|
கால்நடை
ஏரோபிளேன் ஏற வைத்த எருமை வளர்ப்பு!
பால்கண்ணை, பால்மாடு என்றாலே கலப்பினப் பசுக்கள் தான் நினைவிற்கு வரும். வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்சி, சிந்து, ஃபிரீசிஸியன் போன்ற கலப்பின மாடுகள் அதற்குக் காரணம். இரத வகையான மாடுகளுக்கு அதிகப் பராமரிப்புத் தேவைப்பட்டாலும், ஒரு எருமை சாப்பிடும் தீவனத்தைவிடக் குறைவாகச் சாப்பிட்டு ஐந்து எருமை கொடுக்கும் அளவுக்கு அதிக பால் கொடுக்கும் என்பதுதான்.
இது போன்ற காரணங்களால் நாட்டுப் பசு மற்றும் எருமை போன்றவற்றின் வளர்ப்பு குறைந்து கொண்டே இருக்கிறது என்றாலும், தயிர், தேநீர், போன்ற உபயோகங்களுக்குப் பலராலும் இன்றளவும் எருமைப் பால் விரும்பப்படுகிறது. எருமை, குறைவாகப் பால் கொடுத்தாலும் அதிலிருக்கும் கொழுப்புச் சத்தின் அளவு மிகவும் அதிகம் என்பதும் அந்தப் பால் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம். பல கிராமங்களில் எருமை வளர்ப்பு ஓரளவுக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது போல் ‘எருமை வளர்க்கும்’ கிராமங்களில் ஒன்று தான் தேனி மாவட்டம், சங்கராபுரம் அருகில் இருக்கும் வடமலைராஜபுரம்.
எருமை வளர்ப்பில் கரை கண்ட இந்த ஊர்க்காரர்களில் ஒருவரான கருப்பையா, அதைப் பற்றி கருப்பையா கூறுகிறார்.
நான் படிக்கலை, அதனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கலை. இருந்த தோட்டத்தில் கொஞ்சம் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டே விவசாயக் கூலி வேலையையும் செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் பாலுக்காக எருமை மாடு வளர்ப்பார்கள். அதனால் நானும் ஒரு எருமை வாங்கலாம் என்று ஆசைப்பட்டேன். 83 – ம் வருடம் முன்னூறு ரூபாய்க்கு ஒரு எருமைக் கன்று வாங்கினேன். இப்பொழுது என்னிடம் இருக்கின்ற எருமைகள் எல்லாம் அதனுடைய வாரிசுகள் தான்.
இப்பொழுது மொத்தம் எட்டு ஈத்துவழி எருமைகள், ஏழு கிடேரிகள், ஒரு பொலிகாளை வைத்திருக்கிறேன். ஒரேயொரு எருமைக் கன்றுக்குட்டியில் தான் என்னுடைய வாழ்க்கை மேலே உயர ஆரம்பித்தது. வீடுகட்டி, பிள்ளைகளைப் படிக்க வைத்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினேன்.
மேய்ச்சல் நிலம்.. தண்ணீர் அவசியம்!
“எருமை வளர்க்க கட்டாயம் மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும். அவை காலாற சுற்றி வந்து மேய்ந்து, வயிறு நிறைய சாப்பிட்டால் தான் நன்கு வளரும். காலையில் தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெள்ளாடு, பசுக்களைப் போல் இல்லாமல், ஒரே இடத்தில் நின்று கொண்டே செடிகளைச் சாப்பிடும். அந்த இடத்தில் தீர்ந்தால்தான் அடுத்த இடத்துக்குப் போகும். காலை பத்து மணியளவில் ஏதாவது குளம், குட்டையில் கொஞ்ச நேரம் இருக்க விட வேண்டும். குளங்களில் தண்ணீர் இல்லாத சமயங்களில் பம்பு செட் மூலமாவது தண்ணீர் பாய்ச்சி எருமைகளைக் குளுமைப் படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். அதிக வெயிலில் எருமைகளைக் கட்டிப் போடக் கூடாது. உச்சி வெயில் நேரங்களில் தானாகவே அவையெல்லாம் நிழலைத் தேடிப் போய் விடும்.
கொட்டகையெல்லாம் தேவையில்லை!
மதியம் மூன்று மணி வாக்கில் பால் கறந்துவிட்டு, மீண்டும் தண்ணீர் காட்டி மேயவிட வேண்டும். சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு அழைத்து வந்து மீண்டும் தண்ணீர் காட்டி கட்டி வைத்தால் போதும். இதற்காக தனிக் கொட்டகையெல்லாம் அமைக்க வேண்டியதில்லை. ஏதாவது மர நிழலில் கட்டி வைத்தால் போதும் மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் எருமைக்கு எந்த பாதிப்பும் வராது. மழையில் நனைந்தால் பாலின் அளவு கூடும். இரவில் வைக்கோலைத் தீவனமாகக் கொடுக்கலாம். காலையில் மூன்று மணிவாக்கில் பால் கறந்து விடலாம்.
சினை மாட்டுக்கும், பால் கறக்கும் மாட்டுக்கும் தண்ணீர்த் தொட்டியில், கம்பு மாவு, சோளமாவு, புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை அதிகமாகக் கலந்துவிட வேண்டும். அதன் மூலம் தான் எருமை நன்கு பளபளப்பாகும், பாலின் அளவும் கூடும். பால் கறப்பதை நிறுத்தும் நிலையில் இருக்கும் மாட்டுக்கு மேற்கண்ட தீவன அளவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
பருவம் சொல்லும் பல்!
எருமைகள் இரண்டு பல் முளைத்த பிறகுதான் பருவத்துக்கு வரும். சினைப் பருவத்திற்கு வந்த எருமைகள், கீழ் வரிசைப் பல்லைக் காட்டி கத்தும். விட்டு விட்டு சிறுநீர் கழிக்கும். இதை வைத்துக் கண்டுபிடிப்பது சிறிது சிரமம் என்பதால் கூடவே ஒரு பொலி எருமைக் கிடாவையும் வளர்த்தால் அது பருவத்துக்கு வந்த எருமைகளை விரட்டும். அதை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு நேரடியாகவோ, செயற்கை முறையிலோ கருவூட்டல் செய்து கொள்ளலாம். கன்று போட்ட மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் மீண்டும் எருமைகள் பருவத்துக்கு வரும்.
எருமையின் கீழ் உதட்டைப் பிரித்துத் தெரியும் பற்களை வைத்து வயதைக் கணக்கிடலாம் |
2 பல் |
2 முதல் 3 வயது |
4 பல் |
3 முதல் 4 வயது |
6 பல் |
4 முதல் 5 வயது |
8 பல் |
5 முதல் 6 வயது |
பால் பற்கள் இருந்தால், 2 வயதுக்கும் குறைவானவை என்றும் பத்து பற்களுக்கு மேல் இருந்தால், அதிக வயதானவை என்றும் தெரிந்து கொள்ளலாம். |
எருக்கு இலை பழுப்பதேன்… எருமைக் கன்று சாவதேன்?
கன்றுகள் பிறந்ததிலிருந்து நாற்பது நாட்கள் வரை வயிறாரப் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்றுகள் இறந்து போக வாய்ப்பிருக்கிறது. இதை மனதில் வைத்து தான் கிராமங்களில் ‘எருக்கலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்,’ என்று ஒரு விடுகதை போடுவார்கள். அதன் விடை ‘பால் இல்லாமல்’ என்பதாகும்.
பிறந்த அன்றே கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுப் பருவத்தில் முடியை மழித்துவிட வேண்டும். இல்லையென்றால் பேன் பிடித்து அரிப்பெடுக்கும். அரிப்பெடுத்த இடத்தை நக்கும்போது முடி வயிற்றுக்குள் சென்று விடும். இதைச் சரியாகக் கடைபிடித்து விட்டால், கன்றுகளை இறப்பிலிருந்து தடுத்து விடலாம்.
தடுப்பூசிகள் அவசியம்!
எருமைக்குப் பெரும்பாலும் அதிகமாகக் காணை நோய்தான் வரும். காணை தாக்கினால் வாயிலும், கால் குளம்பிலும் புண் வந்து, எச்சில் ஒழுகும். தடுப்பூசி மூலம் காணை நோயைத் தவிர்க்கலாம். பால் முழுவதையும் கறந்தாலோ, அல்லது கன்று குடித்தாலோ மடி நோய் வரும். அதேபோல் பால் கறப்பவர்கள் கைகளில் நகம் இருக்கக்கூடாது. சுத்தமாகக் கழுவுியபின் தான் கறக்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து குறைவு காரணமாக சமயங்களில் மாடு படுத்துக் கொண்டே இருக்கும். அதுமாதிரியான சமயங்களில் தெளிந்த சுண்ணாம்பு நீரைக் குடி நீரோடு கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுவிட வேண்டும்.
ஒரு நாளைக்கு 10 லிட்டர்!
கன்று போட்டதிலிருந்து மூன்று மாதம் வரைக்கும் ஒரு நாளைக்கு ஒரு எருமை அதிகபட்சம் 10 லிட்டர் பால் கொடுக்கும். அடுத்த இரண்டு மாதம் 3 லிட்டராகும். அடுத்த 3 மாதம் 5 லிட்டர் ஆகும். பாலின் அளவில் இப்படி ஏற்ற இறக்கம் இருக்கும். அதன் பிறகு பால் வத்திவிடும். பசுந்தீவனம் நிறைய சாப்பிட்டா, பால் கூடும். கோடையில் கொஞ்சம் குறைவாகத்தான் பால் கறக்கும். டீக்கடை, மற்றும் வெளியில் நேரடியாக பால் விற்றால் லிட்டருக்கு 16 ரூபாய் தான் கிடைக்கிறது. எருமைப்பால் கொழுப்பு அதிகமாக, கெட்டியாக இறுப்பதால் தான் நல்ல விலை கிடைக்கிறது.
“எருமையைப் பொறுத்தவரைக்கும் பராமரிப்புக்காக மிகவும் குறைந்தபட்சம் விஷயங்களை எல்லாம் முறைப்படி பராமரிப்போமானால் எருமை மூலமாகவே போதுமான லாபம் பெறலாம்”.
சினையான கன்றுக்குட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். என்னிடம் இருக்கின்ற மாடுகளில் எட்டு மாடு இப்ப கறந்துகொண்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 50 லிட்டர் பால் மூலமாக, மாதத்திற்கு செலவு போக 14,000 ரூபாய் கிடைக்கிறது. கறவைக் கூலியாக 2000 ரூபாயும், சாணி மூலமாக 3000 ரூபாயும் கிடைக்கிறது. மொத்தம் மாதத்திற்கு 17,000 ரூபாய் லாபமாக கிடைக்கிறது.
தொடர்புக்கு:
திரு. கருப்பையா,
வடமலைராஜபுரம்,
சங்கராபுரம் அருகில்,
தேனி மாவட்டம்.
அலைபேசி: 98437 - 27958
நம்பிக்கை தரும் நாமக்கல் காடை |
|
லட்சக் களக்கில் செலவழித்து கோழிப் பண்ணை அமைப்பது என்பது எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வருவதில்லை. அவர்களுக்கு ஏற்ற தொழில் காடை வளர்ப்பு தான். இதற்கு இட வசதி தேவையில்லை. ஒரு கோழி வளர்க்கிற இடத்தில் ஐந்து காடையை வளர்க்கலாம். அதே போல் முதலீடும் அதிகமாக தேவைப்படாது. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்திருக்கின்ற சின்ன விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுக்கக்கூடியது. “காடை வளர்ப்பு” என்கிறார் நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுபவ விவசாயி முத்துசாமி.
30 நாட்களில் வருமானம்!
“ஏற்கெனவே, நாட்டுக் கோழி பண்ணை வைத்திருந்தேன். கோழியில் நோய், நொடி வந்து அடிக்கடி இறந்து போகும். அதனால் பராமரிப்புலையே பாதி நேரம் போயிவிடும். அப்பொழுது தான் நாமக்கல், கால்நடைக் கல்லூரியில் காடை வளர்ப்பைப் பற்றி பயிற்சி கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இடமே குஞ்சுகளை வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் இருந்த ஒரு கொட்டகையில் விட்டு வளர்த்தேன் குறைந்த நாட்களில் அதிக எடை வருகிற ‘நாமக்கல் – 1’ ரக காடையைத்தான் நான் வளர்க்கிறேன். கோழி மாதிரி, இதனை நோய், நொடி தாக்குவதில்லை. அதனால் உசி, மருந்து போடுகிற வேலையும் இல்லை. தினமும் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் வைத்து பார்த்தால் போதும். அந்த வேலையை வீட்டில் இருக்கிறவர்களே செய்யலாம். கோழி வளர்த்தால் வருமானம் பார்க்க 90 நாட்களாகும். ஆனால் இந்தக் காடையில் 30 நாட்களில் வருமானம் பார்க்கலாம். இதைப் பார்த்த பிறகு கோழிப் பண்ணையை விட்டுவிட்டு நாலு கொட்டகையிலையும் காடையை வளர்க்க ஆரம்பித்துவிட்டேன்.
மாதம் 10 ஆயிரம்!
என்னிடம் மொத்தம் 2,000 குஞ்சுகள் இருக்கிறது. அதில் பொடிக் குஞ்சு, 10 நாள் குஞ்சு, 20 நாள் குஞ்சு, 30 நாள் குஞ்சு என்று நான்காக பிரித்து வளர்க்கிறேன். இதை சுழற்சி முறையில் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் வயதுள்ள குஞ்சுகள் நாமக்கல் கல்லூரியில் வாங்கி வந்து முப்பது நாளைக்கு வளர்த்து விக்கின்றேன். ஒரு காடைக்கான உற்பத்தி செலவு 15 ரூபாய் வரைக்கும் ஆகும். அதை 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்கின்றேன். விற்பனையில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அருகில் இருப்பவர்கள், கறிக்கடைக்காரர்கள், நைட்ஹோட்டல்காரர்கள் தேடி வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். மாதம் ஆயிரம் குஞ்சுகளை வித்தாலும் செலவு போக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
குறைந்த நாளில் அதிக எடை!
‘நாமக்கல் காடை – 1’ ரகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற காடை ரகங்களை விட இந்த ரக காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். மற்ற காடைகளைவிட, இந்த ரகத்தை வாங்கி வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும்.
பழைய பண்ணைகளே போதும்!
“காடைகளை வளர்க்க அதிக பணம் தேவையில்லை. பயன்படுத்தாத கொட்டகை, கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கலாம். அல்லது குறைந்த முதலீட்டில் கொட்டகை போட்டும் வளர்க்கலாம். ஆழ்கூளம் (கொட்டகை), கூண்டு என இரண்டு முறையிலும் வளர்க்கலாம். நமது வசதியைப் பொறுத்து இதை முடிவு செய்து கொள்ளலாம். கொட்டகையைவிட கூண்டில் வளர்க்கும் போது கையாள்வதற்கு சுலபமாக இருப்பதுடன் நோய்க் கிருமிகளும் அதிகமாக தாக்காது. ஆனால், கூண்டு செய்ய ஆரம்ப முதலீடு சிறிது அதிகமாக இருக்கும்.
முதல் முறையாக காடையை வளர்ப்பவர்கள், சுமார் 12 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். முதல் பத்து நாட்களுக்கு விளக்குப் போட்டு, போதுமான சூட்டை (வெப்பம்) குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பத்து நாட்களும் பருவ நிலைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும்.
இறப்பைத் தடுக்கும் கோலிக்குண்டு!
முதல் இரண்டு வாரத்தில் பெரும் பாலான காடைகள் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் விழுந்து அதிகமாக இறந்து விடும். அந்தப் பாத்திரத்தில் கோலிக்குண்டுகளை போட்டு வைத்தால் உள்ளே என்னவோ இருக்கிறது என்ற பயத்தில் குஞ்சுகள் உள்ளே இறங்காமல் இருக்கும். இதன் மூலம் அவற்றின் இறப்பைத் தவிர்க்கலாம். அல்லது ‘நிப்பிள்’ மூலம் தண்ணீர் கொடுக்கலாம். நிப்பிளைப் பயன்படுத்தும் போது சுத்தமான நீர் தொடர்ச்சியாக குஞ்சுகளுக்கு கிடைக்கும்.
காடைக் குஞ்சுகளின் கால் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் வளவளப்பான பரப்பில் (செய்தித் தாள் போன்றவற்றின் மீது) வளர்க்கும் தீவனம், தண்ணீர் எடுக்காமல் இறந்து போகும். எனவே, சணல் துணியைப் பரப்பி அதன் மேல் மூன்று நாள் வளர்ந்த பிறகு, வளவளப்பான பரப்பில் வளர்த்தால் கால் ஊனமாகாது.
இரண்டாவது வாரத்தில் காடையின் எடை, சராசரியாக 90 கிராம் இருக்க வேண்டும். இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி வேகமாக இருக்கும் அதனால் தொடர்ச்சியாக தீவனம் கிடைப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் தீவனம் எடுக்க வசதியாக இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
500 கிராம் தீவனம்.. 200 கிராம் எடை!
காடைகளுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு ஆரம்பகால தீவனத்தையும் கொடுக்க வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது. ஆரம்ப கால தீவனத்தில் புரதம் அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் இருக்கும். இறுதி கால தீவுனத்தில் புரதம் குறைவாகவும், எரிசக்தி அதிகமாகவும் இருக்கும். காடைக்கான பிரத்யெகத் தீவனம் கிடைக்காவிட்டால் பிராய்லர் கோழிக்கான, ‘ஆரம்ப காலத் தீவனத்தையே பயன்படுத்தலாம். ஒரு காடை 500 கிராம் தீவனத்தை சாப்பிட்டால், 200 கிராம் எடை வரும். காடை வளர்ப்பில் தீவனச் செலவு 70% இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது இதைக் குறைக்கலாம். ஆனால் வாரத்திற்கு 1,000 காடைகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே தீவனத் தயாரிப்பில் இறங்க வேண்டும். சிறிய அளவில் வளர்க்கும்போது, தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கும் செலவு அதிகமாகிவிடும்.
காடைக்கு தீவனம் மாதிரியே தண்ணீரும் மிகவும் முக்கியம். இரண்டும் சுத்தமாக இருந்தால், பெரும்பாலும் நோய்கள் வராது. முதல் இரண்டு வாரங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொடுப்பது நல்லது. பிறகு, கொதிக்க வைக்கத் தேவையில்லை. தண்ணீரில் ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ கிருமிநாசினியைக் கலந்து கொடுத்தால் போதும். இது, குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கொடுக்கலாம்.
கறிக்கோழி வளர்ப்பவர்கள் அதை விற்பனை செய்வதற்குள் 4 தடுப்பூசி போடுவார்கள். ஆனால், காடைகளுக்கு எந்த விதமான தடுப்பூசிகளும் போடத் தேவையில்லை. தண்ணீர், தீவனம் சுகாதாரமாக இல்லாவிட்டால், மட்டுமே நோய் தாக்கும். தரையில் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது, கோழிகளைத் தாக்கும் ரத்தக் கழிசல் நோய் வர வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க தீவனத்தில் ரத்தக் கழிசல் நோய்த் தடுப்பு மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். காடைகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் போது பெரும்பாலும் ரத்தக் கழிசல் நோய் வருவதில்லை.
விற்பனையில் வில்லங்கமில்லை
அதிகபட்சம் 15 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு காடை 25 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்கள், அருகில் உள்ளவர்கள், பார்களில் இதற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களிடம் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இதுவரை விற்பனையில் பிரச்சனை என்று வந்ததில்லை. எனவே நிச்சய லாபம் கிடைக்கும் இந்த ‘நாமக்கல் – 1’ ரக காடையை விவசாயிகளுக்கு முன்பதிவின் அடிப்படையில் ரூ. 3.50 வீதம் விற்பனை செய்கிறோம்.
தொடர்புக்கு:
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கோழியின அறிவியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் – 637002
தொலைபேசி: 04286 – 266494
முத்துசாமி,
அய்யம் பாளையம் கிராமம்,
நாமக்கல் மாவட்டம்
தொலைபேசி: 99659 - 52483 |
|