|
தோட்டக்கலை
வாழைக்கு இடையில் வருமானம்… 55 நாளில் அள்ளிக் கொடுக்கும் மல்லி!
வெற்றிக்கு வழி சொன்ன வெட்டிவேர்.. இடுபொருள் இல்லாமலே இளிமையான விளைச்சல்
கடனாளி ஆக்கிய இரசாயனம்.. கவலையைப் போக்கிய ஜீவாமிர்தம்..! தென்னையோடு ஜிலுஜிலுக்கும் ஜீரோ பட்ஜெட் வாழை!
சம்பாவுக்கு ஊடுபயிராக குறுவை.. காட்டுயானத்தோடு கூட்டணி போட்ட மஞ்சள் பொன்னி!
விதைக்காமலே ஒரு அதிசிய அறுவடை.. வறண்ட பகுதியிலும் வளமாக விளையும் சீத்தா!
திறந்தவெளியில் 5 டன் பசுமைக்குடிலில் 12 டன் (இணையில்லாத இரு மடங்கு மகசூல்)
வெறுத்துப் போன வாழ்க்கையை மீட்டுக் கொடுத்த கனகாம்பரம்
பீட்ரூட் வெற்றிக்கு விவசாய ஜோதிடம்
பசுமைக்குடிலில் வண்ணமிளகாய்
முருங்கை சாகுபடி
“இட்லிப் பூ .. அது என் இஷ்டப் பூ ..!” பூ வும் வாடாது . வருமானமும் தேயாது!
வாழைக்கு இடையில் வருமானம்…. 55 நாளில் அள்ளிக் கொடுக்கும் மல்லி! |
|
ஊடுபயிர் ஒன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு ‘அடுத்த வேளை’ என்பது கனவாகவே போயிருக்கும். வறட்சி, ஆள்பற்றாக்குறை, நோய்த் தாக்குதல் விலையின்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களைச் சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர்கள் தான். அந்த வகையில் வாழையில் ஊடுபயிராக மணக்கும் கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்து, வறுத்தெடுக்கும் வெயிலிலும் கூட வளமான வருமானம் பார்த்து வருகிறார் கோயமுத்தூர் மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள சம்பரவள்ளிப்புதூர் விவசாயி எம்.விஸ்வநாதன்.
“ஊடுபயிர் சாகுபடி என்பது குறுகியகாலத்தில் வருமானம் எடுக்கின்ற ஒரு யுக்தி. அந்த முறையில் தான் நான் ‘கொத்துமல்லித் தழையைப் பயிர் செய்திருக்கிறேன். மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டு போர்வெல், ஒரு கிணறு இருந்தாலும் நீர்ப்பற்றாக்குறை தான். அதனால் ஐந்து ஏக்கரில் மட்டும் தான் விவசாயம் நடக்கிறது. தொடர்ந்து 40 வருடங்களாக கதளி, நேந்திரம் வாழை விவசாயம் தான் பிரதானமாக செய்கிறேன். மற்றவர்கள் காய்கறி, புகையிலை என்று ஏதாவது ஒன்றை ஊடுபயிராக செய்கிறார்கள். நான் கொத்து மல்லித் தழையை சாகுபடி செய்கிறேன். இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது..”
வெயில் காலத்தில் தான் விலை கிடைக்கும்!
“பொதுவாக, கொத்துமல்லியைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வைகாசியிலிருந்து மார்கழி வரைக்கும் ஏற்ற காலம். மல்லி அதிக வெயிலில் தழையாது. நிழற்பாங்கான இடத்தில் தான் வளரும். தை மாதம் தொடங்கி வைகாசி வரைக்கும் வெயில் இருப்பதனால் அதிக வரத்து இருக்காது. பாத்திகள் மேல் தென்னங்கீற்றுகளை போட்டு நிழலை ஏற்படுத்தினாலும், 30% அளவுக்கு தான் தழையும். கோடைக் காலத்தில் கொத்துமல்லித் தழைக்கு தட்டுப்பாடு இருக்கும். அந்த நேரத்தில் சந்தைக்கு வருகிற மல்லிக்கு நல்ல விலை கிடைக்கும். இந்த விஷயத்தைக் கணக்கு பண்ணித்தான் ஐந்து மாத வயதுள்ள வாழைக்கு இடையில் கொத்துமல்லியை விதைத்தேன். 55 – ம் நாளிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது” முழுக்க இயற்கை முறையில் தான் விவசாயம் செய்து வருகிறார்.
ஏழரைக்கு ஏழரை இடைவெளி!
‘ஒரு ஏக்கர் நிலத்தில், ஆண்டு தோறும் தவறாமல் இரண்டு தடவை ‘ஆட்டுக்கிடை’ அமைக்க வேண்டும். இதற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்படி கிடை போடுவதால், ஒரு ஏக்கர் நிலம் முழுக்க ‘ஆட்டு எரு’ நிறைந்துவிடும். அதற்கு மேலாக 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்துவிட்டு, ஆழமாக இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு, ஏழரை அடி இடைவெளி இருப்பதுபோல பார் பிடித்து, கன்றுக்கு கன்று 5 அடி இடைவெளி விட்டு, முக்கால் அடி ஆழத்தில் குழியெடுத்து வாழையை நடவு செய்ய வேண்டும். இப்படி நடும்போது ஏக்கருக்கு 1,100 வாழைக்கன்றுகள் தேவைப்படும். நேந்திரம் வாழையை நடவு செய்ய கன்று, குழி, நடவுக்கூலி எல்லாம் சேர்த்து ஒரு தடவை உபயோகப்படுத்தும் வகையிலான தற்காலிக கொட்டுநீர்ப் பாசனத்தை அமைக்க வேண்டும்.
ஊடுபயிருக்கும் சொட்டுநீர்:
சொட்டுநீர்ப்பாசனம் என்பது கிணற்றுப் பாசன விவசாயிகளுக்கு ஒரு வரப் பிரசாதம். ஒரு ஏக்கராவிற்கான தண்ணீர் தான் கிணற்றில் இருக்கிறது என்றால் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் மூன்று ஏக்கருக்கு அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். பிரதானக் குழாயில் இருந்து பிரிந்து வருகிற சொட்டு நீர்க் குழாயில் 5 அடிக்கு ஒரு இடத்தில் தண்ணீர் சொட்டுகிறது போல் வாழைக்கு அமைக்க வேண்டும்.
மல்லியைப் பொறுத்தவரை ஏழரை அடிக்கு இருக்கின்ற பார் இடைவெளியில் 2 அடிக்கு ஒரு நுண்ணீர்க் குழாயை (மைக்ரோ டியூப்), 100 அடி நீளத்திற்கு அமைக்க வேண்டும். ஒரு பாருக்கு இரண்டுதான் வரும். இப்படி கணக்குப் போட்டால் ஏக்கருக்கு 20 குழாய் பிடிக்கும். அந்தக் குழாய்களில் இருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத துளைகள் மூலமாக மல்லிக்கு, இரண்டு புறமும் சொட்டு சொட்டாக தண்ணீர் கசிஞ்சு ஒரே சீராக போய்ச் சேரும்.
இந்த அமைப்புக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். வாழையில் இரண்டு போகம், கொத்துமல்லியில் மூன்று போகம் வரைக்கும் இதைப் பயன்படுத்தலாம். பிறகு, புதிதாக வாங்கனும்”.
12 கிலோ விதை!
வாழையை நடவு செய்த ஐந்து மாதம் கழித்துதான், கொத்துமல்லி விதைக்க வேண்டும். அப்பொழுதுதான் தேவையான நிழல் கிடைக்கும். ஏக்கருக்கு 12 கிலோ விதைகள் தேவைப்படும். நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 500 கிலோ வேப்பம் பிண்ணாக்கை முதல் களை எடுக்கும்போதே கொத்துமல்லி, வாழை இரண்டிற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டும்.
பெரும்பாலும் கலப்பட வேப்பம் பிண்ணாக்கு கிடைப்பதால் கிராமங்களில் வேப்பம் கொட்டைகளை நேரடியாக வாங்கி அதனுடன் புங்கன், இலுப்பை விதைகளையும் கலந்து அரைத்து, அதையே உரமாகப் பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கரில் வாழை, மல்லி சாகுபடி செய்ய செலவு – வரவு கணக்கு |
விவரம் |
செலவு |
வரவு |
உழவு |
1,000 |
|
தொழுவுரம் 10 டன் இறைப்புக் கூலியுடன் |
10,000 |
|
வாழைக் கன்று + நடவு (1,100) |
11,000 |
|
சொட்டுநீர்ப்பாசனம் |
35,000 |
|
வாழையில் களையெடுக்க |
3,000 |
|
மல்லி விதை 12 கிலோ |
2,500 |
|
இறைப்புக் கூலி |
2,000 |
|
மல்லியில் களையெடுக்க |
4,000 |
|
ஆட்டுக்கிடை |
3,000 |
|
வேம்பு, புங்கன், இலுப்பை, கலவை உரம் |
12,000 |
|
பஞ்சகவ்யா |
2,500 |
|
மல்லி பறிப்புக் கூலி |
300 |
|
மகசூல்: மல்லித்தழை
6 டன் x கிலோ 8 ரூபாய் |
|
48,000 |
வாழை மகசூல் 10 டன் x கிலோ 20 ரூபாய் |
|
2,00,000 |
மொத்தம் |
86,300 |
2,48,000 |
நிகர லாபம் |
|
1,61,700 |
குறிப்பு: சொட்டுநீருக்கான செலவு 35 ஆயிரம் ரூபாய்,
அடுத்த போகத்தில் அப்படியே மிச்சமாகிவிடும். |
மகசூல் 6 டன்!
“கொத்துமல்லியை விதைக்கும் பொழுது வாழைக்கு வயசு 160 நாள். 55 நாளில் மல்லி அறுவடைக்கு வந்துவிடுகிறது. இன்னும் 100 நாட்களில் வாழை அறுவடையை தொடங்கலாம். மல்லியைப் பொருத்தவரை ஊடுபயிரில் 6 டன் வரை மகசூல் கிடைத்தது. சராசரியாக மல்லித்தழை கிலோவிற்கு 8 ரூபாய் விலை போயிக்கொண்டிருக்கிறது. வியாபாரிங்க தோட்டத்திற்கே வந்து வாங்கிக்கொள்கிறார்கள். அதனால் வேன் வாடகை, கமிஷன் எந்த தொந்தரவும் இல்லை.
வாழை 10 டன்!
மல்லியை எடுத்த பின்னாடி, வாழைக்கு மண் அணைப்புச் செய்ய வேண்டும். அடுத்த 90 நாளைக்கு இரண்டு தடவை ஆர்கானிக் ஊட்டச்சத்து கொடுப்பேன். அதனுடன் அசோஸ்பைரில்லம் 40 கிராம், பாஸ்போ – பேக்டீரியா 40 கிராம், வேப்பம் பிண்ணாக்கு 200 கிராம் கலந்து செடிக்கு 280 கிராம் வீதம் இரண்டு முறை கொடுத்தால் இலை அனைத்தும் பசுமையோடு இருக்கும். தார் போடுவதற்கு முன்பும், பின்பும் பஞ்சகவ்யாவை வாழையோடு வேர் பகுதியில் கொடுக்க வேண்டும். ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுப்பேன். இதனால் சொத்தையில்லாமல் காயெல்லாம் ஒரே தரமாக இருக்கும். வாழையில் 10 டன் வரைக்கும் மகசூல் எதிர்பார்க்கிறேன். குறைந்தது கிலோ 20 ரூபாய்க்கு விலை போகும். இதிலே இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும்.
முழுக்க முழுக்க இயற்கை முறையில் மகசூல் எடுக்கிறேன். சூழலைக் கொடுக்காத இந்த இயற்கை விவசாயம் செய்வதில் நல்ல மகசூல் கிடைப்பதுடன் மனதும் நிறைந்திருக்கிறது.
தொடர்புக்கு:
திரு. விஸ்வநாதன்,
சம்பரவள்ளிப்புதூர்,
சிறுமுகை அருகில்,
கோயமுத்தூர் மாவட்டம்.
வெற்றிக்கு வழி சொன்ன வெட்டிவேர்.. இடுபொருள் இல்லாமலே இளிமையான விளைச்சல் |
|
சிவகங்கை மாவட்டம் வேலங்குடிக்கு அருகில் உள்ள குறுவாடிப்பட்டியைச் சேர்ந்தவர் தான் இந்த பாண்டியன். இரண்டு வருடத்திற்கு முன் ‘புல்லில் புதைந்து கிடைக்கும் புதையல் வெட்டி வேர்’ என்று பசுமை விகடன் இதழில் வந்த கட்டுரையைப் படித்த உடனே கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டேன். “பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து 2,000 விதைக் கிழங்குகளை வாங்கி வந்து, தென்னைக்கு ஊடுபயிராக பத்து சென்ட் நிலத்தில் சோதனை முயற்சியாக நடவு செய்தேன். நோய், நொடி தாக்காமல் இரசாயன உரம் இல்லாமல் பயிர் நன்றாக வளர்ந்து வந்தது. முதலில் நடவு செய்த பத்து சென்ட் நிலத்தில் இருந்து 70 கிலோ வேர் கிடைத்தது. இது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மறுபடியும் மூன்று ஏக்கரில் வெட்டிவேர் பயிர் செய்திருக்கிறேன்” என்று கூறிய பின்னர், தென்னைக்கு இடையில் வெட்டிவேர் சாகுபடி செய்யும் முறையை விவரித்தார்.
தென்னைக்கு ஊடுபயிர்:
“வெட்டிவேர் பத்து மாத பயிர். நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நடவு செய்ய ஏற்ற காலம் என்றாலும் எல்லா காலத்திலும் நடவு செய்யலாம். பொதுவாக வெட்டிவேர்க்கு மண்ணைச் சுத்திகரிக்கும் தன்மை உள்ளதால், எல்லா வகை மண்ணிலும் பயிர் செய்யலாம். இரசாயன உரங்களால் பாதிக்கப்பட்ட மண்ணை மறுபடியும் உயிரோட்டமாக்குவதற்கு வெட்டிவேரை பயிரிட்டால் போதும். மேலோட்டமாக வேர் பாய்ச்சாத, ஓரளவு வெயிலை நிலத்தில் விழச் செய்யக்கூடிய அனைத்துப் பயிர்களுக்கு இடையிலும், வரப்புகளிலும் வெட்டிவேரை சாகுபடி செய்யலாம்.
தென்னைக்கு இடையில் இதை நடவு செய்யும்போது இரண்டு வரிசைக்கு மத்தியில் நடவேண்டும். தென்னையை ஒட்டி நடவு செய்தால், காய் பறிப்பதற்கும், நடமாடுவதற்கும் சிரமமாக இருக்கும். இட வசதிக்கு ஏற்ப தொழுவுரம் போட்டு பாத்தி எடுத்து நீர் பாய்ச்சிக் கொள்ள வேண்டும். பின்பு ஈரமாக இருக்கும் பாத்தியில் செடி ஒரு அடி இடைவெளியில் நெல் நாற்று போல் நடவு செய்தால் போதும். முதல் 15 நாட்களுக்கு பாத்தியில் ஈரம் காயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்குள் செடி துளிர்த்து மேலெழுந்துவிடும். நான்கு மாதத்திற்குள் வரும் களைகளை அப்புறப்படுத்த வேண்டும். நான்காவது மாதம் களையெடுக்கும் போது செடிக்கு மண் அணைத்து விட வேண்டும். அதற்கு மேல் கிளைகள் அதிகம் வரும் என்பதால் களை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. நான்காவது மாதம் எடுக்கும் களைக்குப் பிறகு அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.
தூருக்கு 50 கிழங்குகள்:
வெட்டிவேரை எந்த நோயும் தாக்குவதில்லை. சமயங்களில் இலையின் நுனிப்பகுதி கருகியது போல் காணப்படும். ஆனால் அதனால் மகசூல் பாதிப்பு இருக்காது. புல்லைப் போல் வளரும் தாள், பத்தாவது மாதத்தில் பெருக்கத் தொடங்கி தண்டு போல் கனமாகிவிடும். அந்த நேரத்தில் செடியும் பூக்கும். அதுதான் அறுவடைக்கான நேரம். முதலில், நெல்லை அறுப்பது போல் நிலத்திற்கு மேலே உள்ள புல்லை அறுத்து விட வேண்டும். பின்பு ‘வாச்சாத்து’ (மண்வெட்டி போன்ற கருவி) வைத்து வேரைச் சுற்றி மண்ணை தோன்டி வேரை வெளியில் எடுக்க வேண்டும். தென்னைக்கு நடுவே ஊடுபயிராக இருந்தால் அந்த இடத்தில் தோண்டும்போது அதிக ஆழமாகத் தோண்டக்கூடாது. அப்படிச் செய்தால் தென்னையின் வேர்கள் பாதிக்கப்படும்.
தோண்டி எடுத்த வெட்டிவேரை நீரில் அலசி, வேர் மற்றும் தண்டுபு் பகுதிகளை தனியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். வேர் பகுதிக்கும் தண்டுப் பகுதிக்கும் இடையில் வேர்முடிச்சு போன்ற கிழங்கு இருக்கும். இதுதான் உயிர்பகுதி. இதுதான் விதைக் கிழங்கு. ஒரு தூருக்கு அதிகபட்சமாக 50 கிழங்குகள் வரை இருக்கும். இதை புதிதாக நடவு செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யலாம். கிட்டத்தட்ட 2 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட வேர்கள் கூட அறுவடையில் கிடைக்கும். இந்த வேர்களை நிழலில் ஒரு வாரம் வரை உலர்த்தி விற்பனைக்கு அனுப்பலாம்.
ஏக்கருக்கு 2 டன் வேர், 30 டன் வைக்கோல், 10 லட்சம் கிழங்கு..!
முதல் அறுவடையில் பத்து சென்ட் இடத்திலிருந்து 70 கிலோ வேர் கிடைத்தது. கிலோ 100 ரூபாய் என்று விற்பனை செய்தேன். மொத்தம் 3,500 ரூபாய் செலவு செய்து 7,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
ஊடு பயிராக செய்கின்ற பொழுது ஒரு அடி இடைவெளிவிட வேண்டியிருக்கும். தனிப்பயிராக செய்தால் முக்கால் அடி இடைவெளி விட்டாலே போதுமானது. ஏக்கருக்கு 50 ஆயிரம் விதைக் கிழங்கு தேவைப்படும். அரையடி உயரம் பாத்தி போட்டு நடவு செய்தால் வேர் அதிகமாக கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு கணக்குப் போட்டால் 7 டன் வரைக்கும் கிடைக்கும். ஆனால் குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் கண்டிப்பாக கிடைக்கும். இதைத் தவிர 30 டன் வைக்கோல், 10 லட்சம் விதைக் கிழங்கு என்று கூடுதல் பலனையும் பார்க்கலாம். ஒரு கிலோ வேர் சராசரியாக 50 ரூபாய் வைத்தாலும், இரண்டு டன்னிற்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்.
விதைக் கிழங்கு அதிகபட்சம் இரண்டு ரூபாய் வரை கேரளாவில் விலை போயிக்கொண்டிருக்கிறது. 10 லட்சம் விதைக் கிழங்கும் விலை போனால் அதில் 20 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனால் விவசாயிகளுக்கு இந்த வெட்டிவேர் விஷயம் இன்றும் சரியாகப் போய்ச் சேர வில்லை. ஆகையால் அந்த அளவுக்கெல்லாம் விலை போகாது. பாரதியார் பல்கலைக்கழகத்திலேயே 50 பைசாவுக்குதான் கொடுக்கறார்கள். அதுவும் குறைந்த அளவுக்குதான் போய்க்கிட்டிருக்கு.
காளான் வளர்ப்பிற்கும், மண்புழு வளர்ப்பிற்கும் வெட்டி வேரோடபுல் உபயோகமாக இருக்கும். இளம் புல்லை அறுத்து வாடவிட்டு மாட்டுக்குத் தீவனமாகவும் கொடுக்கலாம்.
இயற்கை உரம், செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, பூச்சி விரட்டி என்று எந்த இடுபொருளும் இல்லாமல் வளர்ந்து வந்துவிடும் வெட்டிவேர். மண்ணை வளமாக்கிறதோடு, வருமானத்தையும் திடமாக்கும். அப்படிப்பட்ட வெட்டிவேரை எனக்கு அறிமுகம் செய்த பசுமை விகடன், பாரதியார் பல்கலைக்கழகம் இது இரண்டுக்கும் நான் எப்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று நெகிழ்ந்தார்.
தொடர்புக்கு:
சி. பாண்டியன்,
சிவகங்கை மாவட்டம்,
குறுவாடிப்பட்டி,
வேலங்குடி.
அலைபேசி: 93629 - 49176
கடனாளி ஆக்கிய இரசாயனம்.. கவலையைப் போக்கிய ஜீவாமிர்தம்..! தென்னையோடு ஜிலுஜிலுக்கும் ஜீரோ பட்ஜெட் வாழை! |
|
ஊர் எல்லாம் தென்னையில் ஈரியோபைட் சிலந்தி தாக்கியிருக்கு. ஆனால் என்னுடைய தோட்டத்திற்கு தென்னையில் அந்தத் தாக்குதலே இல்லை! என்று ‘அரசூர்’ சோமசுந்தரம் கூறினார்.
“ரசாயன உரம் போட்டு, தென்னையைப் பராமரித்து வந்தபொழுது ஈரியோபைட் சிலந்தி தாக்குதல் அதிகமாக இருந்தது. காயெல்லாம் சொறி பிடித்து, அம்மைப் போட்டது போலாகிவிட்டது. பணத்தை வீணடித்து அனைத்து மருந்தையும் அடித்துப் பார்த்தேன். ஆனால் சிலந்தி, எதற்கும் கட்டுப்படவில்லை. இரண்டு வருடமாக எந்த மருந்தும் போட வில்லை. ஜீவாமிர்தம் மட்டும்தாக் கொடுக்கிறேன். ஈரியோபைட் இருந்த இடமே இல்லாமல் போயிவிட்டது. இப்பொழுது காயெல்லாம் நல்ல பொலிவுடன் காணப்படுகிறது” என்று சோமசுந்தரம் கூறினார்.
பொள்ளாச்சிப் பகுதியில் ஒரு மரத்திற்கு நூறில் இருந்து நூற்றிப்பத்து காய் வரைக்கும் தான் சராசரியாக கிடைக்கிறது. ஆனால் நான் 165 காய்க்கு மேல் எடுக்கின்றேன். ஊடுபயிர் செய்வதால் தென்னையில் காய்ப்புத் திறன் கூடுமே தவிர குறையாது என்று நண்பர் உடையகுளம் கணேஷ் கூறினார். அதனால் வாழை, முருங்கை இது இரண்டையும் ஊடுபயிராகப் போட முடிவு செய்திருக்கிறேன்.
20, 30 சாம்பல் வாழையை (கற்பூர வாழை), தென்னைக்கு நடுவில் நட்டு வைத்தேன். இதற்கென்று தனியா தண்ணீரோ, உரமோ கொடுக்கவில்லை. தென்னைக்குப் பாயுற ஜீவாமிர்தம் தான் இவற்றிற்கும் போகிறது. அதிலயே வாழை நன்றாக தழைந்து வந்துவிடுகிறது. இதை பார்க்கும் பொழுது ஊடுபயிர் பிரதானப் பயிருக்குத் துணைபோகுமே தவிர பிரதானப் பயிருடன் விளைச்சலைக் கெடுக்காது என்பது நன்றாகப் புரிகிறது.
ஒரு ஏக்கர் முழுவதும் ஊடுபயிராக போட வேண்டுமென்றால் 600 வாழைக் கன்று தேவைப்படும் என்று கூறுகிறார்கள். ஒரு குலை (தார்) 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்கின்றது.
அதனால் இந்த வருடமே ஊடுபயிரை ஆரம்பிக்கப் போகிறேன் என்று உற்சாகத்தோடு கூறினார் சோமசுந்தரம்.
“ரசாயன உரங்களைப் போட்டப்ப மூன்று நாளைக்கு ஒரு தண்ணீர் கொடுத்தேன். 10 வருடத்திற்கு முன் கடும் வறட்சி வந்தபொழுது ஐந்தாறு போர் போட்டுத்தான் சமாளித்தேன். அதற்காக மட்டும் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் கடனாகிப் போனது. ஆனால் ஜீவாமிர்தத்துக்கு மாறின பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறைதான் பாசனம் செய்கிறேன். ஆனால் இன்றும் ஈரம் அப்படியே இருக்கிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை விட்டாலே, போதும் என்று நினைத்தேன்.
“இந்த ஜீரோ பட்ஜெட்டை முன்கூட்டியே எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தால் 3 லட்சம் செலவாகமல் இருந்திருக்குமே” என்று பசுமை விகடனுக்கும், ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மைக்கும் நன்றியைத் தெரிவித்தார் சோமசுந்தரம்.
தொடர்புக்கு:
திரு. சோமசுந்தரம்,
அரசூர்.
குஷி தந்த குதிரைவாலி.. கலகலப்பாக்கிய கம்பு |
|
சென்னையில் பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதி சடையாண்டி மற்றும் அவருடைய துணைவியார் சுசீலா ஆகியோர், பணி காரணமாகவும் போதுமான நீராதாரம் இல்லாமையாலும் விவசாயத்தை விட்டு விலகியிருந்தவர்கள். ஆனால் “பசுமை விகடன்” படிக்க ஆரம்பித்தப்பிறகு சொந்த ஊரான மதுரை மாவட்டம், எழுமலை கிராமத்திலிருக்கும் தங்களுடைய நிலங்களின் மீது பார்வையைத் திருப்பி, தற்போது தீவர விவசாயியாகவே மாறியிருக்கின்றனர். குதிரைவாலி, கம்பு, துவரை, மொச்சை, கல்லுப்பயிறு (அழிவின் விளிம்பில் இருக்கும் பயிறு வகைகளில் ஒன்று), பல்லாண்டுத் துவரை, வெற்றிலை வள்ளி, நெல், காய்கறிகள் என இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
சித்திரையில் உழவு போட்டா நிலத்தில் பொன்னு விளையும் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு சிறப்பு இருக்கு.
எங்க பகுதியில் போதுமான தண்ணீர் வசதியில்லை. சரியா தண்ணீர் கிடைத்தால், இது பொன்னு விளையிற பூமிதான். இந்த நிலங்களில் ஒரு காலத்தில் குதிரைவாலி, சாமை, கம்பு, சோளத்தைத்தான் விதைப்பார்கள்.
எங்ககிட்ட பெரும்பாலும் மானாவாரி நிலம் தான். அதில் மூன்று வருடமாக வெள்ளாமை செய்யவே இல்லை. இப்பத்தான் 20 ஏக்கரில் மட்டும், சட்டி கலப்பையால் கொத்தி விட்டு, 5 கலப்பையால் இரண்டு உழவு போட்டு விட்டுட்டோம். பிறகு ஆடியில் நான்கு உழவு போட்டு விதைத்தோம்.
குதிரைவாலி மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற பயிர். கிட்டத்தட்ட நூறு நாளில் அறுவடைக்கு வந்துவிடும். ஒன்றிரண்டு மழை கிடைத்தாலே நல்ல மகசூல் கிடைக்கும். நாங்கள் மொத்தம் ஐந்து ஏக்கரில் குதிரைவாலி விதைத்தோம். ஏக்கருக்கு ஐந்து கிலோ விதைகள் வீதம் மொத்தம் 25 கிலோ விதைகள் தேவைப்பட்டன. ‘சால்’ பயிராக ஏக்கருக்கு துவரை நான்கு கிலோ, மொச்சை, தட்டை, கல்லுப் பயிறு எல்லாம் கலந்து நான்கு கிலோவும் விதைத்தோம். ஆறு உழவு போட்டதாலும், மழை சரியாக பெய்யாததாலும் அதிகமாக களை இல்லை. அதனால் நாங்கள் களை எடுக்கவில்லை. நடவுக்குப் பிறகு ஒருமுறை மட்டும் ஏக்கருக்கு 100 கிலோ மண்புழு உரத்தை தூவியதோடு சரி, அடுத்தது அறுவடைதான்.
தட்டையை நிலத்திலேயே விட்டுவிட்டு கதிரை மட்டும் மார்கழி முதல் வாரத்தில் அறுவடை செய்தோம். எங்கள் பகுதியில் தானியத்தைதான் கூலியாக வாங்குகிறார்கள். 5 ஏக்கர் குதிரைவாலி அறுவடை செய்து, டிராக்டர் விட்டு நசுக்கி, தூற்றி எடுத்ததில் கூலி கொடுத்தது போக 23 குவிண்டால் மகசூல் கிடைத்தது. குவிண்டால் 1,650 ரூபாய் விலையில் விற்பனை செய்தோம். செலவு போக 5 ஏக்கரில் 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. சால் பயிராக விதைக்கப்பட்ட துவரை உள்ளிட்ட மற்ற பயிறுகளின் வருமானம் தனி.
தெம்பு கொடுத்த கம்பு!
குதிரைவாலிக்கு செய்தது போலவே உழவு போட்டு, மொத்தம் 15 ஏக்கரில் கம்பு விதைத்தோம். இதுவும் 100 நாள் பயிர் தான். ஏக்கருக்கு ஐந்து கிலோ விதைகள் வீதம், மொத்தம் 75 கிலோ விதைகள் தேவைப்பட்டன. சால் பயிராக ஏக்கருக்கு துவரை நான்கு கிலோ, மொச்சை, தட்டை, கல்லுப் பயிறு எல்லாம் கலந்து 4 கிலோ விதைத்தோம். இடையில் ஒரு முறை 100 கிலோ மண்புழு உரம் மட்டுமே கொடுத்தோம். வேறு எந்த பண்டுதமும் இல்லாமல் ஏக்கருக்கு சராசரியாக ஆறு குவிண்டால் கம்பு கிடைத்தது. மொத்தம் 15 ஏக்கரில் கூலி போக, 87 குவிண்டால் மகசூல் கிடைத்தது. குவிண்டால் 820 ரூபாய் வீதம் விற்பனை செய்தோம். செலவு போக 15 ஏக்கரில் 50 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைத்தது. சால் பயிராக விதைத்த பயிறு வகைகளின் வருமானம் தனி.
பலே பல்லாண்டு துவரை!
மொச்சை 2 டன் மகசூல் கிடைத்தது. துவரையை இன்னும் அறுவடை செய்யவில்லை. காய் நல்லா பிடிச்சு இருக்கு. அறுவடை முடிஞ்சதும் தான் எவ்வளவு கிடைக்கும் என்று தெரியும். எங்களுக்கு தண்ணீர் வசதியோடு சிறிது இடம் இருக்கு. ஐந்து சென்ட்டில் 100 கிராம் பல்லாண்டுத் துவரை விதையை மூன்று அடி இடைவெளியில் நட்டு அதில் ஊடுபயிராக வெங்காயம், வெற்றிலை, வள்ளிக் கிழங்கு, அகத்தி, கீரை, பாசிப் பயிறு நடவு செய்தோம். பல்லாண்டுத் துவரை, செடியே ஒடிந்து விழுவது போல் காய் பிடித்திருந்தது.
50 சென்டில் மண்ணச்சநல்லூரி பொன்னியை நட்டி இருக்கோம். வேப்பிலை, கொழிஞ்சி, ஆவாரை தழைகளை நிலத்தில் போட்டு மிதிச்சுதான் நாத்து நட்டோம். நடவுக்குப் பிறகு ஒரு தடவை 50 கிலோ மண்புழு உரம், ஒரு மாதத்தில் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 50 கிலோ கடலைப் புண்ணாக்கு, என்று இவை அனைத்தையும் சிறிது சிறிதாகக் கொடுத்தோம். கதிர் வைத்த பின்பு மீன் அமினோ அமிலம் ஒரு தடவை அடித்தோம். பயிறு தெளிவாக இருக்கிறது.
உழவு மட்டும் போட்டு விதைத்தாலே மகசூல் தருகிற இந்த மாதிரி சிறுதானியங்களைத்தான் இனிமே தொடர்ந்து விளைவிக்கப்போகிறோம். குதிரைவாலி மாதிரியான சிறுதானியங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. அதற்கு தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்புக்கு:
திருமதி. சுசீலா,
எழுமலை கிராமம்,
மதுரை மாவட்டம்.
அலைபேசி: 94423 - 63064
சம்பாவுக்கு ஊடுபயிராக குறுவை.. காட்டுயானத்தோடு கூட்டணி போட்ட மஞ்சள் பொன்னி! |
|
தென்னைக்கு ஊடுபயிராக கோகோ, மிளகாய்க்கு ஊடுபயிராக வெங்காயம் என இரண்டு அல்லது மூன்று வித பயிர்களை சாகுபடி செய்வது வழக்கமான ஒன்று. அதில் கொஞ்சம் வித்தியாசமாக நெல்லுக்கு ஊடுபயிராக நெல்லையே சாகுபடி செய்திருக்கிறார், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த நாடக நடிகர் கரிகாலன்.
மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், சிவப்புக் குடவாழை, ராடக்குருவிகார் என பாரம்பர்ய ரகங்களையே தேடிப் பிடித்து வந்து சாகுபடி செய்வதில் ஆர்வம் கொண்டவர் கரிகாலன்.
“எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. பாரம்பரிய நெல் ரகங்களைப் பெருக்கணும். நமக்குத் தேவையான விதை நெல்லையெல்லாம் நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. அதனால் விதை நெல்லுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்க ஆரம்பித்தேன். 100 கிராம், 200 கிராம் என்று வாங்கிச் சேர்த்த நெல்லை, என்னுடைய நிலத்தில் தனித்தனியாக பிரித்து விதைத்தேன்.
பஞ்சகாவ்யா, அழுதக்கரைசல், மீன் அமிலம் என்று முழுவதுமாக இயற்கை விவசாயம்தான். விதைத்த தொண்ணூறாவது நாட்களில் மஞ்சள் பொன்னியை மட்டும் அறுவடை செய்திருந்தேன். அதற்குள் மழை வந்து பயிர் அனைத்தும் அழிந்து போயிவிட்டது. அதில் காட்டுயானம் வகை நெல் மட்டும் கொஞ்சம் மிஞ்சியது. கையாலேயே உருவி எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
மொத்தம் ஏழு வகை நெல்லை நடவு செய்தேன். மழைக் கொட்டித் தீர்த்ததில் ஐந்து ரக பயிரும் அழிந்துவிட்டது. ஆனால் இரண்டு ரகப் பயிர் மட்டும் தாக்குப்பிடித்து நின்றது. இதில் இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் ஒரே ரகத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடவு செய்யக் கூடாது என்பதுதான்.
கையில் இருந்த அந்த இரண்டு வகை நெல்லையும் தான் இந்த வருடம் ஆடிப்பட்டத்திலே நாத்துப்பாவி நட்டேன். சம்பா ரக காட்டுயானம் 180 நாள் (ஆறு மாதம்) பயிர். குறுவை ரக மஞ்சள் பொன்னி 110 நாள் பயிர், சரியாக வராமல் போனாலோ அல்லது வேறு காரணத்தால் அழிந்து போனாலோ ஒன்று போனாலும் மற்றொன்று காப்பாத்தும் என்கிற நம்பிக்கையில் தான் இரண்டையுமே சேர்த்து நடவு செய்திருக்கிறேன். 2 மா நிலத்தில் (66 சென்ட்), இரண்டு ரகங்களைக் கலந்தும், 1 மா நிலத்தில் (33 சென்ட்) காட்டுயானத்தை மட்டும் தனியாகவும் நடவு செய்திருக்கிறேன்”.
நாற்றுத் தயாரிப்பு!
நாற்றங்காலுக்கு 1 சென்ட் நிலம் தேவைப்படும். மேட்டுப் பகுதி நிலத்தில் மண் வெட்டியால் களைகளைக் கொத்தி மண்ணை பொல பொலப்பாக மாற்ற வேண்டும். அதில் ஒரு கூடை எருவைச் சேர்த்துக் கிளறி, மண்ணை சமப்படுத்த வேண்டும். 66 சென்ட் நிலத்திற்கு 9 கிலோ நெல் தேவைப்படும். 6 கிலோ காட்டுயானம் நெல், 3 கிலோ மஞ்சள் பொன்னி இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம். விதைக்கும் போது நெல்லைப் பிரித்தெல்லாம் விதைக்கத் தேவையில்லை. ஒன்றாகக் கலந்தே விதைக்கலாம். இவற்றை விதைத்து, தினம் ஒரு பூ வாளியால் தண்ணீர் ஊற்றி வந்தால், 15 முதல் 20 நாட்களில் நாற்று தயாராகி விடும்.
அழுதக்கரைசல் மட்டுமே போதும்!
பிறகு, 66 சென்ட் நிலத்தை உழுது, சேறாக மாற்றி, நாற்றுக்களைப் பறித்து, குத்தாக நடவு செய்யாமல், அரையடிக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். (இரண்டு ரக நாற்றுகளைப் பிரித்து நடவு செய்யத் தேவையில்லை. இரண்டு பயிர்களுக்கும் வயது வித்தியாசம் இருப்பதால் அறுவடையின் போது எளிதாகவே பிரித்து அறுவடை செய்யலாம்).
33 சென்ட் நிலத்தில் காட்டுயானம் நெல்லை நேரடி விதைப்பாக செய்து கொள்ள வேண்டும். அதற்கு மூன்று கிலோ விதை நெல் தேவைப்படும்.
காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருப்பது போல தண்ணீர் கட்ட வேண்டும். நடவு செய்த 15 மற்றும் 30 – ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். அந்த சமயங்களில் தொட்டி (13 லிட்டர்) ஒரு லிட்டர் அழுதக்கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 தொட்டிகள் தேவைப்படும். வேறு எந்த ஊட்டமும் தேவையில்லை.
தூருக்கு 190 மணிகள்!
மஞ்சள் பொன்னியில் 15 முதல் 26 தூர்கள் வரை பிடித்து ஒரு தூருக்கு 120 முதல் 200 மணிகள் வரை இருக்கும். காட்டுயானத்தில் 25 முதல் 67 தூர்கள் வரை பிடித்து ஒரு தூருக்கு 150 முதல் 190 மணிகள் வரை கூட கிடைக்கும். 110 – வது நாளில் மஞ்சள் பொன்னி அறுவடைக்குத் தயாராகி விடும். குறைந்தபட்சம் 250 கிலோ நெல் கிடைக்கும்.
காட்டுயானம் 180 – வது நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும். குறைந்தது 16 மூட்டைகள் (70 கிலோ மூட்டை) வரை நெல் கிடைக்கும்.
ஒரு மூட்டை 1,100 ரூபாய்!
பூச்சிக்கொல்லி, உரம் என்று எதுவும் கொடுக்காததால் கிடைக்கிறது எல்லாமே லாபம்தான் மஞ்சள் பொன்னியில் 280 கிலோ நெல் அறுவடை செய்தேன். காட்டுயானத்தை இன்னும் ஒரு மாதம் கழித்து தான் அறுவடை செய்ய வேண்டும். தூர் பிடித்திருப்பதை வைத்துப் பார்த்தால் 18 மூட்டை வரைக்கும் கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறேன். ஏக்கருக்கு மொத்தம் 21 மூட்டைக்குக் குறையாமல் கிடைக்கும். இயற்கை முறை நெல் என்பதால் கூடுதல் கூடுதல் விலையும் கிடைக்கிறது. இப்பொழுது ஒரு குவிண்டால் நெல் 1,100 ரூபாய்க்கு அரசாங்கம் எடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய நெல் 70 கிலோ மூட்டையே 1,100 ரூபாய் வரை விலை போகிறது. அது தான் இயற்கை மகிமை.
தொடர்புக்கு:
திரு. கரிகாலன்,
திருத்துறைப் பூண்டி,
திருவாரூர் மாவட்டம்.
அலைபேசி: 92456 - 21018
விதைக்காமலே ஒரு அதிசிய அறுவடை.. வறண்ட பகுதியிலும் வளமாக விளையும் சீத்தா! |
|
‘அனோனா ரெடிகுலேட்டா’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட சீத்தா பழத்தை ‘கஸ்டர்டு ஆப்பிள்’ என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.
நம் ஊரில் சீத்தா பழத்தை தனிப் பயிராக பெரும்பாலும் சாகுபடி செய்வதில்லை. தமிழகத்தில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் காடுகளில் இந்த சீத்தா மரங்கள் நிறைய உண்டு. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம்.
அஞ்சூர், ஜெகதேவி, செந்தாரப்பள்ளி, வரட்டானப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி கிராமங்களில் சீத்தா பழ வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கிறது.
ஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி காயாகி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் விற்பனைக்கு வந்து விடுகின்றன. காடுகளிலும் புறம்போக்கு இடங்களிலும் விளையும் சீத்தாவை வியாபாரிகள் மொத்தமாக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளிடம் குத்தகைக்குப் பேசிக் கொள்கிறார்கள். பழுக்கும் பக்குவம் வந்த காய்களைப் பறித்து தர வாரியாகப் பிரித்து, பெட்டிகளில் அடுக்கி விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். சில விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மரங்களில் பறிக்கும் காய்களை சந்தைகளில் வியாபாரிகளிடம் கூடைக் கணக்கில் விற்றுச் செல்கின்றனர். இப்படி பல விவசாயிகளிடம் சிறுக சிறுக வாங்கிய காய்களை வியாபாரிகள் ஒன்றாகச் சேர்த்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
உரம், பூச்சி மருந்து எதுவுமே இல்லை!
பெட்டியில் அடுக்கப்பட்ட சீத்தா காய்களை கேரளாவிற்கு அனுப்புவதற்காக வேனில் ஏற்றிக்கொண்டிருந்த குருவி நாயனப்பள்ளி வியாபாரி நரசிம்மன் கூறுகையில் “மத்த பயிர்களை போல் சீத்தாவை யாரும் நடவு செய்து உருவாக்குவதில்லை. வவ்வால் மாதிரியான பறவைகள், அணில், குரங்கு எல்லாம் உண்றுவிட்டு போடும் விதை தானாகவே முளைத்து வந்து பலன் தருகின்றது. உரமோ, பூச்சி மருந்தோ இல்லாமல் விளையக்கூடிய பழம் இது. அதனால் சாப்பிடும் அனைவருக்கும் எந்தக் கெடுதியும் வருவதில்லை. அதேநேரம் அதிகப்படியான சளி, சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதை உண்ணுவதில்லை. கூழ் போல் மிருதுவான சதை இருப்பதால் பற்கள் இல்லாதவர்கள் கூட சீத்தா பழத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். சென்னை, கேரளாவில் விதையை நீக்கிவிட்டு பழக்கூழை மட்டும் பதப்படுத்தி ஐஸகிரீம் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
நல்லா விளையும்! ஆனால் வைத்து விற்கமுடியாது!
எங்களை போன்ற வியாபாரிகள் தோட்டத்துகாரர்களிடம் மொத்தமாக குத்தகைக்கு பேசிக்கொள்வோம். பஞ்சாயத்துக்கு உட்பட்ட மரங்களை உள்ளூரில் யாராவது ஏலம் எடுத்திருப்பார்கள். அவர்களிடம் இருந்து மொத்தமாக விலை பேசி காய்களைப் பறிப்போம். பெரும்பாலும் கரட்டுப் பகுதியாவே இருப்பதால் காய்களை பறித்து ஒரு இடம் சேர்ப்பதற்குள் மிகவும் கடினமாக இருக்கும். ஒரு கிலோ பழத்திற்கு பருத்தைப் பொறுத்து ஒரு ரூபாயிலிருந்து அதிகபட்சம் பதினைந்து ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். காய்களை செடியில் இருந்து பறித்து அதிகபட்சம் நான்கு நாட்களுக்குள் விற்பனை செய்யலாம் என்றால் கறுத்து போய் வீணாகிவிடும். இது ஒன்றுதான் சீத்தா பழ விஷயத்தில் இருக்கின்ற பிரச்சனை. இதைத் தோட்டப் பயிராக நட்டாலும், நன்றாக விளையும் ஆனால் திரண்ட காய்களை இருப்பு வைத்து விற்க முடியாது என்பதால் தான் தோட்டத்தில் தனிப் பயிராக நட யாரும் முன்வருவதில்லை.
வறட்சிப் பகுதியிலும் வளர்க்கலாம்!
இயற்கையாகக் கிடைக்கும் சீத்தா ரகத்தில் விதைப் பகுதி அதிகமாகவும் சதைப் பகுதி குறைவாகவும் இருக்கும். ஆனால் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ‘ஏ.சி.கே – 1’ என்ற சீத்தா ரகத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ரகப் பழங்கள் சிறிய விதைகளையும் நிறைய சதைப் பற்றான பகுதிகளையும் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் இருக்கும் பண்ணையில் கூட தாய்ச்செடி மூலம் இந்த ரக சீத்தா கன்றுகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு கொடுக்கப்படுகின்றன. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகம் என்பதால் மிக குறைந்த அளவு நீர்ப்பாசனம் இருக்கும் பகுதியிலும் இதை நட்டு வருமானம் பார்க்கலாம். ஆனால், சீத்தா பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் தாக்குப் பிடிக்காது என்பது தான் பெரிய குறை. ஆங்காங்கே குளிர்பதனக் கிடங்குகள் இருந்தால் சீத்தா காய்களை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.
தொடர்புக்கு:
‘சட்டையில்லா’ சாமியப்பன்,
அலைபேசி: 95974 - 24359
திறந்தவெளியில் 5 டன் பசுமைக்குடிலில் 12 டன் (இணையில்லாத இரு மடங்கு மகசூல்) |
|
பசுமைக்குடில் அமைத்து அதில் விவசாயம் செய்தால் எந்தச் சேதாரமும் இல்லாமல் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அறுவடை செய்ய முடியும் என்று கோயம்புத்தூர் மாவட்டம், முடுக்கன் துறையைச் சேர்ந்த விவசாயி மனோகரன் கூறுகிறார்.
இவர் வசிக்கும் அன்னூர் பகுதி முழுவதுமே வறண்ட பிரதேசம் தான் என்றாலும் முட்டிமோதி விவசாயம் செய்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். கூலியாள் பற்றாக்குறை உர விலையேற்றம், தண்ணீர்த் தட்டுப்பாடு என்று விவசாயத்தை நோக்கி புதிய சவால்கள் நீளும்போது ஒவ்வொன்றையும் முறியடிக்க புதுப்புது யுக்திகளைக் கற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் இயற்கைச் சீற்றம், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றைச் சமாளிப்பதற்காகத்தான் பசுமைக்குடில் விவசாயத்தில் நான் இறங்கியிருக்கிறேன்.
பூக்களுக்கு மட்டுமில்லை.. காய்கறிகளுக்கும் தான்..!
எனக்கு ஐந்து ஏக்கர் நிலமிருக்கு. ஆள் பற்றாக்குறையால் எதையுமே நினைத்த நேரத்திற்கு செய்ய முடியாது. நாம் சொல்கின்ற நேரத்திற்கு வேலையாட்கள் வருவது இல்லை. அதற்குள்ளே களைகள் பெரிதாகிவிடும். காய் முத்திவிடும். திறந்தவெளி விவசாயித்தில் இதுமாதிரி நிறைய பிரச்சனைகள் அந்த சமயத்தில் தான் பசுமைக்குடில் பத்தி கேள்விப்பட்டேன். அதை பூ விவசாயத்திற்கு மட்டு்ம் தான் என்று ஆரம்பித்தில் நினைத்தேன். இதில் காய்கறி வளர்க்கலாம் என்று தெரிந்தவுடனே அதற்கான வேலையில் இறங்கிவிட்டேன்.
சென்ற வருடம் இரண்டு பசுமைக்குடில் அமைத்தேன். முதலில் தக்காளி, அடுத்து வெள்ளரி போட்டேன். இரண்டுமே நல்ல விளைச்சல் கொடுத்தது. ஆரம்பத்தில் இரண்டிற்குமே இஸ்ரேல் விதைகளைத் தான் பயன்படுத்தினேன். அந்த விதைகளை ஊட்டியில் கொடுத்து, நாத்து உற்பத்தி செய்து நடவு செய்தேன். நல்ல காய்ப்பு.
இப்பொழுது மொத்தம் நான்கு பசுமைக்குடில் இருக்கு. இரண்டு குடில்களை தக்காளி விதைக்கத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு குடிலில் விதைகளுக்காக தக்காளி விட்டிருக்கேன் (முழுக்க நம்ம ஊரு விதைகள்தான்). இன்னொரு குடிலில் வெள்ளரி இருக்கு. ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை செய்யலாம்.
இருபது நாட்களில் பசுமைக்குடில்!
பசுமைக்குடில் அமைப்பதற்கு பாலித்தீன் ஷீட், துருப்பிடிக்காத இரும்பு பில்லர், சட்டம் ஒரு சதுர மீட்டருக்கு அறுநூற்று ஐம்பது ரூபாய் வரை செலவாகும். பகுதிக்குப் பகுதி இது வித்தியாசப்படலாம். பொதுவாக 1,000 சதுர மீட்டரை ஒரு யூனிட் என்று வைத்திருக்கிறார்கள். ஒரு யூனிட் என்பது கிட்டத்தட்ட கால் ஏக்கர். ஐந்து லேயர், 200 மைக்ரான்ஸ் கொண்ட பாலித்தீன் ஷீட் மூலமாக குடில் அமைத்தால், புற ஊதாக் கதிர்கள் நன்றாக தடுக்கப்படுவதோடு நிறைய நாள் உழைக்கும். தரமான ஷீட்டுகளை பெங்களூரில் இருந்துதான் வரவழைத்தேன். அவர்களே குடில் அமைத்து கொடுத்தார்கள்.
ஐம்பது சதவீத மானியம்!
ஒரு யூனிட் குடில் அமைப்பதற்கு ஆறரை லட்சம்செலவாகும். இதில் 50% அரசு மானியமாக கிடைத்துவிடும். சொந்தப் பணத்திலயோ வங்கிக்கடன் மூலமாகவோ குடில் அமைத்து முடித்த பிறகு தான் மானியம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் நான்கு குடில் அமைக்கலாம். ஒரு நபருக்கு ஒரு யூனிட்டுக்கு மட்டும்தான் அரசு மானியம் கிடைக்கும். நான் கூட்டுவிவசாயம் செய்வதால் நாலு குடிலுக்குமே மானியம் வாங்க முடிந்தது. எண்ணூறு கிலோ மீட்டர் வேகத்தில் காத்தடிச்சாலும் இந்த குடிலுக்கு ஒன்றும் ஆகாது. எவ்வளவு மழை கொட்டினாலும் கூட பாதிக்காது. ஏழு வருடத்திற்கு ஒரு முறை ஷீட்டை மட்டும் மாத்தினால் போதும். குடிலுக்குள்ளே டிராக்டர், மாடுகள் மூலமாக உழவுகூட போட முடியும். குடிலுக்குக் காப்பீடு வசதி இருப்பதால் எதிர்பாராதவிதமாக தீ விபத்து மாதிரி ஏதாவது வந்தால் கூட பெரியளவில் நட்டம் வராது.
பூச்சிக்கொல்லி தேவையே இல்லை!
இந்தப் பசுமைக்குடில் விவசாயத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம்னே சொல்லலாம். பசுமைக்குடிலுக்குள்ளே இருக்கின்ற செடிகளுக்கு அக்கம்பக்கம் இருந்து எந்த நோயும் பரவாது. அதேபோல் முழுக்க மூடியிருப்பதால் பூச்சித் தாக்குதல் இருக்காது. பூச்சிக்கொல்லிக்கும் வேலையில்லை. சொட்டு நீர்ப்பாசனம் செய்வதால் களையும் வராது. தண்ணீரும் பத்து மடங்கு மிச்சமாகும்.
இரண்டு மடங்கு விளைச்சல்!
சாதாரண விவசாயித்தைவிட இதில் இரண்டு மடங்கு விளைச்சல் கிடைக்கும். வெளிநாடுகளில் பத்து மடங்குகூட எடுக்கிறார்களாம். எங்களுக்கு சராசரியாக இரண்டு மடங்கு கூடுதலாக கிடைக்கிறது. போகப் போக இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல் சாதாரண விவசாயத்தில் ஒரு மாதம் காய்க்கிற தக்காளிச்செடி, குடிலுக்குள்ளே நான்கு மாதம் வரை நின்று காய்க்கிறது. கொஞ்சம் கவனமாகக் பார்த்துக் கொண்டால் போதும். நல்ல மகசூல் எடுத்துவிடலாம். கம்மியான உரத்தைப் பயன்படுத்தி பூச்சி மருந்தே சுத்தமா தெளிக்காத காய்களை உற்பத்தி செய்ய முடியும். குடிலுக்குள்ளே விளைகிற காய்கள் நல்ல தரமாக இருப்பதனால் நல்ல விலையும் கிடைக்கிறது.
தென்னை நார்க்கழிவு.. கவனம் தேவை!
குடிலுக்குள் பெரும்பாலும் நாற்றுக்களாகத் தான் நடவேண்டும் என்பதால் முதலில் நாற்றுக்களைத் தயார் செய்ய வேண்டும். இஸ்ரேல் முறைப்படி உள்ள ‘ப்ரோ தட்டு’ எனப்படும் (முட்டைகள் வைக்கப்படும் ‘தட்டு’ போல உள்ளவை) தட்டுகளில் தான் பசுமைக்குடிலுக்குள் நாற்று உற்பத்தி செய்ய வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட தென்னை நார்க்கழிவை, இந்தத் தட்டுகளில் பரப்பி, குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும் (சுத்தம் செய்யப்படாத நார்க்கழிவாக இருந்தால் அதை ஐந்து முறை நீரில் அலசிய பிறகுதான் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதில் உள்ள உப்புச் சத்து, நாற்றின் வளர்ச்சியைப் பாதித்து விடும். ஒரு தட்டில் 98 குழிகள் இருக்கும். ஒரு யூனிட் குடிலுக்கு 1,700 முதல் 1,800 செடிகள் தேவைப்படும். 10% விதைகள் முளைவிடாது என்பதால் 20 தட்டுகள் தேவைப்படும். பத்து கிராம் விதையில் 1,800 செடிகள் கிடைக்கும். அதனால் 15 அல்லது 20 கிராம் விதைகளே போதுமானது).
நடவு செய்த பிறகு, பூவாளி மூலம் நீர் தெளித்து, தினசரி காலை, மாலை இருவேளையும் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். 20 நாட்களில் நாற்று தயாராகி விடும். அதன்பிறகு 5 நாட்களுக்குள் தட்டில் இருந்து எடுத்து நடவு செய்துவிட வேண்டும். அதற்கு மேல் தாமதப்படுத்தினால் நாற்று வீணாகிவிடும்.
காலை… மாலை கணக்கில்லை!
நாற்று தயாராகிக் கொண்டிருக்கும் போதே, குடிலுக்குள் உள்ள நிலத்தை மாடு மூலமாக ஒரு உழவு செய்து, 4 டன் தொழுவுரத்தைக் கொட்டி பரப்பி, இன்னொரு முறை உழவு செய்ய வேண்டும். பின் பாருக்கு பார் 130 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கிடையிலும் 40 முதல் 50 செ்னடிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டுமென்பதால் அதற்கேற்றவாறு நீர் சொட்டுவது போல சொட்டுநீர்ப் பாசன முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பின் 17 : 17 : 17 உரத்தை அடியுரமாக பாரின் மீது தூவவேண்டும். பின் பாரில் சொட்டுநீர்க்குழாயின் துளை இருக்குமிடத்தில் கையால் லேசாகப் பறித்து நார்க்கழிவோடு சேர்த்து நாற்றை நடவு செய்ய வேண்டும். (ப்ரோ ட்ரேயை பின்னால் மடக்கிளால் நார்க்கழிவோடு செடி தனியாக வந்துவிடும்). காலை, மாலை என்ற கணக்கில்லை. எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம்.
ஒரு நாள் விட்டு ஒருநாள் செடிக்கு 750 மில்லி தண்ணீர் கிடைக்குமாறு நீர் விட வேண்டும். அதிகபட்சம் ஒரு குடிலுக்கு ஒரு தடவைக்கு1,500 லிட்டர் தண்ணீர்தான் தேவைப்படும். (பாரில் உள்ள ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் விட்டால் போதும், வெயில் காலங்களில் தினமும் தண்ணீர் தேவைப்படும். குளிர் காலங்களில் வாரம் ஒரு முறை விட்டால் கூட போதுமானதாக இருக்கும்).
நடவு செய்த 7 – ம் நாள், 10 கிலோ தொழுவுரத்துடன் 1 கிலோ டிரைக்கோடெர்மாவிரிடி, 1 கிலோ சூடோமோனாஸ் ஆகியவற்றையும் கலந்து ஒவ்வொரு செடிக்கு அருகிலும் கொஞச்ம் இட வேண்டும். 20 – ம் நாளிலிருந்து ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சும் போதும் 300 கிராம் 19 : 19 : 19 நீரில் கரையும் உரத்தைக் கலந்துவிட வேண்டும்.
பக்கக் கிளைகள் தேவையில்லை!
25 – ம் நாள் கிளைகள் வளரத் தொடங்கும். அதில் இரண்டு கிளைகளை மட்டும் விட்டு விட்டு மீதியைக் கழித்துவிட வேண்டும். இந்தக் கிளைகளில் ட்வைன் நூலைக் கட்டி, அதை இழுத்து குடிலின் மேல்புறம் உள்ள கம்பியில் கட்ட வேண்டும். இந்த நூலில் தான் கொடி படரும். அதன்பிறகு தினமும் கவனித்து தேவையற்ற பக்கக்கிளைகளை அகற்ற வேண்டும். அதற்காக அறுவடை வரை தினமும் 2 பெண்கள் வேலைக்கு இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
60 – ம் நாளில் பூ எடுக்கத் தொடங்கும். அப்போது உரத்தையும் தண்ணீரையும் கொஞ்சம் குறைக்க வேண்டும். அதிக ஈரப்பதம் இருந்தால் பூ உதிர்ந்து விடும். பிஞ்சு எடுத்தவுடன் மீண்டும் திரவ உரத்தை ஆரம்பிக்கலாம்.
நான்கு மாதம் மகசூல்!
90 – ம் நாளில் இருந்து காய் பறிக்கலாம். தேவையைப் பொறுத்து தினமும் கூட காய் எடுக்கலாம். அதிலிருந்து 4 மாதங்கள் வரை காய் கிடைக்கும். ஒரு செடியில் ஏழு முதல் பத்து கிலோ வரை காய்கள் கிடைக்கும். அறுவடை முடிந்த பிறகு, ஒரு மாதம் அப்படியே நிலத்தை ஆற வைத்து விட்டு, மீண்டும் அடுத்த சாகுபடியைத் தொடங்கலாம். உடனடியாக அடுத்த சாகுபடியைத் தொடங்க வேண்டியிருந்தால், 100 லிட்டர் ஃபார்மால்டிஹைடு திரவத்தை, 1,000 லிட்டர் நீரில் கலந்து, குடில் முழுவதும் மண்ணில் படுமாறு தெளித்து பாலிதீன் ஷீட்டால் ஐந்து நாட்கள் மூடி வைக்க வேண்டும். அதன் பின்னர் அடுத்த சாகுபடிக்கான வேலைகளைத் தொடங்கலாம்.
எண்பதாயிரம் நிகர லாபம்!
ஒரு குடிலில் இருந்தே 12 டன் வரை மகசூல் கிடைக்கும். சாதாரண விவசாயம் என்றால் ஒரு குடில் அளவு நிலத்தில் (கால் ஏக்கர்) 5 டன் மகசூலே பெரிய விஷயம். 1 கிலோ தக்காளி 8 முதல் 40 ரூபாய் வரை கூட விலை போகும். சராசரியாக கிலோவிற்கு 10 ரூபாய் வரை கண்டிப்பாக கிடைக்கும். 12 டன்னுக்கு 1 லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் செலவு 40 ஆயிரம் போக 80 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். வருடத்தில் இரண்டு போகம் தக்காளி சாகுபடி செய்ய முடியும். வெள்ளரி, மற்ற காய்கறிகள் என்று மாத்தி நடவு போட்டால் அதிக லாபம் கிடைக்கும்.
பருவம் பார்த்து பயிர் செய்தால் அதிக லாபம்!
பொதுவாக அக்டோபர் முதல் நவம்பர் வரை திறந்த வெளியில் தக்காளியுடன் காய்ப்பு போதுமான அளவிற்கு இருக்காது. அந்த நேரத்தில் நாம் அறுவடை செய்கின்ற மாதிரி திட்டமிட்டு, முன்கூட்டியே நடவு செய்திருந்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பசுமைக் குடிலுக்குள் இயற்கை விவசாயம் செய்தால் இன்றும் உரச்செலவைக் குறைக்க முடியும். திறந்த வெளி விவசாயத்தில் மூன்று வருடத்திற்குப் பிறகு தான் இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற முடியும். ஆனால் பசுமைக் குடில் விவசாயத்தில் உடனடியாக சான்றிதழைப் பெறலாம்.
தொடர்புக்கு:
திரு. மனோகரன்,
முடுக்கன் துறை,
கோயமுத்தூர் மாவட்டம்.
அலைபேசி: 94425 - 16641
வெறுத்துப் போன வாழ்க்கையை மீட்டுக் கொடுத்த கனகாம்பரம் |
|
முல்லை, மல்லிகை, சம்பங்கி போன்ற பூக்கள் மணத்தின் அடிப்படையில் பலரால் விரும்பப்படுபவை. அவற்றிற்கு நிகராக வாசனையே இல்லாத கனகாம்பரமும் பலரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் கண்ணைப் பறிக்கும் அதன் நிறம்தான். இதன் காரணமாகவே கனகாம்பரத்திற்கு சந்தையில் தொடர்ந்து நிலையான தேவை இருக்க மலர் சாகுபடி வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தையும் அது தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
பூ சாகுபடி என்றாலே, ரசாயன முறையிலான விவசாயத்தை மட்டுமே மேற்கொள்ளும் விவசாயிகள் தான் அதிகம். அவர்களுக்கு மத்தியில் முழுக்க இயற்கை முறையில் கனகாம்பரத்தை சாகுபடி செய்ய ஆரம்பித்திருக்கின்றனர் கோயமுத்தூரிலிருந்து நேர்கிழக்காக 20 கி.மீ தூரத்திலிருக்கும் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த கோ. ராமசாமி – பூங்கோதை தம்பதியர்.
வெண்டை, வாழை, கீரைகள், தீவனப் பயிர்கள் என அனைத்தையும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் அந்தத் தம்பதி, சமீபகாலமாகத்தான் கனகாம்பர பூவுக்கும் இயற்கை தோரணம் கட்ட ஆரம்பித்திருக்கிறது.
பதினோரு மணிக்குள் பூவைப் பரித்து சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். நான் சுபாஷ் பாலேக்கருடைய ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி, நம்மாழ்வருடைய ‘இனியெல்லாம் இயற்கையே’ களப் பயிற்சி இதில் எல்லாம் நாங்கள் கலந்து கொண்டோம். அதுபோக தொடர்ந்து பசுமை விகடனைப் படிக்கிறோம். இயற்கை வேளாண்மை செய்கிற அனுபவ விவசாயிகளிடம் அடிக்கடி ஆலோசனை கேட்கிறோம். அதனால்தான் வெற்றிகரமாக எங்களால் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடிகிறது.
கிலோ 80 ரூபாய்க்கு கீழே போனதில்லை!
எனக்கு போர்வெல்லோடு நாலரை ஏக்கர் நிலமிருக்கு. குளம், ஏரி என்று நிலத்தடி நீர் மட்டத்தை உயரச் செய்வதற்கு எந்த நீர் ஆதாரமும் எங்கள் ஊரில் கிடையாது. அதனால் நாங்களே உருவாக்கின பெரிய பாசன நீர்த் தேக்க வயலில் தண்ணீரைச் சேர்த்து வைத்து வெள்ளாமை செய்கிறோம். 60 சென்டில் கனகாம்பரம், 30 சென்டில் வெண்டை, 10 சென்டில் கீரை, அரை ஏக்கரில் வாழை, இது போக கொஞ்சம் தீவனப் பயிர் இருக்கிறது.
ஆரம்பத்தில் தோட்டத்திற்குள் எட்டு இடத்தில் போர் போட்டு எதுலயுமே தண்ணீர் வராமல் விவசாயத்தையே விட்டுவிடலாம் என்று வெறுத்துப் போயிவிட்டது. அந்த சமயத்தில் கனகாம்பரம்தான் எங்களை கை தூக்கி விட்டது. அதனால் கனகாம்பரத்தை மட்டும் விடாமல் இருபது வருடங்களாக பயிர் செய்துகொண்டிருக்கோம். எவ்வளவு வறட்சி வந்தாலும், அதை விடுவதில்லை. அதுமட்டுமல்லாமல் கனகாம்பரம் கிலோ 80 ரூபாய்க்குக் குறைந்து இதுவரை விற்றதே இல்லை என்பது ஒரு காரணம்.
இயற்கை மேல முழுநம்பிக்கை இல்லை!
தொழுவுரம், கோழி எரு இதையெல்லாம் அடிக்கடி நிலத்தில் கொட்டி வளப்படுத்தி வைத்திருக்கிறோம். அதில் எல்லாம் வண்டல் மண் கிடைக்கிற பொழுது எல்லாம் நிலத்தில் கொட்டி பரப்பி விட்டுவிடுவோம். அதனால் எங்கள் நிலத்தில் எதைப் போட்டாலும் நன்றாக வளரும்.
வெண்டை உள்பட காய்கறிக்கு எல்லாம் முழுக்க இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டாலும் கோமூத்திரம், புகையிலைக் கரைசல் மாதிரியான இயற்கை விஷயங்களில் கனகாம்பரத்தில் பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதற்கு எங்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. என்னதான் இயற்கை என்று பேசினாலும் நடைமுறை என்று வருகிற பொழுது துணிச்சலாக அதை செயல்படுத்துவதற்கு தனி தைரியம் வேண்டும். ஏன்னென்றால் நாங்கள் சிறு விவசாயி. ஏதாவது பிரச்சனை என்றால் மொத்த முதலுக்குமே மோசம் வந்துவிடும். அதனால் கனகாம்பரத்திற்கு மட்டும் பூச்சிக்கொல்லியையும் இடைஇடையில் தெளித்தோம்.
இந்த சமயத்தில் கோயம்புத்தூர், வேளாண் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தமான ஒரு கூட்டம் நடந்நது. இரண்டு பேருமே அங்கே சென்றிருந்தோம். பூச்சியியல்துறை விஞ்ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரும் வேப்பங்கொட்டைக் கரைசலை சிபாரிசு செய்தார். இதைப் பற்றி பல்கலைக்கழக விஞ்ஞானியே இதை சொல்கிறார். அதற்குப் பிறகு தான் கனகாம்பரத்திற்கு இயற்கை முறை விவசாயத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தோம்.
60 சென்டில் கனகாம்பரம்!
கனகாம்பரத்திற்கு வைகாசிப் பட்டம் உகந்தது. நாற்று நடவுதான் என்பதால் 60 நாட்களுக்கு முன்னரே நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். முற்றிய காய்களை எடுத்து மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்கும்போது, வெடித்து விதைகள் வெளிவரும். இவற்றைப் புடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 3 அடிக்கு 5 அடி அளவில் மேட்டுப்பாத்தி அமைத்து கல், மண் கட்டிகளை நீக்கி, இரண்டு கூடை தொழுவுரத்தைக் கொட்டி சமப்படுத்த வேண்டும். அதில் விதைகளைத் தூவி, கை விரல்களால் கீறிவிட்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். ஈரப்பதம் குறையாத அளவுக்கு தண்ணீர்விட வேண்டும். ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டியிருக்கும். 60 நாட்களில் நாற்று தயாராகிவிடும்.
உரமே தேவையில்லை!
60 சென்ட் நிலத்தில் 7 டிராக்டகர் தொழுவுரத்தைக் கொட்டி, இரண்டு உழவு ஓட்டி, இரண்டரை அடி இடைவெளியில் பார் அமைத்து, ஒரு அடி இடைவெளியில் கனகாம்பர நாற்றை ஈர நடவு செய்ய வேண்டும். நட்ட 20 – ம் நாள் முதல் களை எடுத்து அதிலிருந்து இருபது நாட்களுக்கு ஒரு முறை எ்று மொத்தம் நான்கு களையெடுக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. பாசன நீரிலேயே சாணம், கோமூத்திரம் ஆகியவற்றைக் கலந்து விடலாம். வேறு உரங்கள் எதுவும் தேவையில்லை.
ஆறு மாதங்களுக்கு மகசூல்!
30 மற்றும் 60 – ம் நாட்களில் இயற்கைப் பூச்சிவிரட்டியைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். நடவு செய்த 90 – ம் நாளில் பறிப்புக்கு வரும். 5 நாட்களுக்கு ஒரு பறிப்பு என ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து பறிக்கலாம். தை, மாசி, பங்குனி, மாதங்களில் அதிக மகசூல் கிடைக்கும். வெயில் ஏறுவதற்குள் பறித்து விட வேண்டும். 60 சென்ட்டில் மொத்தமாக 1,300 கிலோ வரை பூக்கள் கிடைக்கும்.
30 சென்டில் வெண்டை!
வெண்டைக்கு புரட்டாசி பட்டம் உகந்தது. 30 சென்ட் நிலத்தில் 4 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, இரண்டு உழவு ஓட்டி, இரண்டு அடியில் பார் முறை பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடி இடைவெளியில் வீரிய விதைகளை விதைத்து, நீர் பாய்ச்ச வேண்டும் (250 கிராம் தேவைப்படும்). ஒரு வாரத்தில் முளைவிடும். தொடர்ந்து வாரம் ஒரு முறை சாணம், கோமூத்திரம் கலந்த தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15, 30 – ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சி, காய்ப்புழு, தென்பட்டால், இயற்கைப் பூச்சி விரட்டி அடிக்கலாம். 45 – ம் நாளில் காய்க்கத் துவங்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று மொத்தம் முப்பது முறை பறிக்கலாம். பறிப்புக்கு சராசரியாக 50 கிலோ வீதம், மொத்தம் 1,500 கிலோ மகசூல் எடுக்கலாம்.
1 கிலோ 140 ரூபாய்:
இப்பொழுது கனகாம்பரம் ஒரு கிலோ 140 ரூபாய் வரை விலை போகிறது. முகூர்த்த காலங்களில் 360 ரூபாய் வரைகூட விலைபோகும். வெண்டை சராசரியாக கிலோ 15 ரூபாய் வரை விலை போகும். இப்பொழுது 16 ரூபாய்க்கு போகிறது. பூ சாகுபடிக்கு கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தால் நல்லாயிருக்கும். அதனால் பாத்திக்கு இடையில் ஊடுபயிராக அகத்தியை நட்டு வைத்தால் ஆடு, மாடுகளுக்குத் தீவனமும் கிடைக்கும்.
பொதுவாக ரசாயன முறையில் செய்யும்பொழுது கனகாம்பரத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் பூச்சிக்கொல்லிக்கே செலவாகும். ஆனால் இயற்கைப் பூச்சிவிரட்டிற்கு மொத்தமாக 1,600 ரூபாய்தான் செலவாகும்.
இதனால் 7,400 ரூபாய் மீதம்.
60 சென்டில் கனகாம்பரம் சாகுபடிக்கான செலவு – வரவு
(உத்தேச கணக்கு) (ரூபாய் மதிப்பில்) |
விவரம் |
செலவு |
வரவு |
உழவு |
2,000 |
|
தொழுவுரம் |
4,400 |
|
விதை |
300 |
|
பார் அமைக்க |
650 |
|
நடவு |
400 |
|
பூச்சிவிரட்டி |
1,600 |
|
நீர்பாய்ச்ச |
4,000 |
|
அறுவடை, போக்குவரத்து, கமிஷன் |
79,000 |
|
விற்பனை மூலம் வரவு (கிலோ 140 ரூ வீதம் 1,300 கிலோ) |
|
1,82,000 |
மொத்தம் |
92,350 |
1,82,000 |
நிகர லாபம் |
|
89,650 |
இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை, தேவையானப் பொருட்கள் |
கோமூத்திரம் |
20 லிட்டர் |
தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை |
10 கிலோ |
பெருங்காயம் |
100 கிராம் |
வாய்ப் புகையிலை |
1 கிலோ |
ஊமத்தம் செடிகள் |
மூன்று |
பச்சைமிளகாய் |
அரை கிலோ |
வேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக இடித்துக் கொள்ளவும். ஊமத்தம் செடி, புகையிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக கிள்ளிக் கொள்ளவும். இவற்றை கோமூத்திரம் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, பெருங்காயத்தையும் போட்டு கலக்கி வேடு கட்டி நிழலில் வைத்து, தினமும் இருமுறை கலக்கி விடவும். 5 நாட்களில் பூச்சிவிரட்டி தயாராகி விடும். சுத்தமானத் துணியில் வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு 3 லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும்.
அதுமட்டும் அல்ல வழக்கமாக ஆறு முதல் எட்டு மாதம் வரைக்கும் கனகாம்பர மகசூல் இருக்கும். இந்தத் தடவை அது 12 மாதத்திற்குக் கூட வரும் என்று தோன்றுகிறது. பயிர் இருக்கின்ற நிலையை வைத்தே அதைப் புரிந்துகொள்ள முடியும். சுபாஷ் பாலேக்கர் கூட கனகாம்பரத்தில் 18 மாதத்திற்குக் கூட மகசூல் எடுத்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
தொடர்புக்கு:
ராமசாமி,
அரசூர் கிராமம்,
கோயமுத்தூர்.
அலைபேசி: 93629 - 50286
பீட்ரூட் வெற்றிக்கு விவசாய ஜோதிடம் |
|
“கட்டுபடியாகும் விலை விவசாயிகளுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட விலை நுகர்வோர்க்கும் கிடைக்க வழி இருக்கிறது. அதற்கு விவசாய ஜோதிடம் பற்றிய அறிவு வேண்டும்” என்கிறார் உடுமலைப்பேட்டையில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பீட்ரூட் விவசாயி வேலாயுதம்.
நாம் பயிரிடும் பயிர் எங்கெல்லாம் விளைகிறது, எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எப்பொழுது அறுவடைக்கு வரும், சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளதா மகசூல் இந்த ஆண்டு எப்படி இருக்கும், நாம் அறுவடை செய்யப்போகும் சமயத்தில் அந்தக் காய் வேறு மாநிலத்தல் இருந்து இங்கே அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? இப்படி பல்வேறு கேள்விகளுக்கும் பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் இதையெல்லாம் அறிந்தும், தெரிந்தும் கொண்டால் நல்ல மகசூல் மட்டுமல்ல, நல்ல விலையும் கிடைக்கப்பெறலாம். இதைதான் “விவசாய ஜோதிடம்” என்கிறார் இவர்.
இவர் 10 ஆண்டுகளாக காய்கறி பயிர்களின் சாகுபடி, மகசூல், விளை பட்டியல், விளை வீழ்ச்சி ஆகியவைகளை பராமரித்து வருகிறார். வேலாயுதம் நண்பர்களுடன் சேர்ந்து கணிப்பொறி வசதியுடன் கூடிய வேளாண் தகவல் மற்றும் ஆலோசனை மையம் ஒன்றினை உடுமலைப்பேட்டையில் தொடங்கவிருக்கிறார். இதன் மூலம் அனைத்துவித விவரங்களையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளமுடியும் என்பது அவரின் நம்பிக்கை.
பீட்ரூட் விவசாயம் பற்றி தொடர்ந்தவர்,”விதைத்த 60 முதல் 70 நாட்களுக்குள் பலன் தரும் குறுகிய காலப் பயிர்தான் பீட்ரூட் அதிக மழை, அதிக வெயில் இரண்டும் பீட்ரூட் சாகுபடிக்கு கரிவராது. மிதமான தட்பவெப்பமுடைய ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த பீட்ரூட் பல வருடங்களாக ஒடுமலை பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. காரணம் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் இங்கும் சீரான சீதோஷ்ண நிலை இருப்பதுதான்.
மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், திருப்பூர், மற்றும் கேரளா மாநிலம் உள்ளிட்ட இடங்களில் இதன் தேவை அதிகம். இரண்டு, மூன்று விவசாயிகள் ஒன்று சேர்த்து வாகனம் மூலம் ஏற்றிச்சென்று விற்பனை செய்தால் கூடுதல் லாபம் பார்க்கலாம்.
சொந்த வேனில் ஏற்றி மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், உன்று சந்தைகளுக்கு சென்று நேரிடையாக விற்பனை செய்து வருகிறேன். போக்குவரத்து செலவு போகவும் கணசமான லாபம் கிடைக்கிறது என்று கூறினார்.
விவசாய விளை பொருள் கொள்முதல் மேலும் இவர் கார்ப்பரேஷன் ஒன்றினை அரசாங்கம் நிறுவினால், விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி என்கிற இரண்டு முக்கியமான லட்சியத்தை அடையமுடியும் என்று அழுத்தமாகச் சொன்னார்.
ஏக்கருக்கு நிகரலாபம் 17,650 ரூபாய் கிடைக்கும், என்று கூறுகிறார் இவர். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் உடுமலை பீட்ரூட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்புக்கு:
வேலாயுதம்,
கணபதி பாளையம் கிராமம்,
உடுமலைப்பேட்டை.
அலைபேசி: 94437-48966
பசுமைக்குடிலில் வண்ணமிளகாய் |
|
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் பிரமாண்டமாக அமைந்துள்ள பசுமைக் குடிலுக்கு சொந்தக்காரர்கள் முத்துசாமி- ரெங்கநாயகி தம்பதி.
“மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய காலிஃப்ளவர், முட்டை கோஸ், வீரிய ஒட்டுரக தக்காளி, தனித்துவமான சில மலர் வகைகள், வாசனை திரவிய தயாரிப்புக்கான காம்பு நீண்ட மலர்கள், கேப்சிகம் எனப்படும் குடைமிளகாய், பாப்ரிக்கா மிளகாய் இவை எல்லாம் சமவெளி பகுதிகளில் சாதாரணமாக விளையாது. ஆனால் இதுபோன்ற பசுமைக் குடில் அமைத்து, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சிறப்பாக வளரும்” என்கிறார்கள் முத்துசாமி - ரெங்கநாயகி தம்பதியர். பாரம்பரிய வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதி, சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் குடிலைக் கட்டமைத் திருக்கிறார்கள்.
பசுமைக் குடில்கள்ங்கற ‘பாலிஹவுஸ்’ மழைத்தண்ணியை சுத்தமாக உள்ளே விடாது. வெப்பமும், ஒலியும் கூட தேவையான அளவுதான் உள்ள வரும். இதனால், தேவையான அளவு ஈரப்பதம் அப்படியே இருக்கும். காற்றோட்ட வசதிக்காக, வொம்பலொம்பச் சின்னத் துவாதம் கொண்ட வலையால் ஆன ஜன்னலும் இருக்கும். இதை நிழல் வலைனு சொல்வோம் என்று கூறினார்.
தரையிலிருந்து பன்னிரண்டு அடி உயரத்துக்கு பாலித்தீன் சுவர்கள், பதினைந்து அடி உயரத்தில் பாலித்தீன் மேல்கூரை என்று அமைந்துள்ளது. குடிலின் உள்ளே கார்பன் டை ஆக்ஸைடும் நீர் மூலக்கூறும் அதிகளவில் நிறைந்திருக்கிறதாம். பக்கச் சுவர்களிலும் நிழல் வலை ஜன்னல்கள், தரையிலிருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று பசுமைக்குடில்கள் 7 ஆண்டுகள் வரை தாக்குபிடிக்குமாம். வாயிற்கதவும் பாலித்தீன் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.
பஜ்ஜி மிளகாய்ங்கிறது.. ஒரு கலர்லதான் வரும். ஆனா, குடை மிளகாய்தான் பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பிங்க், கருப்பு, வெள்ளைனு மொத்தம் 7 கலரில் இருக்கிறது. குடைமிளகாய், பாப்பிக்கா மிளகாய் இருபது ரூபாய்க்குப் போகும். கால் ஏக்கருக்கு 3 முதல் 4 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். 3 டன் மிளகாய் விளைஞ்சா, 60 ஆயிரம் ரூபாய் விதைகளை எடுப்பு, உரம் இந்தச் செலவெல்லாம் 15 ஆயிரத்துக்கு வரும். ஆக கால் ஏக்கர்ல.. ஆறு மாசத்ததில் 45 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்கிறார் முத்துசாமி. குழித்தட்டு நாற்றங்கால் (portray) முறையை பயன்படுத்துகிறார்.
இதில் உள்ள குழிகளில் மக்கிய தென்னை நார் கழிவுகளை நிரப்பனும், ஒவ்வொரு குழியிலயும் ஒவ்வொரு விதையாக, மேலோட்டமாக நட்டு தண்ணீர் தெளிக்கணும். ஒன்பதாவது நாள் விதை முளைத்தால் வரும் 10 வது நாள் நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடிய குறிப்பா வேர் அழுகல் நோய் வராமல் தடுக்க உயிரியல் பயிர் பாது காப்பு மருந்து தெளிக்கணும். 35 வது நாள் நாத்து தயாராயிடும். அதன்பிறகு பாலிஹெவுஸில் இருக்கிற தரையைக் கொத்தி, தொழு உரம் போட்டு, இரண்டு அடி அகலத்தில் பார் அமைக்கணும். ஒவ்வொரு பார்லயும் 2 வரிசையாக செடி நடணும். 20வது நாள் வேப்பம்புண்ணாக்கு 40 கிலோவும், கடலை புண்ணாக்கு 70 கிலோவும் போடணும். 30 வது நாள் பூ பூக்கும். 60 ம் நாள் காய்க்க ஆரம்பிச்சிடும். பஜ்ஜி மிளகாய் 40 கிராம் எடையும் குடை மிளகாய் 200 கிராம் எடையும் இருக்கும் எனச் சொன்னார்.
இது மாதிரியான செடிகளில் தண்டு பலவீனமாகத்தான் இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு பாருக்கும் மேல் 9 அடி உயரத்தில் 2 கம்பிகளைக் கட்டி செடிகள் தூக்கிக் கட்டியிருக்கின்றோம் என்று விளக்கம் கொடுத்தார்.
நாத்து நட்ட 2 வது மாதத்தில் இருந்து அறுவடை பண்ண ஆரம்பிச்சிடலாம். 3 மாதம் வரை காய்ச்சுகிட்டே இருக்கும். வாரத்துக்கு 1 அல்லது 2 அறுவடை செய்யலாம். முக்கியமாக இதில் சொல்ல வேண்டியது, இதுமாதிரியான மிளகாய் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம்தான் உகந்தது என்று கூறினார்.
தொடர்புக்கு:
முத்துசாமி,
அம்மாபேட்டை,
தஞ்சை மாவட்டம்
தொலைபேசி: 04374-232709
அலைபேசி: 94438-06483
தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் முருங்கை அதிகளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மண்மாரி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் முருங்கைக்காய்களில் தற்போது வரவு அதிகரித்துள்ளது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்குவங்காளம் என்று பல இடங்களுக்கு முருங்கைக்காய்கள் மூட்டை மூட்டையாக பறந்து கொண்டிருக்கின்றன.
கடந்த காலங்களை விட தற்போது முருங்கைக்காய் அதிக அளவில் அண்டை மாநிலங்களுக்கும் பயன்பட ஆரம்பித்திருப்பதனால்தான், விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை வீழாமல் இருக்கிறது என்கின்றார்கள் விவசாயிகள்.
புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி முருங்கை விவசாயத்தைப் பற்றிக் கேட்டோம்.
“செடி முருங்கை மர முருங்கை என்று இரண்டு வகை உள்ளது. பெரும்பாலானோர் முருங்கையை பயிரிடுகின்றனர். நானும் அதைத் தான் போட்டிருக்கிறேன்.
செம்மன் நிலத்தில் முருங்கை நன்றாக வளரும். நல்ல மகசூல் எடுக்கலாம். ஆனால் எங்கள் பகுதியில் சுக்கா மண் தான். அந்த மண்ணிலும் ஓரளவுக்கு விலைச்சல் நன்றாக தான் இருக்கிறது. பொதுவாக வறட்சியான நிலத்தில் முருங்கையைப் பயிரிடலாம். செடி முருங்கையைப் பொறுத்தவரை நடவு செய்த ஆறாவது மாதத்தில் இருந்து காய் கிடைக்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நல்ல விலை கிடைக்கிறது. அதனால் ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்தால் அது காய்த்து வரும் பொழுது நல்ல விலை கிடைக்கும். ஆனால் இந்த மாதங்களில் மழை குறைவாகத்தான் இருக்கும். அதனால் தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்ய வேண்டும் வடிகால் வசதியும் அவசியம்”.
செடி முருங்கையில் நிறைய வீரிய ரகங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை ஒரு துணியில் சுற்றி, சாணி கலந்த தண்ணீர் அல்லது பஞ்சகவ்யாவில் 24 மணி நேரம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளோடு ஒரு கருங்கல்லையும் சேர்த்து கட்டி வைத்து விட்டால் விதைகள் மிதக்காமல் இருக்கும்.
நேரடி மற்றும் நாற்று என இரண்டு விதமான விதைப்பு முறைகள் உள்ளன.
நேரடி விதைப்பு முறை:
6 அடிக்கு 7 அடி அளவில் சதுரப்பாத்தி அமைத்து 1x1 அகலம் மற்றும் 1 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். வட்டப்பாத்தியாகவும் அமைக்கலாம். குழியில் தொழு உரம், செம்மண் நிரப்பி இரண்டு அங்குல ஆழத்தில் விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதைகள் தேவைப்படும்.
நாற்று விதைப்பு முறைகள்:
ஆற்று மணல், தொழு உரம், தோட்டத்து மண், செம்மண் கலந்து நிரப்பப்பட்ட நாற்றுப் பைகளில், நேர்ததி செய்யப்பட்ட விதைகளை ஒரு அங்குல ஆழத்தில் விதைத்து, தினமும் பூவாளியில் தண்ணீர் விட்டு வர வேண்டும். முளைவிட்ட பின், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். ஒரு மாத காலம் இப்படி வளர்க்கப்பட்ட நாற்றுகளை, உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் 6 x 7 அடி பாத்தி அமைத்து ஒன்றரை அடிக்கு ஆழம் கொண்ட குழி எடுத்து, தொழு உரமிட்டு நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 900 செடிகள் தேவைப்படலாம். இந்த முறையில் நூறு கிராம் அளவுக்கு விதைகளை மிச்சப்படுத்தலாம்.
எந்த முறையில் நடவு செய்தாலும், மேல் மண்ணைக் காயவிடாமல் தண்ணீர் கட்டிக் கொண்டே இருப்பது நலம். நுனிக் கொழுந்தை கிள்ளிவிட்டுக் கொண்டே வந்து பக்கவாட்டுக் கிளைகளை வளரும்படி செய்ய வேண்டும். அதிகமாக களைகள் வளராமல் பாதுகாக்க வேண்டும்.
செடி முருங்கை பயிரிட்டிருந்தால்.. தர்பூசணி, மிளகாய், தக்காளி, வெண்டை போன்றவற்றை ஊடுபயிர்களாக போடலாம்.
நடவு செய்த மூன்றாவது மாதத்தில் ஒவ்வொரு செடிக்கும் தழை சத்து (100 கிராம் யூரியா), மணி சத்து (100 கிராம் சூப்பர் பாஸ்பேட்), சாம்பல் சத்து (50 கிராம் பொட்டாஷ்) இந்த மூன்றையும் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தழைச்சத்து (100 கிராம் யூரியா) கொடுக்க வேண்டும்.
வேர் அழுகல் நோய், பூ உதிர்தல், பிஞ்சு உதிர்தல், சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதல், செடியின் அடியில் தங்கும் ஒருவகை ஈக்களின் தாக்குதல் போன்ற பிரச்சனைகள் உண்டு, அதற்கு தகுந்த மருந்துகளை அவ்வப்போது அடித்து வரவேண்டும்.
ஒரு செடியிலிருந்து ஒவ்வொரு பருவத்திலும் 35 கிலோ காய்கள் கிடைக்கும். ஒன்றரை வருடங்கள் வரை மகசூல் கிடைக்கும். அதன்பின் விளைச்சல் குறைந்துவிடும். அதனால் மறுபடி விதைக்க தயாராகிவிட வேண்டும்.
பள்ளபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (அலைபோசி: 98653-45911) என்ற விவசாயி, மர முருங்கையில் வீரிய ஒட்டு ரகங்கள் பயிரிட்டுள்ளார். வழக்கமாக செடி முருங்கையை விட மர முருங்கை விலை குறைவாகத்தான் போகும். ஆனால் என்னுடைய முருங்கைச் செடி முருங்கையை விட இரண்டு ரூபாய் கூடுதலாக விலை கிடைக்கிறது.
வீரிய முருங்கை நாத்துகள் தயார் செய்து குறைந்த விலையில் கொடுக்கிறேன். இதுவரை இரண்டாயிரம் ஏக்கர் அளவுக்கு முருங்கை பயிரிட ஆலோசனை கொடுத்திருக்கிறேன் என்றவர் வீரிய முருங்கையை நடவு செய்யும் முறை மற்றும் வரவு செலவுகளைப் பற்றி விளக்கினார்.
நிலத்தை நன்றாக உழுது, 18 அடிக்கு 12 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 50 கிராம் அசோஸ் பைரில்லம், 25 கிராம் பாஸ்போ பேக்டரியம், 1 கிலோ மண்புழு உரம், 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு, கொஞ்சம் பஞ்சகவ்யா, கொஞ்சம் இ.எம் கரைசல் விடவேண்டும். மூலிகை பூச்சி விரட்டி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் சாகுபடியில் பிசின் தொல்லை அறவே கிடையாது. செடியிக் பொழுந்துகளைக் கிள்ளி அந்த இடத்தில் சாணியை அப்பி வைப்பது நல்லது. அதன் பிறகு வளரும் செடியை அப்படியே விட்டுவிட வேண்டும். தொடர்ந்து உரம் மட்டும் கொடுத்து வந்தால் பூ பூத்து காய்க்க தொடங்கிவிடும்.
ஒரு ஏக்கரில் பாதி அளவுக்கு முதலில் நடவு செய்யவேண்டும். ஆறு மாதம் கழித்து மீதி அரை ஏக்கர் நிலத்தில் நடவு செய்யவேண்டும். இப்படி செய்தால் வருடம் முழுவதும் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஏக்கருக்கு 200 செடி வரைக்கும் நடலாம். நட்ட ஆறு மாதத்தில் காய்கள் வரத் துவங்கிடும். இரண்டாவது காய்ப்பிலிருந்து வருடத்திற்கு ஒரு மாதத்தில் 100 கிலோ காய்களுக்கு மேல் கிடைக்கும். ஏக்கருக்கு 20,000 கிலோ காய்கள் கிடைக்கும்.
குறைந்த விலையாக 5 ரூபாய் வீதம் வருடத்துக்கு 1 லட்ச ரூபாய் கிடைக்கும். மொத்த செலவு பதினைந்தாயிரம் ரூபாய் ஆக வருடத்திற்கு எண்பத்தைந்தாயிரம் ரூபாய் வாபம். ஒரு முறை நடவு செய்து விட்டால் வருடக் கணக்காக தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
தொடர்புக்கு:
மணி,
புதுப்பட்டி கிராமம்,
அலைபேசி: 92453-02561.
“இட்லிப் பூ .. அது என் இஷ்டப் பூ ..!” பூ வும் வாடாது . வருமானமும் தேயாது! |
|
பெரியதாக பராமரிப்போ தினசரி பறிப்போ தேவைப்படாத ஒன்றிரண்டு மலர்களும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘விருட்சிகப் பூ ’ எனப் பரவலாக அழைக்கப்படும் இந்த ‘இட்லிப் பூ’! “பூ சாகுபடியில் விதிவிலக்காக அமைந்ததுதான் இந்த இட்லிப் பூ சாகுபடி! மூன்று நாட்களானாலும் பூ வாடுவதில்லை. நன்கு மலர்ந்த பிறகும், செடியிலேயே ஏழு நாட்கள் வரை பூ தாங்கி நிக்கும் என்கிறார் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மணிவிழுந்தான் காலனியை சேர்ந்த ‘கால்நடை மருத்துவர்’ சக்திவேல்.
பெரியதாக வாசனை ஏதும் இல்லையெனினும், அழகுக்குக் குறைவில்லை. இதனால் இப்பூ வை, வியாபார ரீதியில் சாகுபடி செய்து சாதித்துக் கொண்டிருக்கிறார் சக்திவேல். அறுபது சென்ட் நிலத்தில் இட்லிப் பூ சாகுபடியை ஆரம்பித்துள்ள இப் பூ வை சாகுபடி செய்தால் குறைந்தது பத்து வருடத்திற்கு நிலத்தை உழ வேண்டியதில்லை. இரண்டு நாள் கழித்து பூ பறித்தாலும் கெடுதல் இல்லை. தண்ணீர் தேவையும் அதிகமில்லை. ஆரம்ப காலத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும், செடி வளர, வளர மகசூலும் அதிகமாகி, லாபம் கூடும்.
“இட்லிப் பூ வுக்கு என்று தனிப் பட்டம் ஏதுவுமில்லை. அடைமழை காலத்தைத் தவிர, மற்ற அனைத்து மாதங்களிலும் நடவு செய்யலாம். வளமான, பாசன வசதி இருக்கின்ற நிலத்தில் புல், களையெல்லாம் நீங்குமாறு இரண்டு சால் உழவு ஓட்டி, விட வேண்டும். இட்லிப் பூ செடி, குறைந்தது பத்து வருடத்திற்காவது நிலைத்து நின்று மகசூல் தரும். அதனால் போதுமான குப்பை உரத்தை அடியுரமாக இடவேண்டும். பார்க்கு பார் ஒன்பது இடை வெளிவிட்டு, செடிக்கு செடி மூன்றடி இடைவெளியில் நடவுசெய்யவும்.
குச்சி மூலம் இனப் பெருக்கம் செய்யப்பட்ட செடிகளை தேர்வு செய்து எடுக்கவும். இட்லிப் பூ பல வண்ணங்களில் இருந்தாலும், சிவப்பு நிற பூ வுக்களுக்குதான் சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. அதனால் சிவப்பு நிற பூ வருகின்ற செடிகளை வாங்கணும். பாலிதீன் பையோடதான் செடிகள் வரும். அப்பைகளை நீக்கிவிட்டு மூன்று அடிக்கு ஒரு செடிஎன்கிற விதத்தில் நடவு செய்ய வேண்டும். 60 சென்ட் இடத்துக்கு 1,000 செடிகள் தேவைப்படும்.
அறுவடைக்கு செடிகள் வளர குரைந்தது ஆறு மாதங்களாகும். இந்த இடைவெளியில் சின்ன வெங்காயம், சாமந்தி, கொத்தமல்லி, பீன்ஸ், தட்டைப்பயிறு, உளுந்து ஊடுபயிறுகள் செய்து தனியாக லாபம் பார்க்கலாம். சொட்டுநீர்ப் பாசனம் செய்துதால் களை வளர்ச்சி குறைவாக இருக்கும். ஒன்பது அடி இடைவெளியில் ‘பவர்டில்லர்’ வைத்து களை எடுக்கலாம். ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். முடிந்த வரைக்கும் இயற்கை முறையில் செய்வதால் ஒவ்வொரு செடிக்கும் அறுபது நாட்களுக்கு ஒரு முறை 50 கிராம் கடலைப் புண்ணாக்கு அல்லது ஆமணக்குப் புண்ணாக்கு, இலுப்பைப் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றில் எது எளிதாக கிடைக்குமோ அதை உபயோகிக்கலாம். எறும்புகள் இட்லிப் பூ வின் தேன் போன்ற திரவத்தை உண்பதால் பூ வின் அடிப்பக்கம் கருப்பு நிறத்திற்கு மாறிவிடும். இதை தடுக்க 50 கிராம் நனையும் கந்தகம், 60 மில்லி மோனோ குரோட்டபாஸ் இவ்விரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும். செடியின் உயரம் அதிகமாக வளராமல் தடுக்க நுனியைக் கவாத்து செய்தல் வேண்டும்.
50 - 80 சதவிகிதம் மலர்ந்த பூக்களைப் பறித்து சந்தைக்கு அனுப்பலாம்.பூக்கள் பெரியதாக இருப்பதால் அதிக எடை கிடைக்கும். நடவு செய்த ஆறாவது மாததிலிருந்தே ஒவ்வொரு வாரமும் ஆறு முதல் எட்டு கிலோ வரை பூ கிடைக்கும். பண்ணிரண்டாவது மாதத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதே அளவு பூ கிடைக்கும்.
1கிலோவிற்கு குறைந்தபட்சமாக 30 ரூபாய் முதல் அதிகபட்சமாக 80 ரூபாய் வரை விலை கிடைக்கும். இங்கு விலையும் பூ க்களை சேலம் பூ வியாபாரிகள் பெற்று பெங்களுருக்கு அனுப்புகிறார்கள்.
இட்லிப் பூ வை பெண்கள் சூடிக்கொள்வதில்லை. அதன் காரணமாக இப்பூ வை மணவறை மேடை அலங்காரம், பொக்கே(மலர்ச் செண்டு), மாலை தொடுக்க போன்ற பிற உபயோகத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
சாகுபடி செய்வது எளிது ஆனால் சந்தை படுத்துதல் மிகவும் முக்கியம். எனவே இட்லிப் பூ சாகுபடியை தொடங்குவதற்கு முன் அப்பகுதியில் சந்தை வாய்ப்பினை அறிந்து சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்று திரு. சக்திவேல் அவர்கள் அறிவுருத்தினார்.
அறுபது சென்ட் நிலத்தில் இட்லிப் பூ சாகுபடி |
உழவு |
300 |
|
குப்பை ஏரு
(மூன்று டன்) |
3,000 |
|
செடி ரூ.4 * 1000 |
4,000 |
|
குழி எடுத்து நடவு செய்ய |
500 |
|
சொட்டுநீர் அமைக்க |
5,000 |
|
களை |
2,400 |
|
பவர் டில்லர் 1 மணி நேரம் |
500 |
|
கடலைப் புண்ணாக்கு |
900 |
|
பூ ச்சிக்கொல்லி |
400 |
|
மகசூல் 170 கிலோ
ரூ.50 * 170 கிலோ |
|
8,500 |
ஊடுபயிர் வரவு |
வெங்காயம் 3 மாதம் |
|
25,000 |
சாமந்திப் பூ 4 மாதம் |
|
7,000 |
மொத்தம் |
17,000 |
40,500 |
ஒரு வருடத்தில் கிடைக்கும் நிகர லாபம் |
|
23,500 |
மகசூல் கிடைக்க ஆரம்பித்த பிறகு முதல் ஆறு மாதங்களுக்கான கணக்கு இது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் அறுவடை என்பதால் அடுத்த ஆறு மாதங்களில் சராசரியாக சுமார் 700 கிலோ வரை பூ கிடைக்கும். இதன் மூலம் 35,000 ரூபாய் கிடைக்கும். ஆண்டுக்கு கணக்கிட்டால், 70,000 ரூபாய். இதுவே ஒரு ஏக்கருக்கு கணக்கிட்டால் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் கிடைக்கும். ஆரம்ப செலவுகள் அடுத்தடுத்த மகசூலுக்கு இல்லை என்பதால், லாபத்தின் அளவானது அதிகரிக்கவே செய்யும்.
தொடர்புக்கு : Dr.சக்திவேல்
மணிவிழுந்தான் காலனி,
ஆத்தூர் வட்டம்,
சேலம் மாவட்டம்.
அலைபேசி : 94865 - 96032
[ 1 2 3]
|
|