|| | | ||||
 

வெற்றிக் கதைகள் :: வேளாண்மை

gg gg
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண்மை

குஷி தந்த குதிரைவாலி.. கலகலப்பாக்கிய கம்பு

கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர்.. மானாவாரியிலும் மனம் நிறைந்த மகசூல்!

ஏக்கருக்கு 74 மூட்டை! இயற்கை விவசாயத்தில்.. இன்னும் ஒரு சாதனை!

பழுதில்லாமல் பலன் கொடுக்கும் பாசுமதி!

செலவில்லாத தீவன சாகுபடி.. ஆரோக்கியத்தோடு அதிக பால்
கவலையில்லாத கால்நடை வளர்ப்பு


கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர்.. மானாவாரியிலும் மனம் நிறைந்த மகசூல்!

வழக்கமாக மானாவாரி விவசாயம் என்றாலே குறைந்த மகசூல், குறைந்த லாபம் மட்டும்தான் கிடைக்கும் என்று சொல்லும் விவசாயிகள் தான் அதிகம்.
இவர்களுக்கு நடுவே ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் கொஞ்சம் மாற்றி, பல பயிர் சாகுபடி செய்தால் நல்ல வருமானத்தை எடுக்கலாம் என்கிறார் அரியலூர் மாவட்டம், கீழபழுருக்கு அருகில் உள்ள கோக்குடியைச் சேர்ந்த தேவசகாயம்.

சொந்த நிலம் ஒரு ஏக்கர், குத்தகை நிலம் ஒரு ஏக்கர் என்று மொத்தம் இரண்டு ஏக்கரில் வெள்ளாமை செய்கிறேன். சொந்த நிலத்தில் தண்ணீர் வசதி இருப்பதால் நெல், செண்டுமல்லி, காக்கரட்டான் மூன்றையும் சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். குத்தகை நிலம் மானாவாரி பூமி என்பதால் ஒரு போகம் மட்டும்தான் விவசாயம் செய்ய முடியும். அதில் வெள்ளைச் சோளம், துவரை, செண்டுமல்லி மூன்றையும் சாகுபடி செய்து கொண்்டுக்கேன். சின்ன இடமாக இருந்தாலும், மூன்று பயிர் வெள்ளாமை என்பதால் நல்ல வருமானத்தைப்பார்க்க முடிகிறது.

வெள்ளைச் சோளம், துவரை, செண்டுமல்லி மூன்றிற்கும். வெம்மண், கரிசல் மண் வகைகள் ஏற்றது. மானாவாரி சாகுபடிக்கு ஆடிப் பட்டம்தான் சிறந்தது. ஆடி, ஆவணி, மாதங்களில் மழை பெய்து நிலம் ஈரமான பிறகு, சட்டிக் கலப்பை மூலம் உழுது மண்ணின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டும். பின் களைகள் நீங்கும் அளவிற்கு மூன்று உழவு போட வேண்டும்.

பின் 9 கிலோ வெள்ளைச் சோளம், 4 கிலோ துவரை இரண்டையும் சேர்த்து விதைத்து மண் மூடுமாறு ஒரு உழவு போட வேண்டும். நிலத்தின் ஈரப் பதத்தைப் பொறுத்து, ஒரு வாரத்தில் முளைவிட்டு விடும்.

செண்டுமல்லிக்கு நாற்று நடவு என்பதால் சோளம், துவரை விதைகளை விதைக்கும் சமயத்திலேயே 15 அடிக்கு 10 அடி அளவில் தனியாக நாற்றுக்காகப் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் 4 கூடை எருவைக் கொட்டி கலைத்து விட்டு, பின் செண்டுமல்லி விதையைத் தூவி (ஏக்கருக்கு அரை கிலோ விதைகள்) எருவையும் மண்ணையும் கலந்து விதைகள் மீது தூவி மூடுமாறு செய்ய வேண்டும். பின் தினமும் பூவாளியால் தண்ணீர் தெளித்து வர வேண்டும். இருபது நாட்களில் அது முளைத்து வந்துவிடும்.

இந்த சமயத்தில் சோளம், துவரை இரண்டும் ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கும். இதில் ஒரு முறை களை எடுத்து, 50 கிலோ 20 : 0 : 15 என்ற கலப்பு உரத்தை பரவலாகத் தூவ வேண்டும். இந்த சமயத்தில் ஒரு மழை பெய்திருந்தால் தான் செண்டுமல்லி நாற்றை நடவு செய்ய முடியும். எப்படியாவது ஒரு மழை தவறாமல் கிடைத்துவிடும். அந்த மழை பெய்த பிறகு செடிக்குச் செடி இரண்டரை அடி இடைவெளி இருக்குமாறு ஒன்றிரண்டு செண்டுமல்லி நாற்றுகளைச் சேர்த்து சேர்த்து நடவு செய்ய வேண்டும் (ஒரு ஏக்கரில் பத்தாயிரம் செடிகள் வரை நடலாம்) இரண்டிரண்டாக நடவு செய்யும் போது ஏதாவது ஒரு செடி கண்டிப்பாக முளைத்து விடும். சமயங்களில் இரண்டு செடிகளும் கூட நன்றாக வளர்ந்து பூ எடுக்கும். இதன் பிறகு களைகள் முளைத்தாலும் அதைப் பற்றி கவலையில்லை. இயற்கை மனது வைத்து மழை பொழிந்தால் மட்டும் போதும். பெரிதாக பூச்சித் தாக்குதல்களும் இருக்காது என்பதால் பூச்சிக்கொல்லிகள் அடிக்க தேவையில்லை.
சோளம் நடவு செய்த 60 – ம் நாள் முதல் 70 நாட்களுக்குள் பூ எடுத்து 90 – 100 நாட்களுக்குள் முற்றிவிடும். அதன் பிறகு சோளத்தை அறுவடை செய்து குச்சி வைத்து தட்டியோ, தார்ச் சாலையில் போட்டு அடித்தோ சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கரில் வெள்ளைச் சோளம், துவரை, செண்டுமல்லி
சாகுபடிக்கு ஆகும் செலவு – வரவு கணக்கு

விவரம்

செலவு

வரவு

குத்தகை

600

 

உழவு

2,000

 

விதைச் சோளம்

120

 

துவரை விதை

120

 

விதைப்பு

150

 

பூ விதை

500

 

பூ நடவு

1,000

 

உரம்

500

 

பூ அறுவடை

560

 

சோளம் அறுவடை

800

 

துவரை அறுவடை

400

 

பூ மூலம் வரவு

 

3,000

சோளம் வரவு

 

4,800

துவரை வரவு

 

8,000

மொத்தம்

6,750

15,800

நிகர லாபம்

 

9,050

பூ சராசரியாக கிலோ ரூ. 30 வீதம் 100 கிலோவிற்கும், சோளம் சராசரியாக மூட்டை
ரூ.800 வீதம் 6 மூட்டைகளுக்கும், துவரை கிலோ ரூ. 40 வீதம் 200 கிலோவிற்கும்
கணக்கிடப்பட்டுள்ளது.

செண்டுமல்லி நடவு செய்த 60 – ம் நாளில் பூ எடுக்க ஆரம்பித்துவிடும். அதிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒரு தடவை என்ற கணக்கில் ஒரு மாதத்திற்கு அறுவடை செய்யலாம். ஒரு முறைக்கு 10 முதல் 20 கிலோ வரை கிடைக்கும்.

துவரை நடவு செய்த நான்கரை மாதத்திற்குப் பிறகு பூ எடுத்து பிஞ்சுவிடும். ஆறு மாதத்திற்குப் பின்தான் அறுவடைக்கு வரும் அந்த சமயங்களில் ஒருவேளை அதிக மழை பெய்தால், நிலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துவரை முற்றியவுடன், அறுத்து கட்டிக்கட்டி செங்குத்தாக நிற்க வைத்தால், காய்ந்துவிடும். பின் அப்படியே தரையில் அடித்தால் துவரை உதிர்ந்துவிடும். துவரை அறுவடை முடிந்த பிறகு எஞ்சியிருக்கும் சோளத் தட்டையையும் அறுத்து எடுத்து ஆடு, மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சோளத்தை சுத்தப்படுத்தினால் 600 கிலோ (1 ஏக்கரில்) கிடைக்கும். ஒரு மூட்டை (100 கிலோ) 700 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஏழு அறுவடையும் சேர்த்தால் மொத்தம் 100 கிலோ செண்டுமல்லி கண்டிப்பாக கிடைக்கும். கிலோ 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரைக்கும் விற்பனையாகின்றது. துவரையை சுத்தப்படுத்தினால் 200 கிலோ (1 ஏக்கரில்) கிடைக்கும். கிலோ 40 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. எப்படியும் தேவையான அளவு மழை பெய்தால் மூன்றையும் சேர்த்து 9,000 ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும். அந்த சமயத்தில் பூ, பருப்பு இதற்கெல்லாம் தட்டுப்பாடு இருந்தால் லாபம் இன்னும் கூடும்.
மானாவாரி நிலம் என்பதால் குறைந்த நிலத்தில் விவசாயம் செய்வதுதான் நல்லது. அதேபோல் பெரும்பாலும் தேவையில்லாமல் வேலைக்கு ஆட்களைக் கூப்பிடாமல் நம் குடும்பத்தில் இருப்பவர்களே வேலையை செய்து கொண்டால் இன்னும் நிறைய செலவை மிச்சப்படுத்த முடியும். கால்நடைகளுக்கு உணவும் கிடைத்துவிடும். மானாவாரி வெள்ளாமையில் விளைவதை பெரும்பாலும் வீட்டுத் தேவைக்குதான் வைத்திருப்பார்கள். அது போக மிச்சத்தைதான் விற்பார்கள். அது போல தான் நானும் தேவைக்குப் போக மிச்சத்தைதான் விலைக்குக் கொடுப்பேன்.

தொடர்புக்கு:
தேவைசகாயம்,
கீழபழுருக்கு அருகில்,
அரியலூர் மாவட்டம்.
அலைபேசி: 99651 - 84437


ஏக்கருக்கு 74 மூட்டை! இயற்கை விவசாயத்தில்.. இன்னும் ஒரு சாதனை!

கர்னல். தேவதாஸ், “அடிப்படையில் நான் ஒரு இன்ஜினியர். இரண்டு முதுகலைப் பட்டங்களை வாங்கின நான், தமிழக பொதுப்பணித் துறையில் வேலை பார்த்தேன். பிறகு, இந்திய ராணுவத்தில் சேர்ந்து கரடனல் பொறுப்பு வரைக்கும் உயர்ந்தேன். பிறகு, விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு வந்து, சிறிது நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினேன்.

2007 ம் வருடம் சென்னையில் தமிழக அரசு நடத்தின விவசாயக் கண்காட்சியில் கலந்துகிட்ட பிறகு தான் இயற்கை விவசாயத்தைப் பற்றியும், பசுமை விகடன் பற்றியும் தெரியவந்தது. ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புக்களில் கலந்துகிட்டு, ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்திற்கு மாறிவிட்டேன். சென்ற வருடமே ‘அங்கக வேளாண்மை விவசாயி’ என்று முறைப்படி அரசாங்கத்திடம் பதிவும் செய்து கொண்டேன்.
கிச்சடிச் சம்பா நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 74 மூட்டை மகசூல் எடுத்து ‘அங்கக வேளாண்மையில் மாநிலத்திலேயே அதிக மகசூல் எடுத்தவர்’ என்று பாராட்டி முதல் பரிசை வழங்கியிருக்கிறது தமிழக வேளாண்மைத் துறை.

தொடர்ந்து காய்கறி உள்பட நிறைய பயிர்களை இயற்கை முறையில் செய்து கொண்டிருக்கிறேன். அதன் மூலமாக அற்புதமான விளைச்சல் கிடைக்கிறது. இந்த விஷயத்தை விவசாய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என்று அனைவரிடமும் கூறினேன். ஆச்சர்யம் அடைந்த மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் உடனடியாக என்னுடைய பண்ணையிலேயே இயற்கை விவசாயக் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்வதேடு உதவி கலெக்டரையும் அனுப்பி வைத்தார். நான் மேற்கொண்டிருக்கின்ற இயற்கை விவசாயத்தை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள மாவட்ட வேளாண்மைப் பயிற்சி அரங்கில் இருந்து இரண்டு குழுக்கள் வந்து சென்றது. பிறகு உழவர் சந்தையில் இயற்கைக் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக ஒரு கடையையும் கொடுத்தார்கள். இது எல்லாம் நான் நேசிக்கின்ற என் இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த மரியாதை.

அரிசியா விற்றால்தான் அதிக லாபம்!

“சென்ற வருடம் பிசான பருவத்தில் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) பத்து ஏக்கர் நிலத்தில் ‘கிச்சடிச் சம்பா’ பயிரிட்டிருந்தேன். அதுதான் அமோக மகசூலை அள்ளிக் கொடுத்து, முதல் பரிசையும் வாங்கிக் கொடுத்திருக்கு. ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நடவு நேரத்தில் ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் என்று, வழக்கமான முறையிலேயே நடவு செய்தேன். ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்திருந்தால் இன்னும் அதிக மகசூல் பெற்றிருக்கலாம்.
நெல்லை அப்படியே விற்காமல் அரிசியா மாத்தித்தான் விற்பனை செய்றது என்னுடைய வழக்கம். நெல்லை அரிசியாக மாற்றும்போது மொத்த நெல்லில் 60% அரிசி கிடைக்கும். அந்த அரிசியை உழவர் சந்தையில் இருக்கிற கடையில் வைத்து கிலோ 40 ரூபாய் என்று விற்பனை செய்றேன். அதனால் எனக்குக் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. பாரிசு பெறும் அளவிற்கு அதிக மகசூல் பெற்றுத் தந்த தன்னுடைய சாகுபடித் தொழில்நுட்பம் பற்றிக் கூறினார்.

விதைநேர்த்தி அவசியம்!

“நிலத்தை உழவு செய்து தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள், பயிறு வகைகள், கொளுஞ்சி, சணப்பு விதைகளைக் கலந்து ஏக்கருக்கு இருபத்தைந்து கிலோ வீதம் விதைக்க வேண்டும். அவை பூக்கும் சமயத்தில் அப்படியே மடக்கி உழுது, ஆட்டுக்கிடை போட்டு, மறுபடியும் உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு நூறு கிலோ மட்கிய தொழுவுரம், பத்து கிலோ கனஜீவாமிர்தம், ஆகியவற்றை அடி உரமாக போட்டு, தொழி கலக்க வேண்டும். 20 கிலோ நெல் விதையை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நாற்றுப் பாவ வேண்டும். நாற்றுகளைப் பதினைந்து நாளில் பறித்து, வழக்கமான பாணியில் நடவு செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 74 மூட்டை!

நடவு செய்த 15, 30, 45 மற்றும் 60 – ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனத் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். அதோடு, 15 நாட்களுக்கு ஒரு முறை 5 லிட்டர் ஜீவாமிர்தத்தை விசைத் தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும். மொத்தம் மூன்று முறை இப்படி தெளித்தால் 100 லிட்டர், இரண்டாவது தெளிப்பில் 150 லிட்டர், மூன்றாவது தெளிப்பின் போது 200 லிட்டர் என்கிற அளவில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நோய்த் தாக்குதலே சுத்தமாக இருக்காது.

பயிர் பொதிப் பருவத்தை (பால் பருவம்) அடைந்ததும், இரண்டரை லிட்டர் புளித்த மோர், 250 கிராம் சூடோமோனஸ் இரண்டையும் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பின்னர் ‘காய்ச்சலும் பாய்ச்சலுமாக’ பாசனம் செய்தால் போதும். இடையில் இரண்டு முறை கைக் களை மட்டும் எடுக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் செய்தால் பயிரின் வளர்ச்சி அதிமாக இருக்கும்.

சாகுபடித் தொழில்நுட்பங்களை பார்த்த வேளாண்மை அதிகாரிகள் ‘அங்கக பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கூறினார்கள்’. ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று அரசு அதிகாரிகள் அரசு சாராத பிரதிநிதிகள் அனைவரும் கூடிநிற்க கிச்சடிச் சம்பா அறுவடை நடந்தது. ஒரு ஹெக்டருக்கு 11,215 கிலோ மகசூல் கிடைத்தது. ஏக்கருக்கு 4,486 கிலோ! மூட்டையாக கணக்குப் போட்டால் ஏக்கருக்கு 74 மூட்டை (60 கிலோ மூட்டை). இது வழக்கமான மகசூலை விட மிக மிக அதிகம்.

இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் கிச்சடிச் சம்பா சாகுபடி செய்வதற்கான செலவு, வரவு கணக்கு

விவரம்

செலவு

வரவு

விதை

750

 

உழவு

1,000

 

கிடை

800

 

தொழுவுரம் மற்றும் உயிர் உரங்கள்

500

 

கொம்புத் தூள்

1,800

 

தொழி கலக்க

1,300

 

வரப்புக் கட்ட

700

 

நடவு

1,750

 

களை

1,200

 

இடுபொருள் தெளிப்பு கூலி

600

 

தண்ணீர் கட்ட

2,100

 

அறுவடை

2,300

 

அரிசியாக மாற்றினால் 2,694 கிலோ x 40 ரூபாய்

 

1,07,760

மொத்தம்

14,800

1,07,760

நிகர லாபம்

 

92,960

தேவதாஸ் நெல்லை அரிசியாக மாற்றி விற்கிறார். அதற்கான அரவை கூலியை, தவிடு மற்றம் உமி ஆகியவையே ஈடுகட்டி விடுவதால் அது கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒரு ஏக்கரில் இவருக்கு 74 மூட்டைகள் கிடைத்த போதும் இவருக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதற்கு கிச்சடி சம்பா எனும் உயர் ரக அரிசியும் ஒரு காரணம். இடுபொருட்களைப் பொறுத்த வரை தோவதாஸீக்கு 3,100 ரூபாய்தான் செலவு.

தொடர்புக்கு:
திரு. கர்னல். தேவதாஸ்,
என்.ஜி.ஓ. காலனி,
திருநெல்வேலி.
அலைபேசி: 94431 - 55309


பழுதில்லாமல் பலன் கொடுக்கும் பாசுமதி!

பாசுமதி நெல்லை விளைவித்திருக்கும் அரியலூர் மாவட்டம், செம்மியக்குடியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் இதை முழுக்க முழுக்க இயற்கை முறை விவசாயத்தின் மூலமே சாதித்துக் காட்டியிருக்கிறார்.
எனக்கு எட்டு வயதாகிய பொழுதே எனது அப்பா இறந்துவிட்டார். இருக்கின்ற நான்கு ஏக்கரில் விவசாயம் செய்து தான் என் அம்மா என்னை வளர்க்க வேண்டிய கட்டாயம். நான் பத்தாம் வகுப்பு வரை பயின்றேன். பின் முழுமையாக விவசாயத்தில் இறங்கிவிட்டேன். கரும்பு, நெல், வெங்காயம் என்று பருவத்திற்கு ஏற்றது போல், மாற்றி சாகுபடி செய்வேன். ஆரம்பத்தில் தோட்டத்தில் விளைந்த கரும்புகளை வெல்லமாக காய்ச்சி விற்றுக்கொண்டிருந்தேன். பக்கத்திலேயே கரும்பு ஆலை வந்துவிடவும் அங்கே கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் அது எல்லாம் கட்டுப்படியாகவில்லை. அதனால் கரும்பை விட்டுவிட்டேன்.

96 – ம் வருடம் எங்கள் ஊரில் உழவர் மன்றம் தொடங்கினோம். அதன் மூலமாக விவசாயப் பயிற்சிகளில் கலந்து கொள்கிற வாய்ப்பு கிடைத்தது. பிறகு இயற்கை விவசாயப் பயிற்சிகள் கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தேன். பசுமை விகடன் வந்த பின்பு அதில் வருகிற இயற்கை விவசாயக் கட்டுரைகளையெல்லாம் படித்து தெரிந்துகொண்டு முழுமையான இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன். ஒருமுறை நம்மாழ்வாருடைய பயிற்சியில் கலந்து கொண்டபொழுது தான் பாசுமதி ரகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் இதை அதிகமாக யாரும் விளைவிப்பது இல்லை என்று கேள்விப்பட்டவுடனே நாம் அதை விளைவித்துப் பார்த்துவிடனும் என்கிற ஆசை வந்தது. இரண்டு கிலோ விதை நெல்லை தேடிப் பிடித்து வாங்கிவிட்டேன்.
போன வருடம் 50 சென்ட் நிலத்தில் ஒற்றை நாற்று முறையில் பாசுமதியை சாகுபடி செய்தேன். 15 மூட்டை (60 கிலோ மூட்டை) விளைச்சல் கிடைத்தது. இப்பொழுது 35 சென்டில் நடவு செய்திருக்கேன். அது அறுவடைக்குத் தயாராக விளைந்து நிற்கிறது.

மேட்டுப்பாத்தியில் நாற்று!

பாசுமதி ரக நெல் 130 நாள் வயது கொண்டது. இதற்கு சொர்ணவாரிப் பட்டமும் (மார்கழி, தை), சம்பா பட்டமும் (ஆவணி, புரட்டாசி) ஏற்றது. உவர் மண் தவிர்த்து மற்ற அனைத்து வகை நிலத்திலும் நன்கு வளரும். 20 அடி நீளும், 4 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து மண் வெட்டியால் களைகளைக் கொத்தி பொலபொலப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கூடை எருவைச் சேர்த்துக் கிளறி சமப்படுத்தி, ஊறவைத்த இரண்டாம் கொம்பு விதையை விதைக்க வேண்டும் (35 சென்ட் நிலத்திற்கு 2 கிலோ விதை தேவைப்படும்). ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து பூவாளியால் நீர் விட வேண்டும். எட்டாம் நாள் பத்து லிட்டர் நீரில் 300 மில்லி பஞ்சகாவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 15 – ம் நாளில் நாற்று தயாராகிவிடும்.

அடியுரமாக ஆட்டுச் சாணம்!

நாற்று விட்ட அன்றே, நடவுக்கான நிலத்தையும் தயாரிக்க வேண்டும். நான்கு வண்டி எருவைக் கொட்டிக் களைத்து இரண்டு உழவு செய்ய வேண்டும். பின் தண்ணீர் கட்டி சேறாக மாற்றி வைத்தால் நாற்று தயாராவதற்குள களைகள் அழுகி உரமாகி விடும். நாற்றுவிட்ட அன்றே அடியுரத்திற்காக 50 கிலோ ஆட்டுச்சாணம் 1 கிலோ பாஸ்போ – பாக்டீரியா, 1 கிலோ சூடோமோனஸ், 1 கிலோ அசோஸ்பைரில்லம், 13 லிட்டர் கோமூத்திரம் ஆகியவற்றைக் கலந்து, நிழலில் குவித்து சணல் சாக்கில் மூடி வைக்க வேண்டும். நாற்று தயாரான பின் இதை நிலத்திலிட்டு முக்கால் அடிக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.

கோனோ வீடரில் களையெடுத்தால் அதிக தூர்கள்!

நடவு செய்த 15, 30, 45 – ம் நாட்களில் நிலத்தில் ஒரு அங்குலம் உயரத்திற்கு தண்ணீர் கட்டி கோனோவீடர் மூலம் களை எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பயிரின் பக்க வேர்கள் அறுபட்டு, அதிகத் தூர்கள் பிடிக்கும். 15 – ம் நாள், 10 லிட்டர் நீருக்கு 300 மில்லி பஞ்சகாவ்யாவைக் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 22 – ம் நாள் தொட்டிக்கு 300 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் இலைச்சுருட்டுப் புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் (5கிலோ வேப்பங்கொட்டைப் பருப்பை இடித்து, ஆறு லிட்டர் நீரில் 5 நாட்கள் ஊறவைத்து, துணியில் வடிகட்டினால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார்).

சிம்புக்கு 200 மணிகள்!

30 – ம் நாளில் முட்டை ரசம்; 40 மற்றும் 68 – ம் நாட்களில் மீன் அமிமோஅமிலம்; கதிர் விடும் சமயத்தில், தேமோர்க் கரைசல் ஆகியவற்றை முறையே தெளிக்க வேண்டும். இடையில் குருத்துப்பூச்சித் தாக்கினால் இலுப்பை எண்ணெய் மூலம் அகல் விளக்கேற்றி, விளக்கின் கீழ்ப்பகுதியில் நீரையும் மண்ணெண்ணையும் கலந்து வைத்தால் ஒளியில் பூச்சிகள் கரைப்பட்டு மண்ணெண்ணையில் விழுந்து இறந்து விடும். வேறு பூச்சிகள் தாக்கினால் பூண்டுக் கரைசலைத் தெளிக்கலாம். 105 – ம் நாளிலிருந்து கதிர் முற்ற ஆரம்பித்து 130 – ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும். தூருக்கு 35 முதல் 40 சிம்புகளும் சிம்புக்கு 180 முதல் 200 நெல் மணிகளும் இருக்கும். கதிரின் அடிபாகத்தில் இருக்கும் நெல்மணிகள் இளம் பச்சையாக இருக்கும் சமயத்திலேயே அறுவடை செய்திடல் வேண்டும்.

மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

இயந்திரத்தின் மூலம் கதிரடிச்சா, பாசுமதி நெல் அதில் சிக்கிக் கொள்கிறது. இதனால் கையால் அடிப்பதுதான் நல்லது. 35 சென்ட் நிலத்தில் 600 கிலோ நெல் கிடைக்கும். பாசுமதி ரகத்தை ஆறு மாதம் வைத்திருந்து அரிசியாக அரைத்தால் தான் சுவையும், மணமும் கிடைக்கும். இயற்கையில் விளைந்தால் பாசுமதி நெல் என்பதால் கிலோ 21 ரூபாய் 50 பைசா கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். நாமே அரைக்கும்போது 360 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி நாற்பது ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரைக்கும் விலை போகும்.

35 சென்ட் நிலத்தில் பாசுமதி சாகுபடி செய்ய ஆகும் செலவு – வரவு

விவரம்

செலவு

வரவு

உழவு

1,000

 

விதை நெல்

80

 

நிலம் தயாரிப்பு

720

 

நடவு

400

 

இடுபொருட்கள்

1,600

 

களை

550

 

அறுவடை

1,300

 

அரைக்க

1,500

 

அரிசி மூலம் வரவு

 

14,400

தவிடு மூலம் வரவு

 

1,200

மொத்தம்

7,150

15,600

நிகர லாபம்

 

8,450

1 கிலோ அரிசி 40 ரூபாய் என்றும், 1 கிலோ தவிடு 5 ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

சென்ற வருடம் அறுவடை செய்த பாசுமதி நெல் என்னிடம் இருப்பதை ‘பசுமை விகடன் சந்தை’ மூலமாக தெரிந்து கொண்ட ஒரு அமைப்பு அதை அவலாக மாற்றிக் கேட்டார்கள். அதை இடித்தபொழுது 100 கிலோவிற்கு 60 கிலோ அவல் கிடைத்தது. கிலோ ஐம்பது ரூபாய் என்று கொடுத்தேன். நெல்லாக விற்காமல் அரிசியாகவோ, அவலாகவோ மாற்றி விற்கும்போது அதிக லாபம் கிடைப்பதால், மீதமுள்ள நெல்லை அரிசியாக அரைத்து தான் விற்கப்போகிறேன்.

தொடர்புக்கு:
திரு. ரமேஷ்,
செம்மியக்குடி,
அரியலூர் மாவட்டம்.
அலைபேசி: 96558 - 38339


செலவில்லாத தீவன சாகுபடி.. ஆரோக்கியத்தோடு அதிக பால்
கவலையில்லாத கால்நடை வளர்ப்பு:

பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான் என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால் தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும். இதை எல்லாம் நான் தவறாமல் பிடிப்பதால் தான் என்னுடைய ஆடு, மாடுகள் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக திடக்காத்திரமாக இருந்து எனக்கு இலாபத்தை கொடுத்துக் கொண்டிருக்கு என்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன், பசுந்தீவனத்திற்காக தனித்தோட்டத்தையே பராமரித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பா நாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில் தான் இருக்கிறது. அந்த தீவனத் தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சுபாபுல்) என ஏகப்பட்ட தீவனப்பயிர்கள் தளதளவென நின்று கொண்டிருக்கின்றன இரண்டரை ஏக்கர் தோட்டத்தில்.
பத்து ஆண்டுகளுக்கு முன் நூறு ஆடுகளை வைத்திருந்தேன். அதற்காக உருவாக்குனது தான் இந்தத் தீவனத் தோட்டம். 20 சென்ட் நிலத்தில் தண்ணீர்ப்புல் (எருமைப்புல்) 230 சென்டில் மல்பெரி, அதற்கிடையில் ஊடுபயிராக முயல்மசால், வேலிமசால், கலப்பைக் கோணியம், சங்குப்புஷ்பம் எல்லாம் இருக்கிறது. வேலி ஓரத்தில் 500 சவுண்டல் மரம் இருக்கு. இந்தத் தோட்டத்தை வைத்து பத்து பதிணைந்து மாடுகள், கொஞ்சம் ஆடுகள் வளர்க்க முடியும்.

ஆறு வருடத்திற்கு முன்பு வேலையாட்கள் பிரச்சனை வந்ததால், ஐந்தாறு ஆட்டை மட்டும் வைத்துக் கொண்டு மீதத்தை விற்றுவிட்டேன். இப்பொழுது என்னிடம் இரண்டு கறவை மாடுகளும் ஐந்து ஆடுகளும் தான் இருக்கிறது. என் ஆடு, மாடுகளுக்குப் போக மீதமுள்ள தீவனத்தை பக்கத்து விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கேன். கொஞ்சத்தை அப்படியே வெட்டி, தோட்டத்தில் மூடாக்காக போட்டு இருக்கேன். அப்படியிருந்தும் மல்பெரி நிறைய இருப்பதால் பட்டுப்புழுவையும் வளர்த்துக் கொண்டிருக்கேன்.

குறைவான செலவு அதிக ஆரோக்கியம்!

கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அதிகமாக பயன்படுத்த சொல்கிறார்கள் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள். அதேபோல் நம் அரசு கால்நடைப் பண்ணைகளையும் பசுந்தீவனத்தைதான் நிறையப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் தீவனச் செலவு குறைவது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகள் ஆரோக்கியமாக வளர்கிறது. அதனால்தான் நான் தீவனங்களை உருவாக்கிவிட்டு பண்ணைத் தொழிலில் இறங்கினேன். ஆனால் பல இடங்களில் புதிதாக பண்ணை வைக்கிறார்கள். தீவனத்தைப் பயிர் செய்யாமல் பண்ணையை ஆரம்பித்து கடைசியில் தீவனத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிக விலை கொடுத்து புல்லையும், அடர்தீவனத்தையும் வாங்கிப் போட்டு நட்டமாகிவிட்டது. ஆடு, மாடு வளர்த்தாலே நட்டம் என்று தான் சொல்வார்கள்.

ஒரு தடவை நட்டா வருடக்கணக்கில் பலன்!

மிகக் குறைவான செலவில் அதிகமான சத்து கிடைக்கிற பசுந்தீவனங்களை விவசயிகளே உற்பத்தி செய்து லாபம் சம்பாதிக்க முடியும். கொஞ்சமாக நிலம் இருந்தால் கூட போதும். ஒரு தடவை விதைத்துவிட்டாலே நிறைய வருடங்களுக்கு விளைச்சல் இருக்கிற தீவனப் பயிர்களும் கூட இருக்கிறது.
இந்த தண்ணீர்புல், முயல்மசால், வேலிமசால், கலப்பை கோணியம், சங்குப்புஷ்பம், மல்பெரி, சூபாபுல், எல்லாமே போட்டு பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எந்தப் பராமரிப்பும் கிடையாது. அறுப்பது மட்டும்தான் வேலை. முழுக்க இயற்கை விவசாயம் தான். ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லியையே தொடுவதே கிடையாது. என்னுடைய இரண்டு மாடு, ஐந்து ஆடுகளுடைய கழிவுகள்தான் இதுக்கு உரம். இவைகளைச் சாப்பிட்டுத்தான் என்னுடைய ஆடு, மாடுகள் திடகாத்திராக இருக்கிறது.

பசுந்தீவனத்தால் கெட்டியான பால்!

ஒரு கறவை மாட்டிற்கு தினம் பசுந்தீவனம்  - 20 கிலோ, வைக்கோல் – 10 கிலோ, அசோலா – 5 கிலோ, தவிடு – 3 கிலோ, கடலைப்பிண்ணாக்கு – அரை கிலோ கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மாடு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கொடுக்குது. நல்லா கொழகொழ என்று தரமாக பால் இருக்கிறது. பசுந்தீவனம் நிறைய சாப்பிடுவதால் உரிய காலத்தில் சினை பிடித்துவிடுகிறது.
தினமும் ஒரு ஆட்டிற்கு 5 கிலோ பசுந்தீவனம் கொடுக்கிறேன். பசுந்தீவனத்திற்கு ஆரம்பக் கட்ட செலவு மட்டும்தான். வேறு செலவே இல்லை. ஆனால் கடைகளில் வெ்வளவு வாங்கிப் போட்டாலும், செலவுதான் அதிகம், பால் அளவு கூடாது.

20 சென்டில் எருமைப்புல்:

பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் தீவனப் பயிர்கள் நன்கு வளரும். அதனால் மண்ணைப் பற்றிய கவலையில்லை. நிலம் முழுவதும் இரண்டு சால் உழவு ஒட்டி மண்ணை நன்கு பொல பொலப்பாக வேண்டும். பின் பத்து டன் தொழுவுரம் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஒட்ட வேண்டும். 20 சென்டில் ஆயிரம் தண்ணீர்ப்புல் விதைக்கரணைகளை ஊன்ற வேண்டும். இது வேகமாக மண்டும் என்பதால் குறைந்த அளவு நிலத்தில் விதைத்தாலே போதுமானது. மண்ணை நன்றாக சேறாக்கி இரண்டடி இடைவெளி விட்டு, கரணையின் கணு மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும். மூன்றாவது நாளில் தண்ணீர் பாய்ச்சி அதிலிருந்து வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

20ம் நாளில் களையெடுத்து 200 லிட்டர் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் முழுக்க வைத்திருந்து, பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைத் தொடர்ந்து செய்யலாம்.
90 – ம் நாளிலிருந்து இந்தப் புல்லை அறுவடை செய்யலாம். தரையிலிருந்து நான்கு அடி உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 35 நாட்கள் இந்தப் புல் வளர்ந்தால் தான் முற்றி, அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆகவே, 35 நாட்களுக்கு ஒரு முறைதான் அறுவடை செய்ய வேண்டும். ஒரு அறுவடைக்கு 1,000 கிலோ புல் கிடைக்கும். தேவையைப் பொறுத்து பகுதி பகுதியாகக் கூட அறுவடை செய்யலாம். ஒரு வருடம் கழித்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இடை உழவு செய்தால் புது வேர்கள் விட்டு, அதிக மகசூல் கிடைக்கும்.

230 சசென்டில் மல்பெரி, ஊடுபயிர்களாக வேலிமசால், முயல்மசால், கலப்பைக் கோணியம்:

5 அடி இடைவெளியில், 3 அடி அகலம், அரை அடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க வேண்டும். வாய்க்கால் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை இரு வாய்க்கால்களுக்கு இடையில் போட்டு, மேட்டுப்பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் வெளிப்புற இரு ஓரங்களிலும், கரணைக்குக் கரணை மூன்றடி இடைவெளி இருக்குமாறு மல்பெரி விதைக் கரணைகளை நட வேண்டும். கரணையில் இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் புதையுமாறு இருக்க வேண்டியது அவசியம். 230 சென்ட் நிலத்திற்கு 13 ஆயிரம் விதைக்கரணைகள் தேவைப்படும்.

வாய்க்கால்களுக்கு இடையில் உள்ள மேட்டுப் பாத்திகளின் மையத்தில் விதைகளை விதைப்பதற்காக அரை அங்குல ஆழத்திற்கு நீளமாக கோடு இழுக்க வேண்டும். ஒரு பாத்தியில் வேலிமசால், இன்னொரு பாத்தியில் முயல்மசால், அடுத்த பாத்தியில் கலப்பைக் கோணியம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையும் தலா இரண்டு கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒவ்வொரு வகை விதைகளுடனும் ஆறு கிலோ மணலைக் கலந்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அதன்பின் விதைத்து உயிர்த் தண்ணீர் விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நிலத்தின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போது 200 லிட்டர் நீரில், 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை கோமிய சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்யலாம்.
90 நாட்களில் அனைத்துமே அறுவடைக்கு தயாராகிவிடும். மல்பெரி, முயல்மசால், வேலிமசால், ஆகியவற்றை அறுவடை செய்யும் போது, தரையில் இருந்து ஒரு அடி உயரம் விட்டு அறுக்க வேண்டும். இவற்றை 40 நாள் இடைவெளி விட்டு மீண்டும் அறுக்கலாம். மல்பெரி மூலம் ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் தோராயமாக 30 முதல் 35 டன் தீவனம் கிடைக்கும். 100 அடி நீளம் கொண்ட பாத்தியில் 1 வருடத்தில் வேலிமசால் 400 கிலோவும், முயல்மசால் 300 கிலோவும், கலப்பைக் கோணியம் 400 கிலோவும் கிடைக்கும்.

உயிர் வேலியாக சவுண்டல்:

வேலி ஓரங்களில் 5 அடி இடைவெளியில் ஒரு சவுண்டல் விதையைப் போட்டு, 3 – வது நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதன் பிறகு தண்ணீர், சாணம் எதுவுமே தேவையில்லை. தானாகவே வளர்ந்து விடும். மூன்று மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 15 கிலோ தீவனம் கிடைக்கும்.

பட்டுப்புழுவுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும்!

சாகுபடி பாடத்தை முடித்து, தொடர்ந்து பேசிய ஆதிநாராயணன், பட்டுப்புழு வளர்ப்பதற்கு மட்டும் தான் மல்பெரி என்று அனைவரும் நினைக்கிறார்கள் ஆனால் அது நல்ல கால்நடைத் தீவனம் என்பது நிறைய இருக்கிறது. இது மாதிரியான பசுந்தீவனங்களை கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும். மாடுகளுக்கு வெறும் அடர் தீவனத்தையும், புல்லையும் மட்டுமே கொடுத்தால் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்காது. அதனால் தான் விவசாயிகள் இடம் விழிப்பு உணர்வு கொடுப்பதற்காக பசுந்தீவன விதைகளையும், விதைக்கரணைகளையும் இலவசமாக கொடுத்து, நேரடி இலவசப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

தொடர்புக்கு:
ஆதிநாராயணன்,
ஆலத்தன்குடிகாடு கிராமம்,
பட்டுக்கோட்டை வழி,
பாப்பா நாடு அருகில்.
அலைபேசி: 98656 - 13616

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008