முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

"மா"வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்

பா .இளங்கோவன் ,
தோட்டக்கலை உதவி இயக்குனர்,
உடுமலை ,
தொடர்பு எண் : 98420 07125

     ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தனது நிலத்திற்கு "அங்ககச் சான்று ' பெற முன்வர வேண்டும் . இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழி உள்ளது. குறிப்பாக "அல்போன்சர் ' ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த ரகம் பிரசித்தி பெற்று நல்ல விலை தருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது . இயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழி உள்ளது . சுற்றுச்சூழல் பாதிக்காது. உடல் நலம் பேணவும் , சந்ததியினருக்கு புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவதால் எல்லா இடத்திலும் எல்லாப் பயிருக்கும் பலவித உத்திகள் உள்ளதால் நல்ல மகசூல் மட்டுமல்ல . வரவையும் பல மடங்கு அதிகரிக்கலாம். இயற்கை வேளாண்மைக்கு உறுதுணையான பல இடுபொருட்களில் உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தக கவ்யா, மண்புழுகுவியல்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோலா, பசுந்தழை உரங்கள், பசுந்தழை உரப்பயிர் பயன்பாடு, பயிர் கழிவுகள் உரமாக்குதல், மிருக கழிவுகள், கம்போஸ்ட் வகைகள் பயன்பாடு பலவித சாம்பல்கள், பலவித பிண்ணாக்கு மற்றும் இலைச்சாறுகள் உள்ளன . இவை தவிர விவசாயிகள் கடைபிடித்திட உதவும் உழவியல் உத்திகளாக பல பயிர் சாகுபடி ஊடுபயிர் சாகுபடி, நிலப்போர்வை உதவும் . பசுந்தாள் உரப் பயிர்களான சீமை அகத்தி , சணப்பை தக்கைப்பூண்டு, பில்லிப்பயறு கொளுஞ்சி, அவுரி முதலியவற்றை பயிர் சுழற்சியில் சேர்த்தல் நல்லது.

      பசுந்தழைச் செடிகள் கிளைரிசிடியா, ஆவாரை, ஆடாதோடா, எருக்கு மற்றும் மலைப்பூவரசு , பூவரசு மற்றும் புங்கம் மரங்களையும் பயன்படுத்தலாம் . தமது தோட்டத்திற்கு தேவையான மண்புழு உரத்தினை அங்கே வளர்க்கப்படும் மிருகங்களான ஆடு , மாடு, குதிரை மற்றும் செம்மறி ஆடு முதலியவற்றில் கழிவுகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம் . அங்கே கிடைக்கும் கழிவுகளை மீள் சுழற்சி செய்து பயன்படுத்துவது அற்புத செலவில்லா உத்தியாகும் . எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் பலவித எளிய உத்திகளுடன் ஏற்ற ஊடுபயிர் மற்றும் இணைபயிர் தேர்வு செய்தால் கூடுதல் வரவும் உண்டு. தேனீ வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பும் , இதர பறவைகளான கோழி, வாத்து, காடை, வான்கோழி வளர்ப்பதும் வாய்ப்புள்ள தருணம் மேற்கொள்ளலாம் . பாரம்பரிய உத்திகளில் விதை நேர்த்திக்கு புகையிலைச்சாறு பயன்பாடு, சாணிப்பால் பயன்பாடு செம்மண் கலந்து விதைகளை முலாம் பூசுதல் உரிய பருவம் விதைப்பது, பறவை இருக்கையாக பழைய பானைகள் பயன்பாடு, பொறிப்பயிராக ஆமணக்கு, பொரியல் தட்டை சாகுபடி முதலியன நெடுநாள் முதலாக வழக்கில் உள்ளதால் தேவைப்படும் பகுதிகளில் பயன்படும். மா சாகுபடியில் மேற்கூறியுள்ள உத்திகளில் பலவற்றைக் கடைப்பிடித்தால் உயர் லாபம் பெறலாம்.

Updated on April, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015