம்மாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க தொடங்கினார். அரை ஏக்கரில் கத்தரி, வெண்டை போடுவார்கள், மூன்று ஏக்கரில் நெல், மணிலா போடுவார்கள். அதில் எல்லாம் லாபம் குறைவாகத்தான் இருந்திருக்கிறது. அதனால், நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிர்களை தேட ஆரம்பித்தார். நண்பர் கொடுத்த யோசனையில் வெள்ளரி, பீட்ரூட், பீன்ஸ், கேரட் என்று சாகுபடி செய்ய ஆரம்பித்தார். கேரட் சரியாக வரவில்லை. மற்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைத்தாலும் நல்ல விலை கிடைக்காமல் பழைய பயிர்களுக்கே மாறியிருக்கிறார் சேகர்.

லாபத்தைக் கூட்டிய உழவர் சந்தை
தமிழ்நாட்டில் இரண்டாவது உழவர் சந்தை, திருவண்ணாமலை உழவர் சந்தைதான். இங்கு இவருக்கு காய்கறிகளை விற்பனை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் பாகல், புடலை, பீர்க்கன் என்று சாகுபடி செய்ய ஆரம்பித்தார். கமிஷன் கடையில் கிடைப்பதை விட ஆறு ஏழு ரூபாய் அதிகமாக கிடைத்திருக்கிறது.

கேத்தனூர் பழனிச்சாமி ஐயா அறிமுகம் இவருக்கு கிடைத்திருக்கிறது. அவரிடம் இயற்கை விவசாயத்தை கற்றுக்கொண்டார். இப்போது நான்கு வருடமாக இயற்கை முறையில் சாகுபடி செய்கிறார். மூன்று வருடத்தில் 2 ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்திருக்கிறார். அதை பெங்களூரு, கோயம்பேடு என்று அனுப்பினார். அங்குதான் பெங்களுரில் இருந்து விற்பனைக்கு வந்த இனிப்பு மக்காச்சோளத்தை பார்திருக்கிறார். அதைப்பற்றி விசாரித்து, பெங்களூரிலிருந்து விதை வாங்கி 50 சென்டில் போட்டதில் 3 டன் மகசூல் கிடைத்தது. உழவர் சந்தையிலேயே விற்பனை செய்துள்ளார். அதனால் அடுத்தும் அதை சாகுபடி செய்திருக்கிறார். இப்போது விளைந்து நிற்கிறது. இதற்கு கொஞ்சமாக ரசாயன உரத்தை பயன்படுத்தியிருக்கிறார். இப்போது இதையும் இயற்கையில் சாகுபடி செய்யும் வழிமுறைகளை தெரிந்துகொண்டதாக கூறிய சேகர், இனிப்பு மக்காச்சோள சாகுபடி முறையை விளக்கினார்.

ஏக்கருக்கு 4 கிலோ விதை
இனிப்பு மக்காச்சோளத்தின் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண்வகை உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ரோட்டோவேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கிக் கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி, ஏக்கருக்கு 3 டிப்பர் என்ற கணக்கில், தொழுவுரம் கொட்டிக் களைத்துவிட வேண்டும். ஓர் அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அனைத்து, அதன் மையத்தில் ஓர் அடிக்கு, ஒரு விதை வீதம் ஓர் அங்குல ஆழத்தில் நடவு செய்து, தண்ணீர் கட்ட வேண்டும். ஏக்கருக்கு, 4 கிலோ விதைகள் தேவைப்படும்.

10 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம்
விதைத்த மூன்றாம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்டவேண்டும். பிறகு, மண்ணின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாளில் களை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும். தொடர்ந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை. 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை. பெரும்பாலும், பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. கதிர் வருவதற்கு முன்பாக பூச்சிகள் தாக்கினால், மூலிகை பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.

75-ம் நாளில் முதல் அறுவடை
55-ம் நாளில் ஆண் பூவெடுக்கும். 60-ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75-ம் நாளில் இருந்து, கதிர் முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து, 90-ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவுக்கு, கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும், அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு மூன்று, நான்கு கதிர்கள் கிடைக்கும்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம்
இவர் தினமும் 200 கிலோவிலிருந்து 300 கிலோ வரை அறுவடை செய்து, ஒரு கிலோ 20 ரூபாய் என்று உழவர் சந்தையில் விற்பனை செய்கிறார். ஒரு ஏக்கரில் கிடைக்கும் 6 டன் கதிர் மூலமாக, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். 30 ஆயிரம் ரூபாய் செலவு போக, 90 ஆயரம் ரூபாய் லாபமாக கிடைக்கும். இதை நேரடியாக விற்பனை செய்யாமல், கமிஷன் கடைக்கு அனுப்பினால் 50 அயிரம் ரூபாய்தான் லாபம் கிடைக்கும். அதனால் நேரடி விற்பனைதான் சிறந்தது என்கிறார் சேகர்.

தொடர்புக்கு
சேகர்
செல்போன் – 97876-00991
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.11.14 www.vikatan.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015